Home » இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருமா?
ஹமாஸ் தலைவர்களின் மரணம்

இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருமா?

by Damith Pushpika
October 20, 2024 6:26 am 0 comment

உலக ஒழுங்கு, கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் ஒரு நிலையான இடத்தை பெறமுடியவில்லை. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கிற்கு மாற்றீடாக இருதுருவ அரசியல் அல்லது பல்துருவ அரசியல் ஒழுங்குகள் சீரமைக்கப்படுவதாக அறிஞர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் உருவாகியுள்ளது. எனினும் உலக ஒழுங்கினை நிலையான கணிப்புகளுடன் தீர்மானிக்க முடிவதில்லை. சிறு போர்களாக ஆரம்பிக்கப்பட்ட போர்கள் யாவும், கற்பனைக்கு எட்டாத அளவில் முடிவிலியாக தொடர்கின்றது. ஏற்கனவே 2022இல் ஆரம்பிக்கப்பட்ட உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு போர் இரு வருடங்களை கடந்து பயணிக்கிறது. அவ்வாறே 2023இல் ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல்- – ஹமாஸ் போரும் எதிர்பார்க்காத வகையில் ஓராண்டுகளை கடந்துள்ளது. ஹமாஸ் தலைவர்கள், ஹமாஸ் ஆதரவுக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் ஹமாஸ் ஆதரவு ஈரான் இராணுவ தலைவர்கள் மீது இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு கொலை செய்துள்ள போதிலும், அமைதிக்கான வழித்தடம் மங்கலாகவே உள்ளது. இக்கட்டுரை இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஹமாஸின் தலைவராக வழிநடத்தியிருந்த யாஹ்ஹா சின்வாரின் மரணம், இப்போரின் போக்குகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17அன்று, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலிய படையினால் கொல்லப்பட்டர் என்ற செய்தி பரவியது. மறுநாள் அக்டேபார் 18அன்று, சின்வாரின் மரணத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அக்டோபர் 16அன்று, தல் அஸ்-சுல்-தான் ரபாவில் இடம்பெற்ற போரில் அவர் இறந்ததாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹமாஸின் அரசியல் குழு தலைவர்களான இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானிலும், மூத்த இராணுவ தளபதி முகமட் டெய்ப் காசாவிலும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சின்வார் காசாவில் ஹமாஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 22ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் இருந்து, 2011ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலை செய்யப்பட்டிருந்தார். காசா மீதான இஸ்ரேலிய போருக்கு ஹமாஸின் பதிலடி மற்றும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை சின்வாரே வழிநடத்தியதாக கூறப்படுகிறது. அல்ஜசீரா செய்தி தரவுகளின்படி, “கடந்த ஓராண்டில், இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் எஞ்சியிருந்த பகுதிகளை சமன் செய்து 42,000க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. அக்டோபர் 7, 2023அன்று 1,139 பேர் கொல்லப்பட்ட மற்றும் சுமார் 250 பேர் சிறைபிடிக்கப்பட்ட, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தலைமையிலான தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறி சின்வாரைக் கொல்ல இஸ்ரேல் முயற்சித்து வந்தது” எனக்குறிப்பிடப்படுகின்றது.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல்- ஹமாஸ் போரில் புதியதொரு திருப்பம் சர்வதேச அரசியல் பரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, காசா பகுதியில் ஹமாஸுடனான போரில் இஸ்ரேல் தரப்புக்கு இது ஒரு பெரிய வெற்றியாக மேற்கு ஊடகங்களில் புகழப்படுகின்றது. சின்வாரின் தலைவிதி, ஆரம்பத்திலிருந்து காசா பகுதியில் நடைபெறும் போரின் தலைவிதியுடன் பிணைந்ததாகவும், அவரது மரணத்தின் மூலம்; புதியதொரு சமாதான ஒப்பந்தத்திற்கான பாதை திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள். அக்டோபர் 18அன்று, பேர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “சின்வாரின் மரணம், நீதியின் ஒரு தருணம். ஹமாஸ் இல்லாத காசாவில் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பு” என்றும் கூறினார்.

மேலும், காசாவைப் பாதுகாப்பது மற்றும் போருக்குப் பிந்தைய திட்டமிடல், பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த போர்நிறுத்தப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கான முயற்சியைப் பற்றி விவாதிக்க, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கனை வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சின்வாரின் மரணத்திற்கு பின்னரான, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தலைவர்களின் அறிவிப்புகள், மேற்கின் தன்னார்வ எண்ணங்களை நிராகரிப்பதாகவே அமைகின்றது.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் மற்றும் சின்வாரின் துணைவர் கலீல் அல்-ஹயா, “சின்வாரின் இந்த இழப்பு ஆயுதக் குழுவுக்கோ அல்லது இஸ்ரேலுடனான அதன் போருக்கோ எதையும் மாற்றவில்லை” என்று தெரிவித்திருந்தார். மேலும், “நாங்கள் ஹமாஸின் பாதையைத் தொடர்கிறோம். கொல்லப்பட்ட தலைவரின் கனவு விழாது” என மிடுக்காக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தரப்பிலும் அமைதிக்கான ஒப்பந்தங்கள் சார்ந்து அக்கறையின்மையையே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அறிவிப்பு அடையாளப்படுத்துகின்றது. ஹமாஸ் சரணடைய மறுத்ததற்கு உந்து சக்தியாக சின்வார் கருதப்பட்டார்.

சின்வார் கொல்லப்பட்ட பிறகு, “ஹமாஸைத் தொடர இஸ்ரேலிய இராணுவத்தை தொடர்ந்து வழிநடத்துவேன்” என நெதன்யாகு தெளிவுபடுத்தினார்.

மேலும், “இது காசாவில் போரின் முடிவு அல்ல. இது முடிவின் ஆரம்பம்” எனவும் காணொளி செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அரசாங்கம், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், இஸ்ரேல்- – ஹமாஸ் போரினை முடிவுக்கு கொண்டு வருவதனூடாக அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது.

எனினும் போர்க்களத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இறுதி விளைவுகள் வரையில் போரை நகர்த்துவதற்கான ஆர்வத்துடன் செயற்படுவதையே, போர் நிலவரங்கள் உறுதி செய்கின்றது. ஹமாஸும் புதிய தலைவர் தெரிவை அறிவிப்பதில் மும்முரமாக உள்ளது. இஸ்ரேலிய செய்தி நிறுவனமான தி ஜெருசலேம் போஸ்ட், ஹமாஸின் அடுத்த தலைவர் யாஹ்யா சின்வாரின் சகோதரர் முகமது சின்வார் என்று பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.

இருப்பினும், ராய்ட்டர்ஸ் பின்னர் நிபுணர்களை மேற்கோள் காட்டி அல்-ஹயா அவரது வாரிசாக இருக்கலாம் என்று கூறியது.

அதே சமயம் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் போர் முயற்சிகளை இயக்குவதில் முகமது சின்வார் ஒரு பெரிய பங்கை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தலைமைக்கான தெரிவில் பலரது பெயர்களும் சுழலுகின்றது.

தற்போது ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளராக இருக்கும் அல்-ஹயாவைத் தவிர, மேலும் சில ஹமாஸ் தலைவர்களும் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பதவியேற்க உள்ளனர். இஸ்மாயில் ஹனியேஹ்வுக்கு முன்னர் போராளிக் குழுவை வழிநடத்திய முன்னாள் ஹமாஸ் தலைவர் காலித் மெஷால் போட்டியாளர்களில் ஒருவர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அவருடன், ஷுரா கவுன்சிலின் தற்போதைய தலைவரான முகமது தர்விசும் உள்ளார்.

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து ஏற்கனவே பல மூத்த தலைவர்களை ஹமாஸ் இழந்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ஹமாஸ் தலைவர் பதா ஷெரிப், ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தலைவர் அலி கராக்கி, ஹிஸ்புல்லாவின் மத்தியசபை துணைத்தலைவர் நபில் கௌக், ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவின் தலைவர் முகமது ஸ்ரூர், ஹிஸ்புல்லாவின் ஏவுகணை பிரிவின் தலைவர் இப்ராஹிம் குபைசி, ஹிஸ்புல்லா நடவடிக்கைகளின் தளபதி இப்ராஹிம் அகில் என ஏறத்தாழ 14 முக்கிய தலைவர்களை காசா போரின் ஓராண்டுகளில் ஹமாஸ் மற்றும் அதன் அணி இழந்துள்ளது.

இந்த வரிசையிலேயே ஹமாஸ் தலைவர் சின்வாரின் மரணமும் அவதானிக்கக்கூடியதாகும். இது ஹமாஸிற்கு சக்திவாய்ந்த அடியாகும். சின்வாரின் நீக்கம் ஒரு தலைமை வெற்றிடத்தையும் அதன் அணிகளில் அதிக குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என எடைபோடுகின்றார்கள்.

பல மூத்த தலைவர்களின் இழப்பு, புதியவர்கள் முன் அரங்குகளுக்கு வருவதற்கான வழியேற்படுத்தும். இது ஹமாஸிற்கான தோல்வியையே உறுதி செய்கின்றது. எனினும், இது அமைதிக்கான வழி ஏற்படுத்துமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது.

சின்வாரின் சாம்பலில் இருந்து என்ன வகையான ஹமாஸ் எழும்பும்? ஒருபுறம், ஹமாஸ் மற்றும் காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய பேரழிவு பிரசாரம், எதிர்காலத் தலைவர்களுக்கு மிகவும் வலிமையான, உறுதியான எதிரியை எதிர்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிய ஒரு பாடமாகும். ஹமாஸ் அதன் அமைப்பை மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் கட்டியெழுப்பவும் அதன் ஆதரவில் ஏற்பட்ட சரிவை மாற்றியமைக்கவும் அவ்வப்போது பயனடையும். மறுபுறம், எதிர்கால ஹமாஸ் தலைவர்கள் எதிர்ப்பை இரட்டிப்பாக்கலாம்.

சின்வாரின் தலைமையின் கீழ் ஹமாஸ் இஸ்ரேலை கடுமையாக தாக்கியது. பாலஸ்தீன பிரச்சினையை மீண்டும் அரசியல் வரைபடத்தில் வைத்து, இஸ்ரேலின் சர்வதேச நற்பெயரை சேதப்படுத்தியது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது இந்த வெற்றிகளை பின்னுக்குத் தள்ளக்கூடும். பல தலைவர்கள் மற்றும் போராளிகளின் இழப்பு மற்றும் பல பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பிற போராளிகளின் மரணத்திற்குப் பிறகு, அமைப்பு உறுப்பினர்களுக்கும் பழிவாங்கும் தாகம் உள்ளது. இது எந்தவொரு வகையிலும் போரின் தொடர்ச்சியையே உறுதி செய்கின்றது.

எனவே, மரணங்களும் குருதிகளும் யுத்தத்தின் பொதுவானது என்பதை ஓராண்டு நீடிக்கும் இஸ்ரேல்-–ஹமாஸ் போர் ஏற்றுக்கொண்டுள்ளமையையே களநிலவரங்கள் உறுதி செய்கின்றது.

போருக்கு வெளியே உள்ள மேற்கு நாடுகள், தமது அரசியல் நலன்களை இலக்கு வைத்து, சமாதானத்திற்கான அழைப்பை விடுக்கின்ற போதிலும், போர்க்களத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இறுதி விளைவை நோக்கி பயணிப்பதாகவே புலப்படுகின்றது.

தலைவர்களின் மரணங்களும், மக்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களும் சமாதானத்துக்கான அழைப்பை தீர்மானிக்கப்போவதில்லை என்பதையே சமகால நிலவரங்கள் உறுதி செய்கின்றது.

இருதரப்பும் இறுதிவிளைவில் அமைதியை காணும் முனைப்பிலேயே போரை நகர்த்தி செல்கின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division