மும்பையிலிருந்து கொழும்புக்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதென விமான போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு 14.51 மணிக்கு வரவிருந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டலையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், விமானத்தின் கேப்டனுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்துஅநாமதேய தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.
இந்த அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
96 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களுடன் விமானம் 14.49 மணிக்கு விமான நிலையத்தில் நேற்று பத்திரமாக தரையிறங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து விரைவாக வெளியேற்றப்பட்டு பயணிகள் முனையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களுக்காக நிறுவப்பட்ட நிலையான நெறிமுறைகளைப் பின்பற்றியது மற்றும் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.