1998 ஒக்டோபர் 20ஆம் திகதி இலங்கையில் தொடங்கப்பட்ட முதல் தனியார் தமிழ் தொலைக்காட்சி என்ற பெருமையைக் ெகாண்ட சக்தி தொலைக்காட்சி, கடந்த 26 ஆண்டுகளாக தமிழ் பேசும் சமூகத்திற்காக முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ் பேசும் மக்களின் கலாசாரத்தைப் பாதுகாத்து வளர்ப்பதில் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளது.
திறமைகளை ஊக்குவிக்கும் தேடல் நிகழ்ச்சிகள்
சக்தி தொலைக்காட்சி தன்னுடைய திறமைச் செயல்முறை நிகழ்ச்சிகளை வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் பேசும் பண்பாட்டினை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல முன்னோடி நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது. சக்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாட்டுப் பாடவா, இளைய கானம், ரேடியோ சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், ஜூனியர் சூப்பர் ஸ்டார், சக்தி இசை இளவரசர்கள், இசை மகாயுத்தம் மற்றும் சமீபத்தில் “சக்தி கிரவுன்” போன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் தமிழ் இசைத் தரத்தை உயர்த்தும் வகையில் பங்களிப்பு செய்து வருகின்றன. இதன் மூலம் இலங்கையின் தமிழ் இசைத்துறைக்கு பாரிய பங்களிப்பு செலுத்துவது மாத்திரமன்றி இதுவரை அதிகமான இசைத்தொகுப்புகள் மற்றும் காணொலித்தொகுப்புகள் வெளியிட்ட பெருமையும் சக்தி தொலைக்காட்சிக்கே உரித்தானதாகும்.
”ஓ போடு” என ஆடல் கலையை நேசிக்கும் மக்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட ஆடல் நிகழ்ச்சி பின்நாட்களில் பாரம்பரிய ஆடல் செழுமையை உள்ளீர்த்து பாரம்பரிய போட்டி நிகழ்ச்சியாக ”திமிதகதா” எனும் பெயரில் ஒளிபரப்பப்பட்டது. அவை பின்நாட்களில் நாட்டினது அனைத்து பாகங்களையும் இணைக்கும் நோக்கில் குழுப் போட்டி நிகழ்ச்சியாக “Shakthi Classical Dance star” எனும் பெயரில் இரு பருவங்களாக நடைபெற்றது.
இலங்கை மக்களிடையேயான பேச்சுவன்மையை பலப்படுத்தும் முகமாக “களம்” நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அவை பத்து பருவங்களாக பாடசாலை மாணவர்களின் விவாதத்திறனை சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் நிகழ்ச்சியாக வியாபித்திருந்தது. பின்னர் தமிழ் செழுமையை அதிகம் உள்ளீர்க்கும் முகமாக தமிழ் பேராசான்களின் வழிநடத்தலில் “சக்தி தமிழோசை” இரு பருவங்களாக விரிவடைந்தன.
மாணவர்களின் தகவலறிவு, சமயோசிதம் மற்றும் பேச்சுத்திறனை மேம்படுத்தும் நோக்கில் அதிக பொருட்செலவில் ”அறிவு”, பஞ்சதந்திரம், “The Debater”, “Econ Icon” போன்ற நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களை அறிவுடனும், அவதானத்துடனும் போட்டியிடவைத்து மிகப்பெரும் பணப்பரிசில்களை வழங்கி வெற்றியாளர்களாக ஆக்கும் மஹா லட்சாதிபதி, வெல்லலாம் வாங்க, “Grand Master” போன்ற நிகழ்ச்சிகளையும் சக்தி தொலைக்காட்சி திட்டமிட்டு வழங்கியது.
இலங்கையின் தனித்துவம் மிளிர வேண்டும் என்ற நோக்கம் சக்தி தொலைக்காட்சிக்கு ஆரம்பத்திலிருந்து இருந்ததனால் இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் மறைந்த மாபெரும் நடிகை மனோரம்மா மற்றும் நம் நாட்டின் மறைந்த கலை ஜாம்பவான்களான மரிக்கார் இராமதாஸ், உபாலி செல்வசேகரன் மற்றும் கலைஞர் சந்திரசேகரன் போன்றோரும் பங்குகொண்ட வா வாத்யாரே வா தொலைக்காட்சி நாடகத்துடன் சக்தியின் நம்மவர் படைப்பின் ஒளிபரப்பு ஆரம்பமாகி பின்னர் மீண்டும் மீண்டும் கோமாளிகள், நிஜத்தின் நிழல், சின்னத்திரை, சக்தி திரைக்கூடம் என இன்று வரையில் பல தொலைக்காட்சி நாடகங்களும் வெள்ளித்திரைப் படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நடிக நடிகைகள் மாத்திரமன்றி திரைப்படைப்புத்துறையின் பல திறமையானவர்களும் இனங்கானப்பட்டு இன்றுவரையிலும் தம் துறையில் பங்குகொள்கின்றனர்.சமய ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, சக்தி தொலைக்காட்சி பல சமய நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. அதில் பல இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் ரமழான் காலங்களில் ஒளிபரப்பப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் பேசும் மக்களுக்கு இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்த ஆழமான விபரங்களை வழங்கும் மின்னல் சமர், எதிரொலி, புதிய பாதை போன்ற நிகழ்ச்சிகளின் வழியாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு பாரிய பங்களிப்பையும் சக்தி தொலைக்காட்சி வழங்குகிறது .
மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம்
சக்தி தொலைக்காட்சி வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சுனாமி நிவாரணம் போன்ற பேரிடர் காலங்களில் ஆற்றிய உதவிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் தொடரப்படும் “கம்மத்த” எனும் மனித நேய செயற்திட்டம் பாதிக்கப்பட்ட மக்களின் துயரறிந்து செயற்படும் மிக உத்தமமான செயற்திட்டம் என்ற சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இவை தவிர்த்து சமூக விழுமியங்களுக்காய் அதிகம் சேவையாற்றும் மாமனிதர்களை இனம்கண்டு கௌரவப்படுத்தும் பல விருது வழகும் செயற்திட்டங்களையும் சக்தி தொலைக்காட்சியானது வழி நடத்தி வந்துள்ளது.
எதிர்காலத்திற்கான உறுதிமொழி
சக்தி தொலைக்காட்சி தனது 26ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நேரத்தில், இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்காக அவர்களின் கலாசாரத்தைப் பாதுகாக்கும் புதிய முயற்சிகளை, பூகோள மாற்றங்களை உள்வாங்கி தொடர்ந்து முன்னெடுக்க உறுதி பூண்டிருக்கிறது.
ஹசீம்