28
நிலையற்ற இன்பத்தில்
நெடுங்காலம் மூழ்கிவிட்டேன்
போதை தெளிந்தபின்னும்
புறப்பட மனமில்லை
தூசிக் காற்றும்
காய்ந்த சருகும்
பறவையின் எச்சமும்
படிந்தபோதிலும்
அந்நியமும் ஆணவமும்
அதிகாரத் திமிரும்
மானுடத்தை மறுதலிக்கும்
அராஜக தந்திரமும்
அடங்கவில்லை எனக்குள்
போதிமரத்தின் கீழ்
பொழுதெல்லாம் தூங்கியதால்
‘நான்’ எனும் நயவஞ்சகமே
விசுவரூபம் எடுத்தது
நீதி
நேர்மை
நேயம்
சமத்துவம்
எல்லாம் என்னை
உரத்த குரலில் அழைத்தபோதும்
காக்கையின் கூட்டை விட்டு
வெளியேற மறுக்கும்
குயில் மாதிரி
‘மரநிழலே எனக்கு
சொர்க்கம்’ என்றாயிற்று