மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி இரட்டிப்பாக்கப்படவுள்ளது.
இதன்படி 9 தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியை இரட்டிப்பாக்குவது தொடர்பான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் இராஜதந்திர கடிதங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலக்கா ஜயசுந்தர ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தின் தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் அடங்குகின்றன.
இதன் மூலம் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைளை தரம் உயர்த்தும் திட்டத்துக்கு இந்தியா 600 மில்லியன் ரூபாவை வழங்கும்.
இலங்கையின் கல்வித்துறையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சிகளின் பட்டியலில் இந்தத் திட்டம் சேர்க்கப்படும். உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உபகரண விநியோகத்துக்கான உதவியை தவிர பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு என்பனவும் இவற்றில் அடங்கும்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் ரூபா பல்துறை நிதி உதவியின் கீழ் தோட்டப் பாடசலைகளுக்கான (STEM) Science, Technology,Engineering, and Mathematics அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடங்களில் 3 மாத ஆசிரியர் பயிற்சித் திட்டமும் அண்மையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.