ஜனாதிபதித் தேர்தலில் அநுர அலையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட பின்னணியில் நடத்தப்படும் பொதுத்தேர்தலுக்கான களம் விறுவிறுப்படைந்து வருகின்றது. 225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் இந்தத் தேர்தலில் 8821 பேர் மொத்தமாகப் போட்டியிடுகின்றனர்.
பொதுத்தேர்தலுக்காக 786 வேட்புமனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டு அதில் 70 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேசியப் பட்டியல்கள் உள்ளடங்கலாக 5464 பேரும், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3354 பேரும் போட்டியிடுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
29 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மொத்தம் 469 பேரின் பெயர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாடு முழுவதிலும் மொத்தமாக 7452 பேர் போட்டியிட்டிருந்த நிலையில் இம்முறை தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 1,369 இனால் அதிகரித்துள்ளது.
அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டமாக கொழும்பு காணப்படுகின்றது. இதில் மொத்தமாக 966 பேர் போட்டியிடுவதுடன், கட்சிகள் சார்பில் 567 பேரும், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 399 பேரும் அடங்குகின்றனர். பதினெட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே இந்தளவு பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக 19 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் 528 பேரும், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 374 பேருமாக மொத்தம் 902 பேர் போட்டியிடுகின்றனர். ஐந்து ஆசனங்களைக் கொண்ட பொலன்னறுவை மாவட்டத்திலேயே ஆகக் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு அரசியல் கட்சிகள் சார்பில் 104 பேரும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 16 பேருமாக 120 பேர் போட்டியிடுகின்றனர்.
அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 28 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 2,041 பேர் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 396 பேரும், வன்னி மாவட்டத்தில் 423 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 392 பேரும், திகாமடுல்லை மாவட்டத்தில் 640 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 217 பேரும் போட்டியிடுகின்றனர்.
பொதுத்தேர்தல் களம் பல்வேறு கட்சிகளுக்கு சவாலைக் கொடுத்துள்ளது. பலர் தேர்தலில் குதிக்க ஆர்வம் காட்டியமையால் மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயார்படுத்துவது ஒரு சில கட்சிகளுக்குக் கடும் சிக்கலான காரியமாக அமைந்துவிட்டது. குறிப்பாக அநுர அலை இன்னும் தொடர்வதால் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிப்பதற்கு கடுமையான போட்டி நிகழ்ந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாகக் களத்தில் நின்று செயற்பட்ட பலரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினர். எனினும், முக்கியஸ்தர்கள் பலருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காமல் போய்விட்டது. தேசிய மக்கள் சக்தி கட்டுக்கோப்பான அரசியல் கலாசாரத்தைப் பின்பற்றி வருவதால் அதிலுள்ள வேட்பாளர்கள் மத்தியில் விருப்பு வாக்குகளுக்கான போட்டிகள் இல்லை. இதனால், வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காத சிலருக்கு அதிருப்தி காணப்பட்டாலும், அவர்கள் தாம் கொண்டுள்ள கொள்கையில் காணப்பட்டுள்ள பற்றுறுதி காரணமாக தொடர்ந்தும் தமது அமைப்பில் செயற்படுகின்றனர்.
இதற்கு அடுத்ததாக வேட்பாளர் பட்டியலால் சவாலை எதிர்கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியாக வரலாம் என எதிர்பார்க்கப்படும் கட்சி என்பதால் இதில் போட்டியிட விரும்புபவர்களின் கேள்வியும் அதிகமாகவே இருந்தது. இதனால் கட்சியின் பங்காளிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் விரக்தியடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகவிருக்கும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தலில் போட்டியிடுவதில்லையெனத் தீர்மானித்தது. சஜித்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி வாய்ப்பு வழங்காமையால் தேர்தலில் போட்டியிடுவதில்லையென அக்கட்சி தீர்மானித்தது. பங்காளிக் கட்சிகள் மாத்திரமன்றி, தமது கட்சியின் உறுப்பினர்களுக்கே ஐக்கிய மக்கள் சக்தி பாரபட்சமாக நடந்திருப்பது சினிமை நடிகை தமித்தாவின் விடயத்தில் பகிரங்கமானது.
பெயர் பெற்ற நடிகையான தமித்தா கடந்த அரகலய போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். பின்னர் தன்னை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து சஜித்துக்காகப் பணியாற்றியிருந்தார். அவரை இம்முறை கேகாலை மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்குவதற்கு இணங்கி அவர் வேட்புமனுவிலும் கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட தலைமை வேட்பாளர் ஹேஷா விதானகே காரணம் என தமித்தா குற்றஞ்சாட்டியிருந்தார்.
கட்சியின் தலைமைத்துவத்தைப் பிழையாக வழிநடத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இணைந்து செயற்படுவோம் எனக் கூறிய ஹேஷா விதானனே தனக்குத் துரோகம் இழைத்திருப்பதாகத் தெரிவித்து தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவொன்றையும் தமித்தா ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார். தனக்கும் தெரியாமல் இவ்விடயம் இடம்பெற்றிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருந்தார்.
தமித்தாவின் இந்தப் பரபரப்பு ஓய்வதற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் அமைப்பாளராகச் செயற்பட்ட தன்னை குறித்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த ஒருவரை அப்பதவிக்கு நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மான்னப்பெரும இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தார். வேட்புமனுவில் கைச்சாத்திட்ட பின்னர் கட்சியின் தலைமைத்துவம் தனக்கும் அறிவிக்காமல் இத்தீர்மானத்தை எடுத்ததாகவும், இதுபற்றிக் கலந்துரையாட சஜித் பிரேமதாசவை தொலைபேசியில பலமுறை தொடர்புகொண்டபோதும் முயற்சி பயனளிக்கவில்லையென்றும் மான்னப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தித் தெரிவித்திருந்தார்.
பிரச்சினைக்கு முகங்கொடுத்து தீர்வை வழங்க முடியாது ஒளிந்து ஓடும் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடாது விலகியிருக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், அஜித் மான்னப்பெரும கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவாக இருந்தாலும் ரணிலின் பக்கத்திலும் மற்றொரு காலை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருந்தார். இது மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திரவும் அறிவித்திருந்தார்.
பொதுத்தேர்தலில் முழுக் கவனத்தையும் செலுத்தும் நோக்கில் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்திற்கும் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கும் இடையிலான டீல் தொடர்பில் ஹிருணிகா அதிருப்தியடைந்திருந்தார் என்றும், ஹரின் பெர்னாண்டோவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஹிருணிகாவை நியமிக்காமல் தடுப்பதில் குறித்த தனியார் தொலைக்காட்சி செயற்பட்டமையால் அவர் அதிருப்தியடைந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுமாத்திரமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக இருந்த சிலரைத் விருப்பு வாக்குப் போட்டியில் தோல்வியடையச் செய்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் முயற்சிகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார நிபுணர் ஹர்ஷ.டி சில்வாவுக்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபோன்று மேலும் பலர் மீதும் கட்சியின் தலைமைத்துவம் அதிருப்தியடைந்திருப்பதாகவும், அவ்வாறானவர்கள் சிலர் கட்சியினாலேயே தோற்கடிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு வேட்பாளர்களுக்குப் போட்டியை எதிர்கொண்டுள்ள கட்சிகளுக்கு மத்தியில், அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறவில்லையென்றும், தற்காலிகமாக இளைப்பாறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ கடும் தோல்வியைச் சந்தித்த நிலையில், பொதுத்தேர்தலில் ஷசீந்திர ராஜபக்ஷ தவிர வேறெந்த ராஜபக்ஷக்களும் நேரடியாகப் போட்டியிடவில்லை. நாமல் ராஜபக்ஷவின் பெயர் மாத்திரம் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக நாட்டில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனமொன்று கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இதன் ஊடாக நாமலைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளீர்களா என மஹிந்தவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தான் தற்காலிகமாக இளைப்பாறுவதாகவும், அரசியல்வாதிகளுக்கு ஒய்வு என்பது கிடையாது என்றும் கூறியுள்ளார். இதனால் மீண்டும் மஹிந்த தீவிர அரசியலில் களமிறங்கப் போகின்றாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பி.ஹர்ஷன்