பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்தை விடக் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டைக்கான போட்டியில் தமிழ்க் கட்சிகள் முட்டிமோதத் தொடங்கியுள்ளன.
அண்மைக்கால அரசியல் வரலாற்றில் தமிழ்க் கட்சிகள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல், பல அணிகளாகப் பிரிந்துநின்று வாக்குக் கேட்கும் ஒரு தேசியத் தேர்தலாக இத்தேர்தல் அமைகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த ஆசனங்களில் இம்முறை ஒரு ஆசனம் குறைவடைந்திருக்கும் நிலையில், வாக்குக் கேட்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மை மற்றும் சுயநலத் தன்மை என்பவற்றின் வெளிப்பாடாகவே இந்தப் பிரிவுகளைப் பார்க்க முடிகின்றது. பொதுத்தேர்தல் என வரும்போது, வேட்பாளர் தெரிவின் காரணமாக கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுவது என்பது சாதாரண விடயம். பிரதான கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதில் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இது போன்று வேட்பாளர் தெரிவினால் பூசலைச் சந்தித்துள்ள கட்சியாகத் இலங்கைத் தமிழரசுக் கட்சி காணப்படுகின்றது.
பிளவுபட்டுள்ள வீடு:
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான தெரிவு விடயத்தில் ஆரம்பமான உட்கட்சிப் பூசல் பொதுத்தேர்தலில் பூதகரமாகி பிளவு நிலைக்குச் சென்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொள்வதில் சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. தமக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ள இரு தரப்பினரும் கட்சிக்குள்ளேயே பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
இதனால் தமிழரசுக் கட்சி இரு அணியாக உடைந்தது. கடும் போட்டியின் மத்தியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் வெற்றிபெற்றாலும், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இடம்பெற்ற தெரிவில் குளறுபடி நடந்தமையால், அனைத்துத் தெரிவுகளையும் இரத்துச் செய்வதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்தார்.
இதனால் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டாலும் அப்பதவியில் செயற்பட முடியாத நிலைக்கு சிறிதரன் தள்ளப்பட்டார். இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றபோதும், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க இணங்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இது கருத்து முரண்பாடு என்பதற்கு அப்பால் ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான முடிவுகளை எடுத்துக் கொண்டு செயற்பட்டனர் என்று கூறுவதே பொருத்தம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அரசியல் குழு தீர்மானித்ததாக சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தபோதும், ஆரம்பம் முதலே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை சிறிதரன் கொண்டிருந்தார். குறித்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத போதும், தனது நிலைப்பாட்டை எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
எனினும், சுமந்திரனின் அறிவிப்புப் பற்றியோ, கட்சி எடுத்த முடிவு பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை பொதுவெளிக்கு அம்பலப்படுத்தினார். கட்சி ரீதியான முடிவுகள் எட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மாவையும் அவருடைய மகனும் தனியாகச் சந்தித்திருந்தனர்.
மாவை சேனாதிராசா மாத்திரமன்றி தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் விநோனோகராதலிங்கம் ஆகியோரும் சந்தித்து ரணிலுக்கு ஆதரவு வழங்கினர். இதற்கும் அப்பால், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த மாவை சேனாதிராசா, கட்சியின் தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசவுக்கு முதலாவது விருப்பத் தெரிவையும், ரணிலுக்கு இரண்டாவது விருப்பத் தெரிவையும் வழங்கியுள்ளேன் எனக் கூறியிருந்தமை சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.
இவ்வாறு ஏற்கனவே பிளவுகளைக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியானது பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு விடயத்தில் முற்றாகச் சிதைவடைந்து விட்டது. ஏற்கனவே தலைமைத்துவத்துக்கு குறிவைத்திருந்த எம்.ஏ.சுமந்திரன், தனக்கு ஆதரவானவர்களையே வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் பலதரப்பில் இருந்தும் சுமத்தப்படுகின்றன.
இருந்தபோதும், சிறிதரனையும் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கியிருந்தார். சிறிதரனைத் தவிர ஏனைய அனைவரும் சுமந்திரனுக்கு ஆதரவானவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கிடையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாகவும், தனக்குப் பின்னர் தலைவராகச் செயற்படுமாறு சிறிதரனைக் கோருவதாகவும் மாவை சேனாதிராசா கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சிறிதரன் மாவை சேனாதிராசாவிடம் ஆசிபெற்றார். அதேநேரம், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின தலைவராக இருந்த சட்டத்தரணி தவராசாவும் வேட்பாளர் தெரிவில் அதிருப்தியடைந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு சுயேச்சையில் களமிறங்கியுள்ளனர்.
இவர்களும் மாவை சேனாதிராசாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பழம்பெரும் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசா கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் சென்றிருந்தால் தமிழரசுக் கட்சி பிரிவுகளைச் சந்தித்திருக்காது. அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட காலத்திலும் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகளாலேயே கூட்டமைப்பிலிருந்து பங்காளிக் கட்சிகள் விலகிச் சென்றிருந்தன.
அமரர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பை இழுத்துப்பிடித்து ஒற்றுமையாக்கி வைத்திருந்தபோதும், இறுதிக் காலத்தில் அவருடைய உடல்நிலை சீர்குலைந்ததும் தமிழ்க் கூட்டமைப்பின் ஒற்றுமையும் சீர்குலைந்து தற்பொழுது பல பிரிவுகளாகி தமிழரசுக் கட்சியும் பிளவுகளைச் சந்தித்துள்ளது.
பங்காளிக் கட்சிகள்:
தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகியவை தமிழரசுக் கட்சி தொடர்பில் அதிருப்தி கொண்டவையாக இருந்தன.
புலிகள் இயக்கத்தால் 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேற்குறிப்பிட்ட கட்சிகளுடன், அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் பங்காளியாக இருந்தது. யுத்தம் முடிவடைந்ததும் தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் முதலில் வெளியேறியது, அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது.
ரெலோ, புளொட் ஆகியவை கூட்டமைப்பாகச் செயற்பட்டாலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடத்தப்படவிருந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட முயற்சித்தமையால் ஏனைய கட்சிகள் புதிய கூட்டணியொன்றை அமைத்தன. அதில் ஈ.பி.ஆர்.எல்.எப், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சி.வி.விக்னேஸ்வரன் எனப் பலரையும் ஒன்றிணைத்துக் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியினரே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரையும் களமிறக்கியிருந்தனர்.
இந்தக் குழுவினர் தற்பொழுது பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர். பொதுவேட்பாளருக்கு வழங்கப்பட்ட சங்கு சின்னத்தை அவர்கள் அபகரித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மத்தியில் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் ஒற்றுமையை சர்வதேசத்துக்குப் பறைச்சாற்றப் போகின்றோம் எனக் கூறிப் பொதுவேட்பாளரைக் களமிறக்கிய இத்தரப்பினர் சுயநலமாகச் செயற்பட்டு மக்களைப் பிழையாக வழிநடத்தி சங்கு சின்னத்தை அபகரித்து, தற்பொழுது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான மறைந்த ரவிராஜின் மனைவிக்கு தமிழரசுக் கட்சி போட்டியிட சந்தர்ப்பம் வழங்காத நிலையில், சங்கு சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியுடன் காணப்படும் பழைய கணக்கைத் தீர்க்கும் வகையில் இவர்கள் செயற்படுவது போட்டியான அரசியல் என்பதற்கு அப்பால் சுயநல அடிப்படையிலான அரசியல் என்றே கூற வேண்டும்.
பாராளுமன்றத்தைப் புறக்கணிக்காத கஜேந்திரர்கள்:
கடந்த ஜனாதிபதித் தேர்தலை முற்றாகப் புறக்கணித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுத்தேர்தலில் வழமை போல தனித்துப் போட்டியிடுகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிபெற்றும் தேசியப் பட்டியல் மூலம் மற்றுமொரு ஆசனமும் அவர்களுக்குக் கிடைத்தது. இம்முறையும் இரு கஜேந்திரர்களையும் முன்னிலைப்படுத்தி வாக்குக் கேட்கின்றனர்.
எதிர்ப்பு அரசியலை மாத்திரம் இவர்கள் முன்னெடுப்பதாக வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள், தேர்தல் காலத்தின் போது மாத்திரம் மக்களை உசுப்பேற்றும் அரசியலைச் செய்வதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆளுமை மிக்க அரசியல் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஆரம்ப காலகட்டங்களில் இரா.சம்பந்தனின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவராகத் திகழ்ந்தார். ஆனால் அவர் பின்னாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தார். அவரின் வெற்றிடத்திற்கே பின்னாளில் சுமந்திரன் பொருந்திக் கொண்டார்.
அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வராஜா கஜேந்திரன் கடந்த காலங்களில் ‘பொங்கு தமிழ்’ போன்ற இளைஞர்களை உருவேற்றும் செயற்பாடுகளாலேயே பாராளுமன்றம் சென்றவர் என்ற அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என அவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தீர்மானம் எடுத்திருந்தனர். எனினும், பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் களமிறங்கியிருப்பது சுயநல ரீதியான அரசியலாகவே பார்க்கப்படுகின்றது. இருந்தபோதும், மக்கள் அவர்கள் மீது எவ்வாறான நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகளை வைத்துத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் இவ்வாறு பலகூறாகப் பிரிந்து தேர்தலில் நிற்பதால் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவதற்கான அறிகுறியும் தென்படுகின்றது.