மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி 2–1 என கைப்பற்றியது சாதாரண ஒன்றல்ல. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் முன்னர் போல் இல்லாதபோதும் அதன் டி20 அணி எப்போதுமே வலுவானது. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் டி20 தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி 3ஆம் இடத்தில் இருக்கும்போது இலங்கை 08 ஆவது இடத்திலேயே உள்ளது.
அத்தோடு டி20 கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர் ஒன்றை இலங்கை அணி வென்றது இது முதல் முறையாகும். எனவே இந்தத் தொடர் வெற்றி முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று.
இதற்கு இலங்கை அணியில் செய்த மாற்றங்களும் குறிப்பிடத்தக்கது. தொடரின் முதல் போட்டியில் தோற்றதற்கு என்ன அடுத்த இரு போட்டிகளிலும் அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் போட்டியில் தோற்றதை அடுத்து சுழற்பந்து சகலதுறை வீரர் துனித் வெள்ளாலகே தனது கன்னி டி20 போட்டியில் ஆட அணிக்கு அழைக்கப்பட்டது பெரும் திருப்பம் கொண்டது.
வெள்ளாலகே இரண்டாவது டி20 இல் 163 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதனால் அந்த அணி 89 ஓட்டங்களுக்கே சுருண்டது. மூன்றாது டி20 ஐ பொறுத்தவரை இலங்கை முழு ஆதிக்கம் செலுத்தியது. 163 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து அந்த வெற்றி இலக்கை எட்டியது.
குசல் மெண்டிஸுடன் குசல் பெரேராவின் ஆட்டம் டி20 கிரிக்கெட்டுக்கே உரியது. அதிலும் இருவரின் இணைப்பாட்டமே அணிக்கு இலகுவான வெற்றியைத் தேடித்தந்தது. தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தை விடவும் இணைப்பாட்டங்களே அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதற்கு இவர்களின் 106 ஓட்ட இணைப்பாட்டம் நல்ல உதாரணம்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி முக்கிய சில மாற்றங்களைச் செய்தே களமிறங்கியது. இதில் மத்திய பின்வரிசையில் பானுக்க ராஜபக்ஷவை இணைத்தது தீர்க்கமாக இருந்தது. இந்தத் தொடரில் அவருக்கு குறிப்பிடும் படியாக ஓட்டங்களைப் பெற வாய்ப்புக் கிடைக்காத போதும் அவர் அணியில் இருப்பது முன் வரிசையை பலப்படுத்தி இருப்பது தெரிகிறது.
பந்துவீச்சில் அதிக சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டது, இலங்கை ஆடுகளங்களுக்கு பொருத்தமாகவாகும். அணியில் விசேட சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனவுடன் மேலதிகமாக சரித் அசலங்க, கமிந்து மென்டிஸுடன் துனித் வெல்லாளகேவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதிக சுழற்பந்து வீச்சாளர்களில் தங்கி இருப்பது இலங்கைக்கு வெளியில் பெரும் குறையாக மாறுவதற்கு வாய்ப்பு இருந்தபோதும் சுழலுக்கு அமைய அணியைத் தேர்வு செய்வதேன்றால் இலங்கையின் சுழற்பந்து முகாம் வலுவாகவே உள்ளது.
அடுத்த டி20 உலகக் கிண்ணப் போட்டி 2026இல் இலங்கை மற்றும் இந்தியாவிலேயே நடைபெறப்போகிறது. எனவே, அதற்கு ஏற்ப அணியை தயார் செய்வதென்றால் இலங்கை அணியின் போக்கு சரியான பாதையில் உள்ளது.
இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய மற்றொரு வீரர் கமிந்த மெண்டிஸ். டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு சாதனை மேல் சாதனைகளைப் படைத்து வரும் அவர் டி20 கிரிக்கெட்டிலும் அதற்கு ஏற்பத தன்னை மாற்றிக்கொண்டு ஆடி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 இல் அவர் துடுப்பாட்டத்தில் 40 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சிலும் அவர் முக்கிய சந்தர்ப்பங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த உதவுகிறார்.
டி20 கிரிக்கெட்டியில் இலங்கையின் போக்கு சாதகமான பாதையிலேயே அமைந்திருக்கிறது. அதற்கு சனத் ஜயசூரியவின் பயிற்சி உத்திகளும் உதவி இருப்பது ரகசியம் அல்லது.
அடுத்து இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை ஒருநாள் தொடரில் எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (20) பல்லேகலவில் பகலிரவுக் போட்டியாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஒக்டோபர் 23 ஆம் திகதியும் மூன்றாவது ஆட்டம் 26 ஆம் திகதியும் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் பல்லேகலவிலேயே நடைபெறும்.
ஒருநாள் அரங்கில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இதுவரை 64 போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் இலங்கை அணி 30 போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் 31 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதுவே இலங்கை மண்ணில் இரு அணிகளும் சந்தித்தபோது மேற்கிந்திய தீவுகள் ஈடுகொடுத்து ஆடுவதற்கு தடுமாற்றம் கண்டிருக்கிறது. இலங்கை மண்ணில் இதுவரை ஆடிய 17 போட்டிகளில் இலங்கை அணி 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பதோடு மேற்கிந்திய தீவுகள் 3 போட்டிகளிலேயே வென்றது.
டி20 தொடரை வென்ற உற்சாகம் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணியில் பிரதிபலிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இலங்கை அணி கடந்த ஜூலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒன்றை 27 ஆண்டுகளின் பின்னர் வென்றது. தொடர்ந்து டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இங்கிலாந்து சென்ற இலங்கை அணி ஒரு தசாப்தத்தின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்றது.
இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையால் 2–0 என முழுமையாக வெல்ல முடிந்தது. இது 15 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக இருந்தது. இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கையால் முதல் முறை டி20 தொடர் ஒன்றை வெல்ல முடிந்திருக்கிறது.
இலங்கை அணியின் இந்தப் புதிய எழுச்சி ஒருநாள் தொடரிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ்.பிர்தெளஸ்