என் மக்களின்
உதிரத்தின் வேகம் அறிவாயோ
உணர்வுகளின் வீச்சு புரியுமா
அவர்களின் இந்த மலைகள் பற்றிய
பார்வையை உன் துருப்பிடித்த
புதிய மூளை அறியுமா?
அவர்களது சிரிப்பு கவலை
உழைப்பு ஏக்கம் என
அத்தனையையும் விற்று
தின்கிறாய் நீ!
இந்தத் தேசக்காற்றைத்
தோளில் போட்டுக்கொண்டு திரியும்
அவர்களின் நடையைப்
பற்றி அறிவாயோ நீ!
இந்த மலைகளிடையே
ஒரு சூரியப்பகலில்
நடந்திருப்பாயா?
ஒரு நள்ளிரவில் அதைக்
கடந்திருப்பாயா?
— கல்லையும் மண்ணையும் உருக்குலைத்து வடித்த
வியர்வையின் வாசனையை
நுகர்ந்து இருப்பாயா?
காப்புக்காய்த்திருக்கும் அவர்களது
கைகளையேனும் தொட்டு
இருப்பாயா?
கோடிப்பக்கத்தில் வீசும்
சிறுநீர் வீச்சத்தில்
மூச்சடக்கி வாழும்
வாழ்க்கையைப் பார்த்திருப்பாயா?
முருங்கை அல்லது
சவுக்குமரத்தடியில் அமர்ந்து
அவர்கள் பேசும்
கதைகளைக் கேட்டிருப்பாயா?
அந்திப் பொழுதுகளை
ரம்மியமாக்கும்
அந்தக் கதைகள்தான்
உனக்குப் புரியுமா?
ஓர் இரவாவது என் மக்கள் வாழும்
லயக் காம்பராவில்
உறங்கியிருப்பாயா நீ?
அங்கிருந்தே
நூற்றாண்டுகளைக் கடக்கும்
அவர்களது வாழ்க்கையை
எழுதுவாயா நீ?
அவர்களது துயரப்
பாடல்களைப் பாடுவாயா?
மலையை இடித்து
மண்ணை வடித்து
மரத்தை நாட்டிய
வரலாற்றை உன்னால்
பேச முடியுமா?
அவர்களை ஓடாத
நதிகளைப்போல
வைத்திருக்க நினைக்கிறாயே!
அவர்களிலிருந்து, அவர்
துயர் கேட்டு
கண்ணீர் முட்டி
உதிரம் கொதித்து
அவர்களது
விடுதலையைப்பாட
நான் தலைமையேற்கும் நாள்
தொலைவிலில்லை!