ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் காட்டில் மழை என்று தான் சொல்ல வேண்டும். பொதுத்தேர்தல் அறிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரதான எதிர்க்கட்சியாகிய சஜித் பிரேமதாசாவின் கூட்டணியின் முக்கியமான வேட்பாளர்கள் சிலர் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார்கள். உட்கட்சிப்பூசல்கள் அப்பதவி விலகல்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அவ்வாறு விலகிக் கொண்டவர்கள் அதற்கான காரணங்களை பொது வெளியில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். கட்சித் தலைவரின் மோசமான நடவடிக்கைகளும் குடும்பச் செல்வாக்கும் கட்சி உறுப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அக்கட்சிக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் வேறு திசைநோக்கித்திரும்பும் நிலை அல்லது வாக்களர் வாக்களிக்காது விடும் நிலை உருவாகியுள்ளது. அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியிலும் இது சலசலப்பை ஏற்படுத்தலாம்.
தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில் அவை தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகரக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாது ஜனாதிபதித்தேர்தலில் ரணிலுக்கும் பிரேமதாசவுக்கும் வாக்களித்த பலரும் இப்போது தே.ம.ச நோக்கி நகர்ந்திருப்பது தெரிகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் இவ்வாறு மக்களின் வாக்குகள் மாறும் நிலை பிரகாசமாகவே தென்படுகிறது. இலங்கை நாட்டில் முடிசூடா மகாராசாவாக கருதப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டு இப்போ தான் தற்காலிகமாக ஓய்வு அறிவித்ததாகச் சொல்லுகிறார்.
புதவியில் இருந்த ஜனாதிபதி ரணில் தான் பதவி எதற்கும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். அது எவ்வளவு காலம் செல்லுபடியாகுமோ செல்லுமோ தெரியாது. மஹிந்த இளவல் தேர்தலில் போட்டியிடப் பயந்து தேசியப்பட்டியலில் வருகிறார். ராஜபக் ஷ சாம்ராஜ்ஜியத்தின் தூண்கள் எதுவும் இம்முறை போட்டியில் இல்லை. ஆக தேசிய கட்சிகள் பலவற்றின் பழைய முகங்கள் இம்முறை தேர்தல் களத்தில் இல்லை. ஆனால் அவர்கள் இப்போதைக்கு பம்முகிறார்கள் களநிலவரம் சாதகமான பின் மீண்டும் வருவார்கள். ஜோன்ஸ்டன் பெர்ன்னாண்டோவை காணவில்லை என சிஐடி தேடுகிறது.
பாராளுமன்றத்தில் தூங்குவதில் பேர்பெற்ற கிழவர்கள் ஊழல்வாதிகள் என்று பேரெடுத்தவர்கள் பலர் இம்முறை கிடையாது. பல புதுமுகங்கள் களம் வந்திருக்கிறார்கள். தமிழ் தேசியப்பரப்பிலே கட்சிகள் மத்தியிலும் புதுமுகங்கள் முளைத்திருக்கின்றன. பழைய பாக்கியராஜ் திரைப்படம் ஒன்றிலே அமாவாசைக்கும் ஒரு ஆசை வாத்தியாருக்கும் ஒரு ஆசை என்றொரு வசனம் வரும்.
இப்போ வாத்தியார்களுக்கும் பாராளுமன்ற ஆசை வந்துவிட்டது. தமது மாணவர்களைத் திரட்டி வைத்துக்கொண்டு பாராளுமன்றம் செல்ல ஆசைப்படுகிறார்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது பதவிகளைத் துறந்து விட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தாலும் உபவேந்தர் நினைத்தால் தேர்தலிலே அவர்கள் தோற்றால் அவர்கள் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை மீளப்பெற்று பதவியில் தொடரலாம் என்றொரு வாய்ப்புண்டு என்ற உள் வீட்டுத் தகவல் கசிந்துள்ளது.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன? அது மட்டுமல்ல வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள் என்று பலரும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் பாராளுமன்றம் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு தெளிவான பதில் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய என்று அலுத்துப்போன பதிலை தேய்ந்த இசைத்தட்டு மாதிரி திரும்பத்திரும்ப உச்சரித்தாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர ஏன் என்ற கேள்விக்கு உளச்சுத்தியுடனான விடை இல்லை.
பாராளுமன்றம் சென்றால் உழைக்கலாம் என்று எவராவது இனி நினைப்பார்களாயின் இப்போதே அவர்கள் போட்டியிலிருந்து விலகி விடுவது நல்லது. ஏனென்றால் அனுர குமார அரசாங்கம் அதற்கான வாய்ப்பை வழங்காது.
புதிய வேட்பாளர்களின் பெரும் எண்ணிக்கையிலான உட்பாய்ச்சல், பழையை தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் வயிற்றிலே புளியைக் கரைத்திருக்கிறது. அவர்கள் முகங்களிலே ஈயாடவில்லை. பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது.
மக்கள் தம்மைத் தெளிவாக மறுதலித்து விடுவார்களோ என்ற அவநம்பிக்கையும் சந்தேகமும். ஆனால் மக்களுக்கு வேலை செய்த ஒரு சிலர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் எந்த அலை வீசினாலும் மக்கள் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற துணிச்சலுடன். தே.ம.சக்தி, வடபுலத்திலும், கிழக்கிலும், மலையகத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் அதற்கு நல்ல செல்வாக்கும் இருக்கிறது. இந்த நிலை ஏற்கெனவே செல்வாக்கு மிக்க கட்சிகளின் வாக்கு வங்கியை கணிசமாகப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
இவ்வாறு தேசிய நீரோட்டக்’கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு தமிழ் தேசியவாத சிந்தனைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் அல்ல. இலங்கை சுதந்திரம் பெற்ற போது தேசிய நீரோட்டக் கட்சிகளுடனேயே தமிழ் முஸ்லிம் தலைவர்களும் இருந்தார்கள். இனரீதியான அரசியல் இந்த நாட்டிலே தானாகத் தோன்றிய ஒன்றல்ல.
ஒடுக்குமுறை புறக்கணிப்பு வன்முறை போன்றவற்றின் விளைவாகவே இனத்தை அடிப்டையாகக் கொண்ட கட்சிகள் உருவாகின. இப்போது அநுர அரசாங்கம் இலங்கையர்கள் அனைவரும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இன, மொழி, மத பேதமின்றி அனைவரும் சமமாக நோக்கப்படுவார்கள் என்று அறிவித்தாலும் அது நடைமுறையில் இடம் பெறுமா என்பதற்கான நம்பிக்கையான சமிக்ஞைகள் இதுவரையில் இல்லை.
மாறாக ஜே.வி.பியின் டில்வின் சில்வா தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை என்று தனியாக ஒன்றில்லை, பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே உள்ளது என்று ஒரு அலுத்துப்போன அரதப்பழசான ஒரு எரிச்சலூட்டும் செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஆகவே அதுவும் மக்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது. ஆகவே மக்கள் தங்கள் மண்டையில் உள்ள மூளை என்ற வஸ்துவை உபயோகிக்க வேண்டிய தேவை உள்ளதாக தேசியவாத சிந்தனை கொண்டவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.
ஆக அநுர குமாரவின் மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசம். ஆனால் இலங்கையின் வாக்காளர்கள் அப்படியே அள்ளித் தருவார்கள் என்று நம்ப முடியாது. 113 ஆசனங்களைப் பெற்றாலே அது மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படும். அதனை டில்வின் சில்வா போன்றவர்கள் தங்கள் எதிர்மறைக் கருத்துகள் மூலம் மழுங்கடிக்கக் கூடாது.