உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இடமளிக்க வேண்டுமெனவும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் அதில் தலையிட வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிரதம ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல இரகசிய அறிக்கைகள் தன்னிடம் உள்ளதாகவும் புதிய அரசாங்கம் அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்தா விட்டால் ஏழு நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை வெளியிடுவதாகவும் முன்னாள் எம்.பி. உதய கம்மன்பில அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுவை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கத்தோலிக்க திருச்சபை ஒருபோதும் கோரவில்லையெனவும், முன்னாள் எம்.பி.
உதய கம்மன்பில வெளியிடவுள்ள அறிக்கையில் கத்தோலிக்க திருச்சபைக்கு எவ்வித அக்கறையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டாமெனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையை தொடர இடமளிக்குமாறும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் ஃபோ ஒளிபரப்பிய ஆவணப்படம் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூவர் அடங்கிய குழுவை நியமித்திருந்த போதிலும், அது தொடர்பான அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கை காணாமல் போயுள்ளதாகவும் சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.