மலையக சமூக அரசியல் செயல்பாட்டாளரும் முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான (1971 – 1983) எச்.எச். விக்கிரமசிங்கவின் பவள விழாவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அரசியல் பீட உறுப்பினரும் பொதுச் செயலாளருமான லயனல் போபகே அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிய குறிப்புகள்.
1970களின் இறுதியில் ஆரம்பமான எங்கள் தொடர்பு, நீண்டகால இடைவெளியில் தோழராகவும் நண்பராகவும் நீடித்தது. உங்களின் முக்கால் நூற்றாண்டு வாழ்வு வியக்கத்தக்க நினைவுகளால் நிறைந்தது. உங்களின் 75ஆவது பிறந்த நாளையொட்டி எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கள் இளமை வாழ்வில் மிகப்பல. துயர் நிறைந்த பல தருணங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். எங்களின் மறக்கமுடியாத அரசியல் வாழ்வு ஜேவிபி யின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமானது. கொழும்பு 13, கே.சிறில் பெரேரா மாவத்தையில் அமைந்திருந்த வீரசிங்க மரக்காலையில் ஒரு சிறு அறையில் கூட்டு வாழ்க்கையாக அந்த வாழ்வு இருந்தது. முற்போக்கான அரசியலில் நாங்கள் அனைவரும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். நீதியானதும் நேர்மையானதுமான உன்னத இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றும், அங்குதான் சகல இனங்களும் இணக்கத்தோடு வாழமுடியும் என்றும் நாங்கள் நம்பியிருந்தோம். அந்தக்கனவு இன்னும் அடைந்துதீர வேண்டிய கனவாகவே இருக்கிறது. எங்களின் வாழ்நாளில் அந்தக்கனவை அடைவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
1970 தோழர் பிரின்ஸ் குணசேகரவும் ஏனைய தோழர்களும் முன்னின்று நடத்திய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்தின்போது, இயக்கத்தில் நீங்கள் இணைந்தீர்கள். வீரகேசரி பத்திரிகையில் மிக நீண்ட நேரம் வேலை பார்த்துவிட்டு, பின்னர் கட்சி அலுவலகத்திற்கு வந்து, அன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடிச் சென்ற நாட்கள் என் நினைவில் பசுமையாக உள்ளன. அக்காலத்தில் மாத்தளை செல்வா என்று நீங்கள் அழைக்கப்பட்டதையும், ஜேவிபி யின் செயற்பாடுகளுக்கு தமிழ்ப் பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து உதவியதையும் நான் அறிவேன். அங்கொடவில் கொகிலவத்தையில் அமைந்திருந்த ஜேவிபி யின் சக்தி அச்சகத்தில் ஊடகம் சார்ந்த பல வேலைகளுக்கு உதவியிருக்கிறீர்கள்.
ஜேவிபி நடத்திய ‘செஞ்சக்தி’ என்ற இயக்கத்தின் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ்க் கட்டுரைகளை ஒப்புநோக்கிப் பார்த்துத் திருத்தி உதவியிருக்கிறீர்கள். எனது ‘தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒரு மார்க்சிய ஆய்வு’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டுரையை நான் 1973 இல் மேகசின் சிறைச் சாலையில் இருந்தபோது எழுதியிருந்தேன். ஜேவிபி யின் முன்னணித்
தலைவர்கள் மாத்தளை செல்லும்போதெல்லாம், உங்கள் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, மறைந்த உங்கள் அன்னையின் விருந்தோம்பலில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.
கறுத்த ஜூலை இன சங்காரத்தினதும், 1983 ஜூலை மாதத்தில் ஜேவிபி இயக்கம் தடை செய்யப்பட்டதின் பின்னரும் நிலைமை முற்றாகவே மாறிவிட்டது. பல்வேறு காரணிகளால், குறிப்பாக 1983இன் நடுப்பகுதிக்குப்பின் இலங்கையின் தேசியப்பிரச்சினை பற்றி ஜேவிபி கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கெதிராக ஜேவிபியை விட்டு நான் விலக நேர்ந்தது. அதன் பின்னர் எங்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக எங்கள் எங்கள் வழிகளில் போராடவேண்டியதாயிற்று. இந்த ஆபத்தான வேளைகளில் கட்சித் தோழர்களுக்கு நீங்கள் தொடர்ந்து உதவிக் கொண்டிருந்தீர்கள். ராகம சோம, சோமவன்ச அமரசேகர போன்ற தோழர்களுக்கு நிதிஉதவியுடன் ஏனைய உதவிகளையும் செய்தீர்கள்.
பிலியந்தலையில் உள்ள பண்ணைக்குச் செல்ல வேண்டாம் என்ற உங்களின் ஆலோசனையைக் கேட்டிருந்தால், கேகாலையைச் சேர்ந்த தோழர் ரஞ்சிதம் குணரத்தினம், மாத்தளையைச் சேர்ந்த பெரியகருப்பையா தங்கராஜா போன்ற தோழர்களை நாம் இழந்திருக்கமாட்டோம். உங்கள் யோசனையைக் கேட்காமல், அங்கு சென்ற அந்தத் தினத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் தோழர் சோமவன்ச அமரசிங்கவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் உயிராபத்து காத்திருந்த வேளையில், அவர்களின் குடும்பம் பாதுகாப்பாக இந்தியா செல்வதற்கு, உங்கள் உயிரையும் பணயம் வைத்து நீங்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டீர்கள். இந்தியாவிற்கு அவர்களுடன் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறவும் தனிப்பட பேருதவி புரிந்தீர்கள். ஓர் இராணுவ கேப்டனின் உதவியுடன் அமரசிங்க கொச்சிக்கடை வரை சென்று, அங்கிருந்து அவர் படகினூடாகத் தமிழகத்தின் திருச்செந்தூர் சென்று சேர்ந்தார். அதேவேளை அமரசிங்கவின் மனைவியும் மகனும் பம்பாய்க்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து கேரளாவின் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தனர்.
அதேசமயம் நீங்கள் கட்டுநாயக்கவிலிருந்து விமானம் மூலம் இந்தியா சென்று, திருச்செந்தூரிலிருந்து அமரசிங்கவை திருவனந்த புரத்திற்குக் கூட்டிச்சென்று, அங்கு உங்களுக்குத் தெரிந்த ஒருவர்மூலம் வாடகைக்கு வீடு எடுத்துக்கொடுத்து, அமரசிங்க குடும்பத்தினரை அங்கு குடியமர்த்தினீர்கள். அங்கு சில காலம் அவர்கள் தங்கியிருந்து லண்டன் சென்றடைந்தனர். துபாயிலிருந்து தோழர் ரணசிங்க இந்தப்பிரயாணச் செலவுகளுக்கு உதவியிருந்தார்.
உங்களின் ஈடுபாட்டின் மீதான நம்பிக்கை, ஆளுமை, கைக்கொண்ட கொள்கையின் மீது நீங்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு என்பனவற்றிற்கு இது ஒரு குறிகாட்டி. 1980களின் இறுதிப்பகுதியில் நம்மிருவருக்கும் ஏற்பட்ட உயிராபத்துகளிலிருந்து நாம் தப்பித்திருக்கிறோம். 1990ஒக்டோபர் மாதத்தில் நீங்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 1992இல் நீங்கள் விடுதலை அடைந்தீர்கள்.
அந்த ஆபத்தான நாட்களின் பின், நாங்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க வேண்டியதாயிற்று. உங்களை எதிர்நோக்கியிருந்த கஷ்டங்களை வென்று, உங்களால் இயன்ற அளவு
உங்கள் சமூகத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நீங்கள் சமூகப்பணியாற்றி யிருக்கிறீர்கள்.
நீங்கள் என்மீது கொண்டிருந்த நன்னம்பிக்கைக்கு நான் பெரும் நன்றியுணர்வு கொண்டவனாயிருக்கிறேன். நாங்கள் யாருமே எந்த உதவியும் செய்துகொள்ள முடியாத நிலையில், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், நெருக்கடி மிகுந்த சூழலில் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நீங்கள் நம்பிக்கையுடன் என்னுடன் ஆலோசித்ததை நான் நினைவுகூர்கிறேன்.
1989இல் இலங்கையை விட்டு வெளியேறியபின், நான் இலங்கை வந்தபோதோ, அல்லது நீங்கள் அவுஸ்திரேலியா வந்தபோதோ நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளத் தவறியதில்லை. எங்கள் பிள்ளைகள் தொழில்துறைசார் வல்லுனர்களாக வளர்ந்து விட்டனர். சொந்தக் குடும்பங்களுடன் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வளமாக வாழ்வதைப் பார்க்க சந்தோஷமாயிருக்கிறது.
வாழ்க்கையில் எங்களின் அடிச்சுவடுகளை அவர்கள் பின்பற்றிச் செல்லவில்லை. அவ்வாறு அவர்கள் எங்களைப் பின்பற்றுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்தச் சிக்கலான உலகில் நின்று பிடிக்கவும், இணைந்து போகவும் அவர்கள் தயாராகி வருகிறார்கள். தங்களின் சொந்த வழிகளில், உன்னத உலகம் ஒன்றைக் கட்டிஎழுப்புவதில் அவர்கள் தங்களின் பணிகளை ஆற்றி வருகிறார்கள் என்பதை நாம் பாராட்டவேண்டும்.
எங்களின் தனிப்பட்டதும் அரசியல் சார்ந்ததுமான வாழ்வு, ஐந்து தசாப்தங்களை நெருங்கி விட்டது. அது எம் வாழ்நாள்வரை நீடிக்கும். எங்களின் நண்பர்களுக்கு வழங்கும் பிறந்தநாள் வாழ்த்துகளில் ஒரு பொதுத் தன்மை உண்டு. சமூக நீதி, நேர்மையான வாழ்வு என்ற பரந்த கருத்தாடல்களுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், எங்களின் வாழ்வில் நாங்கள் ஆற்றிய சமூகப்பணியினைப் பாராட்டும் பண்பே அது. நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நிம்மதியான, ஆக்கபூர்வமான வாழ்த்துகளையே ஆசித்திருக்கிறோம். ஆனால், நாம் தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். அவர்களது ஆளுமைக்கும் அரசியலுக்கும் ஏற்ப விஷேடமான குணாம்சங்களை அவர்கள் கொண்டிருக்கக்கூடும். நாங்கள் நேசிக்கும் நண்பர்களுக்கு நாங்கள் தெரிவிக்கும் நல்வாழ்த்துகள் மனதின் எதிரொலி மட்டுமல்ல, அவை உண்மையானதுமாகும்.
நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் செய்ய நினைக்கிற பணிகளில் எல்லாம் வெற்றி பெறவும், என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். எங்கள் வாழ்வில் எந்தக் கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டிருந்தபோதும், எங்கள் வாழ்விலும் சமூகத்திலும் எங்களின் உதவியை நாடி நின்றவர்களுக்கு அக்கறையோடு உதவ முனைந்திருக்கிறோம் என்பதை எங்களின் பேச்சிலும் செயலிலும் நாங்கள் நிரூபித்திருக்கிறோம்.
உங்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகாண என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீங்கள் அடைய நினைத்தவற்றை உங்கள் வாழ்நாளில் அடைவீர்கள் என்பது உறுதி.
கடந்து போன உங்களின் எழுபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை இனிய நினைவுகளால் பொலிவதாக! வாழ்க்கையில் இன்னும் அழகிய தருணங்கள் காத்திருக்கின்றன.
இனிய தோழனே! தங்களுக்கு பவள விழா நல்வாழ்த்துகள் உரியதாகுக!
லயனல் போப்பகே, அவுஸ்திரேலியா