Home » வெற்றி தோல்வியில் மக்களின் மனநிலை என்ன?
காங்கிரஸ் – பா.ஜ.க

வெற்றி தோல்வியில் மக்களின் மனநிலை என்ன?

by Damith Pushpika
October 13, 2024 6:06 am 0 comment

இந்திய அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகிய ஹரியான, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் பா.ஜ.கவும். ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற தேர்தலுக்கு முந்திய எதிர்பார்ப்பின்படி மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஜம்மு – காஸ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும். கடந்த 2019ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு – காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்டதற்கான முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும் அதன் முடிவுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இங்கு காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் பா.ஜ.க, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டிருந்தன மொத்தம் 873 வேட்பாளர்கள்.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கூட்டணி 49 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் தேசிய மாநாட்டுக்கட்சி 42 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு நான்கு இடங்களே குறைவாகும். தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் (புத் காம், கந்தர் பால்) வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் 6 இடங்களிலும் மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வென்றுள்ளன.

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பத்து வருடமாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை ஹைரியானா மக்கள் நிராகரித்து விட்டார்கள். மக்களை ஜாதி, மத ரீதியாகப் பிரித்து தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சித்து வந்தது. ஆனால், கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களும் கொள்கைகளும் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தியின் செயல்பாட்டின் மீதும், அவரது பேச்சிலும் இருந்த தெளிவும் அணுகுமுறையும் இனி இந்தியாவின் எதிர்காலம் ராகுல் காந்தி தலைமையில் தான் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் ஹரியானா தேர்தல் முடிவு அந்த நம்பிக்கையை பொய்யாக்கிவிடுமோ ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் ஹரியானா தேர்தலில் காங்கிரஸின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது.

ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ் 37 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளது. அபய் சிங் சௌதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 இடங்களிலும் சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 90 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

காங்கிரஸின் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லை, வேட்பாளர்கள் தேர்வில் சரியானவர்களை தேர்வு செய்யவில்லை. பரப்புரையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 37 தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாங்களித்துள்ளதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்ற படிப்பினையையும் கொடுத்திருக்கிறது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆராய்ந்து இனி வரும் தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா அறிவுறுத்தியுள்ளதையும் காங்கிரஸ் பரிசீலனை செய்ய வேண்டும்.

மக்களவையில் காங்கிரசின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பிறகு

அக்கட்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன, ஆனால், ஹரியானாவில் அந்த எதிர்பார்ப்புகளை ராகுல் காந்தியால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசியல் ஒரு தேர்தலில் தோல்வி என்பது முடிவல்ல, அது புதிய தொடக்கம்.

காங்கிரஸ் வலுப்பெற்றுவிட்டது, என்ற எண்ணம் இப்போது தகர்ந்து விட்டது. நேரடிப் போட்டியில் பா.ஜ.கவுக்கு முன்னால் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக மக்கள் மீண்டும் கூறத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் மகராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த பிம்பம் மேம்படும் என்று மூத்த பத்திரிகையாளர் வினோத் ஷர்மா கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஜம்மு – காஷ்மிர் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கு முழுையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. காங்கிரசுக்கு வலுவான பிடி உள்ள ஜம்மு பிராந்தியத்தில் அக்கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணம் காங்கிரசின் மோசமான செயல்பாடே என்று விமர்சிக்கப்படுகிறது.

தவறான வேட்பாளர்களின் தேர்வு. அல்லது ஆட்சிக்கு எதிரான அலைமீது கவனம் செலுத்தாதது, வெற்றி வாய்ப்பிருந்தும் அதைச் சரியாக பயன்படுத்தத் தவறியது என்று இவையனைத்தும் காங்கிரசின் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்பது கருத்தாக இருந்தாலும், முழுப்பழியையும் ராகுல் காந்தி மீது சுமத்த முடியாது, என்று பத்திரிகையாளர் பஸீன் கூறியிருப்பதும், நியாமாக இருக்கிறது.

காங்கிரசில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை முழுமையாக ராகுல் காந்தி மீதே சுமத்த முடியாது. அவர் கட்சியை வழிநடத்துகிறார். அவர் ஒரு நட்சத்திர பிரசாரகரும் கூட. எனவே அவர் இல்லாத இடங்களில், அந்தந்த மாநில கட்சியின் பொறுப்பாளர்களே கட்சியை பலப்படுத்தி, மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எல்லா தோல்விகளுக்கும் ராகுல் காந்தி மீதே பழி போடுவதும் முறையல்ல.

ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க தோல்வியடைந்திருந்தாலும் அதன்வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது. 29 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. பா.ஜ.வின் மக்கள் விரோத கொள்கைகள், உரிமை மீறல், ஒடுக்குமுறை மற்றும் அரசியல் அமைப்புகளை தவறாகப் பயன்படுதல் என்று பா.ஜ.க மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் 29 இடங்களில் அக்கட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதும் முக்கியமானது.

ஹரியானா தோல்விக்குப் பிறகு கங்கிரஸ் மீதான இந்தியா கூட்டணியின் நம்பிக்கை குறையலாம். தனது சொந்த உள் முரண்பாடுகளால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. வெற்றி பெற வேண்டிய தேர்தலில் தோல்வியடைந்திருப்பது, இது காங்கிரசின் தன்னம்பிக்கையின் மீது கேள்விகளை எழுப்புகிறது. இதனால் காங்கிரஸ் மீது இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையும் குறையும் என்று பத்திரிகையாளர் வினோத் ஷர்மாவின் கருத்தை காங்கிரஸ் உற்று நோக்க வேணடும்.

இங்கே எதுவும் நிலையானது இல்லை. அதுவும் அரசியலில் மக்களின் மன நிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வெற்றி யாருக்கு என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் வெற்றி பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டியது, கட்சிகளிடத்தில் இருக்கிறது. இந்திய அரசியல் காங்கிரஸ் – பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் மக்கள் சம அளவில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பதையே அண்மைக்கால தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division