அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிர்ணய விலைக்கு அமைவாக அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நயிமுதீன் தெரிவித்துள்ளார்.
அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (25) பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பின்னர் கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சின் செயலாளர், அரிசி ஆலை உரிமையாளர்கள் 218 ரூபாவுக்கு நாட்டரிசியை சந்தைக்கு விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி நாட்டரிசியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணய விலை அறிவிக்கப்பட்டது.
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.