சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த சமயற்கலை நிபுணர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக நம்நாட்டுத் தொழில் வான்மையாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தூதரகம் மேற்கொண்டு வருகின்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்களைக் கருத்திற்கொண்டு தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு நேரடியாகவும், நிகழ்நிலை வழியாகவும் கலந்து கொண்ட அதிகளவான பங்குபற்றுநர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு சந்திப்பாக அமைந்தது. இதன் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், தூதரகம் மேற்கொண்டு வருகின்ற சுற்றுலா மேம்பாட்டுச் செயற்திட்டத்தில் இலங்கையின் சமையற்கலைப் பண்பாட்டினூடாகப் பங்களிப்புச் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் விருந்தோம்பல் துறையில் வாண்மையுடைய இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவது தொடர்பிலும் தூதரகத்திற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார். அத்துடன் தூதுவர் அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்ற சமையற்கலை நிபுணர்களை மேலும் வலுப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார். மேற்படி நிகழ்ச்சியின் போது சவுதி அரேபியாவில் வாழ்கின்ற ஓர் இலங்கை முயற்சியாண்மையாளராகிய திருமதி கீதானி பத்மினியால் தயாரிக்கப்பட்டதும் “ஸன்சைன்” என்று பெயரிடப்பட்டதுமான ஒரு மூலிகைப் பானம் தூதுவரு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இலங்கைத் தூதரகம் – ரியாத்