எல்லாத்திசைகளிலிருந்தும் அநீதி இழைக்கப்பட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? அதுவும் மீள முடியாத பாதிப்பில் நீங்களிருக்கும்போது? ஆனால், அப்படியான அநீதியினால் தொடர்ந்தும் பலியிடப்படுகின்றனர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள். அவர்களுடைய கடந்த காலப்பாதிப்புகள் படைத்தரப்பு, இயக்கங்கள், கட்சிகள் எனப் பல தரப்புகளாலும் நடந்தவை. ஒவ்வொரு தரப்பும் அவர்களுடைய புதல்வர்களை அல்லது கணவர்களை அல்லது தந்தையர்களைக் காணாமலாக்கினார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் வஞ்சம். அல்லது அரசியல் அதிகாரப்போட்டியே.
அப்படிக் காணாமலாக்கப்பட்டோரைத் தேடி ஆண்டுக்கணக்காக அலையும் உறவுகளுக்கு இப்பொழுதும் அநீதி இழைக்கப்படுகிறது. இதற்கும் காரணம் வெட்கம் கெட்ட, மிக மோசமான அரசியல் அதிகாரமும் அரசியல் போட்டிகளுமேயாகும். இது எந்தளவுக்கும் கீழிறங்கச் செய்யும். அதுவே நடந்து கொண்டிருக்கிறது.
ஜெனீவாவில் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடர் நடக்கின்ற காலப்பகுதியில் தமது பிரச்சினைகளின் மீதான கவனத்தை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் காணமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தங்களுடைய இந்தப் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். அரசியல் கட்சிகள் அனைத்தையும் கூட பேதமின்றி அவர்கள் அழைத்திருந்தனர். தமக்கான நீதி கிடைப்பதற்கு அனைவருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதே அவர்களுடைய எண்ணம். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு.
ஏற்பாட்டின்படி போராட்டத்தை காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தின. அவர்களுக்கு ஆதரவாக சில தனி நபர்கள் இருந்தனர். அதற்கப்பால் இதை எந்த அரசியற் தரப்புகளும் திரும்பியும் பார்க்கவில்லை. கிளிநொச்சியில் மட்டும் சிறியதொரு ஊர்வலம் நடந்தது.
மற்றும்படி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரோ துயரமோ அலைச்சல்களோ யாருக்கும் பொருட்டல்ல. அவர்களும் அவர்களுடைய போராட்டமும் ஏறக்குறையக் கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகி விட்டன. ஆனால், முன்னர் நிலைமை வேறு. அப்போது ஏட்டிக்குப் போட்டியாக அரசியற் கட்சிகள் வந்து நின்று முகம் காட்டும். படம் பிடிக்கும். ஊடகங்களில் காட்சியளிக்கும். எல்லாமே அதிகாரத்துக்கான போட்டியே தவிர, மக்களின் துயரைத் துடைப்பதற்கானதாகவோ, அவர்களுக்கு ஆதரவாகவோ இருந்ததில்லை. அதாவது தமக்கான அரசியல் அதிகாரம். அதிகாரத்துக்கான போட்டி. அவ்வளவுதான்.
ஆகவே பாதிக்கப்பட்டோரின் கண்ணீரில் தமக்கான அரசியல் ஆதாயங்களைத் தேட முற்பட்டனர்.
ஆனால், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதிலெல்லாம் கவனமோ அக்கறையோ இல்லை. அவர்கள் தங்கள் உறவுகளை நினைத்துக் கதறிக் கொண்டிருந்தனர். தங்களுக்கு ஏற்பட்ட பிரிவுத் துயரை ஆற்ற முடியாமல் தவித்தனர். ஆண்டுக்கணக்காக அலைந்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஏன் இந்த உலகம் நீதி வழங்கத் தயங்குகிறது என்று கேட்டழுதனர். தங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை என்று ஆவேசத்தோடு கேட்டனர். இந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர். சிலர் நடக்க முடியாமல் அல்லாடினர். முதிய பெற்றோரும் பெண்களும் மிகச் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்குத் தங்களின் குரலை உயர்த்த முற்பட்டனர். உண்மையில் அது எவராலும் இலகுவில் தாங்கிக் கொள்ள முடியாதவொரு துன்பியல் கணம்.
அவர்களுடைய முழுக்கவனமும் தங்களுடைய நீதியைக் கோரும் குரல் உலக அரசியல் பரப்பில் ஒலிக்க வேணும். நீதி வழங்குவதற்கான செவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதாகவே இருந்தது – இருக்கிறது.
இதனால் அவர்களால் இந்த உள்ளுர் அரசியல் சதுரங்க வீரர்களைப் பற்றிபொருட்படுத்த முடியவில்லை. பதிலாக எல்லாத்தரப்பினரும் வந்து தமக்காக, தமது போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்றே நம்பினார்கள். அந்தவகையிலேயே அவர்கள் வந்த அனைவரையும் எந்தப் பேதங்களுமில்லாமல் வரவேற்றனர். இன்னும் அதற்குத் தயாராக உள்ளனர்.
இப்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பல புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒன்று, அவர்கள் இன்னும் இந்தப் பிரச்சினையை, இந்தப் போராட்டத்தை எவ்வளவு காலத்துக்கு நீடித்துச் செல்வது என்பது. அடுத்தது, அரசினால் உருவாக்கப்பட்டுள்ள ஓ.எம். பியில் முறையீட்டைச் செய்து – பதிவுகளைச் செய்து நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதா இல்லையா என்பது. இதற்கிடையில் நிறையப்பேர் இவ்வாறு முறைப்பாட்டை – பதிவைச் செய்து நிவாரணத்தைப் பெற்றுள்ளனர் என்று மாவட்டச் செயலக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
இதைப்பற்றியெல்லாம் தமிழ் அரசியற் தரப்புகள் எதுவும் சொல்வதில்லை. அவை கடந்த காலத்தில் தேங்கி விட்டதால் நிகழ்காலத்தைப் பற்றி அவற்றுக்கு எந்தச் சிரத்தையும் இல்லை.
ஆனாலும் ஒரு தரப்பினர் எங்களுக்கு உறவுகளே வேண்டும். ஓ.எம்.பி வேண்டாம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குரல் எழுப்புகின்றனர்.
இப்படி இரண்டு மாறுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அதிர்ச்சியும் குழப்பமும் உண்டாகிறது. அதிலும் பாதிக்கப்பட்டவர்கள் – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – ஓ.எம்.பி வேண்டாம் என்று சொல்லும்போது அதை மறுத்து இன்னொரு அணி ஓ.எம்.பி வேண்டும் என்றால்…!
இத்தகையதொரு குறித்த விடயத்தை மையப்படுத்திய போராட்டத்தில் எப்படி இரண்டு விதமான நிலைப்பாடு, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரண்டு விதமான குரல்கள் எழலாம்? ஜனநாயக அடிப்படை அதுவாக இருக்கலாம். அப்படி எழுமானால் அது அந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துமே தவிர, ஒருபோதும் அதனுடைய இலக்கை எட்டுவதற்கு உதவாது.
போராட்டத்தைத் திட்டமிடும்போது இதைக்குறித்து தெளிவானதொரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் போவது ஏன்? இந்த அடிப்படையில்தான் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்ற அறிவிப்போடு செய்யப்பட்டிருக்குமானால் மேற்படி குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
அல்லது போராட்டத்தைக் குழம்பும் விதமாக எதிர்ச்சக்திகளால் இவ்வாறு திட்டமிடப்பட்டுக் குழப்பங்கள் உண்டாக்கப்பட்டதாக இருக்குமானால், அதற்கெதிராகத் தமது கண்டனத்தைக் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வெளிப்படுத்த வேணும்.
எது எவ்வாறோ, பாதிக்கப்பட்டோரின் குரலே இங்கே முக்கியமானது. அவர்களே வலியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள். அவர்களே இழப்புகளைத் தாங்க முடியாமல் தாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அவர்களுக்கே நீதியும் நிவாரணமும் (நியாயமும்) வேண்டும். ஆகவே அவர்களுடைய குரலும் நிலைப்பாடுமே இங்கே முக்கியமானது.
அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள்? அவர்களுடைய சிந்தனை சரியானதா? அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமானதா? அது சாத்தியங்களை உண்டாக்கக் கூடியதா? அல்லது அவர்கள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்படுவார்களா? அப்படியென்றால் அவர்களுடைய சிந்தனையிலும் போராட்டத்திலும் யாராவது இடையீடுகளை செய்திருக்கிறார்களா? அப்படியென்றால் அவர்கள் யார்? அவர்கள் என்ன நோக்கத்திற்காக அப்படிச் செய்கிறார்கள்? என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும். அது இந்தப் போராட்டத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாங்கள் செய்கின்ற பேருதவியாக அமையும்.
ஓ.எம்.பி என்பது சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலின் அடிப்படையில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான ஒரு ஏற்பாடு. அது பிராந்திய ரீதியாக அமைக்கப்பட்டு இந்த விவகாரங்களைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எவ்வளவு தூரம் நற்சாத்தியங்களை அளிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் தேசிய மொழிகள் அமுலாக்கம், தேசிய ஒருமைப்பாடு, இன ஐக்கியம், பகைமறப்பு, மீளிணக்கம், நல்லிணக்கம் போன்ற கருத்து நிலைகளுக்கான ஏற்பாடுகளும் கட்டமைப்புகளும் இவ்வாறே உருவாக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயற்படவில்லை. அதாவது நம்பிக்கைக்குரியனவாக மாறவில்லை. எனவே அந்த அனுபவங்களில் அடிப்படையில் ஓ.எம்.பியையும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மறுதலிக்க முற்படுவதில் நியாயமுண்டு. செயற்படாத, பயன்தராத ஓ.எம்.பியை எதற்காக ஏற்க வேண்டும்? என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். ஆனாலும் இதைக்குறித்து ஒரு திறந்த உரையாடலின் மூலம் பொது முடிவொன்றை எட்டியபிறகு போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.
சரியோ தவறோ பாதிக்கப்பட்டோருடைய குரலையே முதன்மைப்படுத்த வேண்டும். இந்தப் பத்தியாளரைப்பொறுத்தவரையில் இந்தப்போராட்டத்தையும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசயத்தையும் அவர் வேறு விதமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்.
அவரைப்பொறுத்தவரையில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்துக்கு ஒரு நீதியான தீர்வு நியாயமான முறையில் முன்வைக்கப்பட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக உண்மைகள் பேசப்படவும் உண்மைகள் உணரப்படவும் வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் எவரையும் கண்டறியக் கூடிய சூழலும் சாத்தியங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இதை வெளிப்படையாகப் பேசுவதற்கு அரசும் தயாரில்லை. தமிழ்த்தலைமைகளும் தயாரில்லை. ஊடகங்களும் தயாரில்லை. சமூகத்திலுள்ள எவரும் தயாரில்லை. இது முதல் குற்றம். முதல் தோல்வி. முதல் அநீதி. உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டும் அதைச் சொல்லத் தயங்குவது அநீதியன்றி வேறென்ன? உண்மையைச் சொன்னால் அதையிட்டுத் தமது அரசியலுக்கான பாதிப்புகள் உண்டாகலாம் என்ற லாப நட்டக் கணக்கே அறிந்த உண்மையை மறைப்பதற்குக் காரணமாகும்.
அடுத்தது, அப்படி உண்மையைச் சொல்லிக் கொண்டு அடுத்த கட்டமாக இரண்டு விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளை அதற்குரிய அடிப்படைகளோடு ஆரம்பிப்பது. இரண்டாவது, பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பை அரசு வழங்குவது. இதை நோக்கி அரசாங்கத்தை வலியுறுத்துவதும் அழுத்தம் கொடுப்பதுமாகும். இதைப்பற்றி இந்தப் பத்தியாளர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக எழுதி விட்டார் என்பதை இங்கே நினைவூட்டுவதற்கு விரும்புகிறார். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இந்த விடயம் அணுகப்பட வேண்டும்.
அதுவே நற்சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கும். மற்றப்படி பாதிக்கப்பட்டோர் காலம் முழுவதும் வற்றாத கண்ணீரோடு வாழ நிர்ப்பந்திக்கப்படுவது கொடுமை. அவர்களுடைய கண்ணீரில் தங்களுடைய அரசியலுக்குத் தண்ணீர் வார்க்க முற்படுவது கொடுமையிலும் கொடுமையாகும். அது மாபெரும் அநீதி.
கருணாகரன்