உன் வருகையைத் தடுத்து
வேலி கட்டினாலும் – அதை
ஏணியாக்கி அதிலேறி
எட்டிப் பார்க்கின்றாய் !
அது எனக்கு ஏளனமாய் இருக்கிறது
பொறுமை இழந்து – உன்னை
பொறி வைத்து கொல்லவும் மனதில்
தைரியம் வருவதில்லை
முடிவில்லா நீ பண்ணும்
அட்டகாசங்கள் யுத்தம் பண்ணும்
போர் வீரனின் உத்திகளை விட
வித்தியாசமானதே !
என் ஆழ்ந்த உறக்கத்தை
அவதானித்து
சாமத்தில் சமையலறையில்
நீ பண்ணும் ஆதிக்கத்தை
அடிக்க முடியவில்லை
அதிலும் அதி உச்சமாய்
சேமித்து வைத்த என்
கவிதைகள் பிரசுரமான
பத்திரிகைகளை
பக்குவமாய் கிழித்து எடுத்து
உன் குஞ்சுகளுக்கு என் கவிதைகளில்
தொட்டில் பண்ணியதுதான்
பூனை புக இயலாத பொந்துகளில்
நீ இருந்தாலும் சமயத்தில்
பூனையிடம் பிடிபட்டு மரணித்தாலும் கூட
அர்த்தமில்லாமல் போர்களில்
செத்து மடியும் மனிதர்களை விட
உன் மரணம் ஒரு உயிரின்
உணவுக்காகவேனும்
உபயோகமாகிறது !
முற்பணம் முடிந்து – நான்
பெட்டி படுக்கையுடன்
வீட்டைக் காலிபண்ணி
புறப்படுகையில் உன்னை
பிரிதல் போல்
ஒரு நெருடல் நெஞ்சில் பட்டாலும்
இந்த வாடகை வீட்டில் – உன்
சொந்த வீடு என்பதை
புரிந்துகொண்டு
நான் பயணமாகிறேன்
இன்னோர் வாடகை வீட்டுக்கு…!