அடிலெய்டில் சீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற பின்னர் அவுஸ்திரேலியாவின் 2026 உலகக் கிண்ண கனவு உயிர்ப்பித்து இருக்கின்றது. மேலும் இந்த ஆட்டத்தில் ஜொலித்த நிஷான் வேலுப்பிள்ளை உலகரங்கில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்காக சர்வதேச கால்பந்து தொடரில் பங்கேற்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெருமையை நிஷான் வேலுப்பிள்ளை பெற்றுள்ளார்.
இந்த ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் நிஷான் வேலுப்பிள்ளை. பிஃபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் Socceroos (அவுஸ்திரேலிய ஆடவர்) அணிக்கு மிகவும் அவசியமான வெற்றியைத் தேடித்தந்தது தனக்கு மகிழ்ச்சி என நிஷான் கூறுகிறார்.
மேலும் இந்தப் போட்டி பற்றி அவர் கூறியதாவது, “நான் ‘ஐடோ’ (அணி வீரர் ஐடன் ஓ’நீல்) க்கு பெனால்டிக்கு மேல்முறையீடு செய்வதில் மும்முரமாக இருந்தேன், ஆனால் பந்து என்னிடம் விழுந்தது, நான் ‘சரி, அதை ஒரு ஸ்விங் செய்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்’ என்பது போல் இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, அது வலைக்குள் சென்றது, எல்லா சிறுவர்களும் என்னைச் சுற்றி வருவதைப் பார்ப்பது நன்றாக இருந்தது. மேலும் நாங்கள் ஒரு வெற்றியைப் பெற்றோம் என்பதும் மிகவும் நல்லது” என்றார்.
பிஃபா உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில், அணியின் முகாமையாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக், சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை சேர்த்தார்.
அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்துள்ளார்.
அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 எண் கொண்ட ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
போபோவிக், பந்தில் தனது சொந்த முடிவுகளை எடுக்க “சுதந்திரம்” கொடுத்தார், ஆனால் அவரது தற்காப்பு கட்டமைப்பில் “ஒழுக்கத்துடன்” இருக்க வேண்டும் என்று வேலுப்பிள்ளை கூறினார்.
23 வயதான வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட பெற்றோருக்கு மெல்பேர்னில் பிறந்தவர். சிறு வயதிலேயே கால்பந்தில் ஆர்வம் காட்டிய அவர் 2019 இல் மெல்பேர்ன் விக்டோரியா அணிக்காக தொழில்முறை வீரராக ஒப்பந்தமானார். அடிலெயிட் யுனைடட் அணிக்கு எதிராக 2021 இல் முதல் தொழில்முறை கோலை புகுத்தினார். அது தொடக்கம் அவரது கால்பந்து வாழ்வு ஏறுமுகம் கண்டது.