யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நாளை திங்கட்கிழமை 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. நாளை மாலை கொழும்பு, கோட்டையிலிருந்து 6.30 மணிக்கு யாழ்தேவி ரயிலை இயக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மஹவ முதல் அநுராதபுரம் வரையான ரயில் பாதை திருத்தப்பணி நிறைவடைந்ததை அடுத்து நாளை முதல் வடக்கு பாதையில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தினகரன் வாரமஞ்சரியிடம் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் நாளை ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்குடன் நேற்று மஹவ முதல் அநுராதபுரம்வரை பரீட்சார்த்த ஓட்டம் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து ரயிலை எந்தளவு வேகத்தில் இயக்குவது என்பது தீர்மானிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹவ முதல் அநுராதபுரம்வரை சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் இயக்குவதற்கும் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறைக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இயக்க முடியுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதையில் சமிக்ஞை முறைமைகள் ஸ்தாபிக்கப்படாததன் காரணமாக பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மஹவ முதல் அநுராதபுரத்துக்குமிடையிலான ரயில் பாதையில் 7 ரயில் கடவைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பயணிகள் பஸ்கள் தொடர்ச்சியாக பயணிப்பதாகவும், மக்களும் தொடர்ந்து பயணிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடவைகள் முற்றிலும் பாதுகாப்பற்றவையென்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் முதற்கட்டமாக இந்த ரயிலை மணிக்கு 40 கி.மீ வேகத்தில் இயக்க ரயில்வே துறை எதிர்பார்த்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் ரயில்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்தப் பாதை புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.