இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சியும், ஹரியானாவில் பா.ஜ.கவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில் அதிக வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றதா? அல்லது பா.ஜ.க பலம் காட்டி இருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தற்போது நடைபெற்றுள்ள ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஹரியானாவில் வெற்றி பெற்று பா.ஜ.க மகத்தான சாதனை படைத்திருக்கிறது.
அதேநேரத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 48 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 37 இடங்களில் காங்கிரஸும், இந்திய தேசிய லோக் தளம் இரண்டு தொகுதிகளிலும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இதேபோல ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் ஆறு இடங்களிலும், பா.ஜ.க 29 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போல மக்கள் ஜனநாயக கட்சி மூன்று தொகுதிகளிலும், ஜம்மு – காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் எழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கவும் இந்தியா கூட்டணியும் சரிசமமாக அதாவது இரு மாநிலங்களில் தலா ஒரு மாநிலத்தில் வெற்றியை பெற்றிருக்கின்றன.
அதேநேரத்தில் ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. 38 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஆறு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் அதிக வெற்றிகளை பா.ஜ.கவே பெற்றிருக்கிறது.
ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க செயல்பட்டு வந்தது. ஆனால் இப்போதைய தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்த பா.ஜ.க தனித்து 29 தொகுதிகளில் வென்ற நிலையில், இந்தத் தேர்தல் அந்த கட்சிக்கு ஓரளவு வளர்ச்சி என்றுதான் கூறவேண்டியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், ‘இந்தியா’ கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
அதேவேளையில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 ஆவது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க செயற்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும்.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 46 இடங்களில் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு – காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிகளுடன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் 49 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க நம்பியது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையவில்லை.
ஆனால் ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க வளர்ச்சியடைந்துள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. அதாவது கடந்த 2014 இல் ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்தது. அப்போது ஜம்மு – காஷ்மீருக்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவின் கூட்டணி ஆட்சி ஜம்மு – காஷ்மீரில் இருந்தது. அதாவது மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 25 இடங்களில் வென்றது. இதையடுத்து இருகட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.
கடந்த முறை பா.ஜ.க 25 இடங்களில் வென்றது. அப்போது பா.ஜ.க வாங்கிய வாக்குகளின் சதவீதம் 22.98 ஆகும். அதேபோல் இப்போது வெளியான தேர்தல் முடிவில் தனிக்கட்சியாக பா.ஜ.கவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 29 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க 25.64 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இரண்டரை சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் 42 தொகுதிகளை வென்ற தேசிய மாநாட்டு கட்சியின் வாக்குகளின் சதவீதம் கூட பா.ஜ.கவை விட குறைவாகத்தான் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் பா.ஜ.க கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டரை சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. இது பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டும் வகையில் உள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒமர் அப்துல்லா தெரிவாகியுள்ளார். இதன் மூலம் ஜம்மு — காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் தெரிவாகியிருக்கிறார். 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் ஒமர் அப்துல்லா. இவரது பாட்டனார் ஷேக் அப்துல்லாதான் தேசிய மாநாட்டு கட்சியை தொடங்கியவர். மேலும் அவர்தான் ஜம்மு – காஷ்மீரில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். அவருக்கு பிறகு ஷேக் அப்துல்லாவின் மகனும், உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா தற்போது வரை கட்சியை வழிநடத்தி வருகிறார்.
எஸ்.சாரங்கன்