2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சுமார் ஒரு மாதகாலமே எஞ்சியிருக்கும் நிலையில், இலங்கைப் பாராளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்த நிலையில், 690 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 74 வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் திகாமடுல்ல அதாவது அம்பாறை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான 64 குழுக்கள் போட்டியிடுகின்றன.
15 குழுக்களைக் கொண்ட ஆகக்குறைந்த குழுக்கள் போட்டியிடும் மாவட்டங்களாக பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் காணப்படுகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே இம்முறையும் பயன்படுத்தப்படவிருப்பதால், 225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பாரியதொரு திரும்புமுனையாக இதுவரை ஆட்சிக்கு வராததொரு கட்சியான ஜே.வி.பியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்துள்ள பின்னணியில், எதிர்கொள்ளப்படும் பொதுத்தேர்தலாக இது அமைந்துள்ளது.
இதுவரை பாரம்பரியமாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவையே மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்தன. இதில் விதிவிலக்காக அரசியல் பயணத்தைத் தொடங்கி குறுகிய காலத்திற்குள்ளேயே ஆட்சியைக் கைப்பற்றிய கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விளங்கியது.
இந்தக் கட்சி குறுகிய காலத்திற்குள் வெற்றி அடைந்ததைப் போல குறுகிய காலத்திற்குள்ளேயே மக்களால் நிராகரிக்கப்பட்டும் விட்டது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் பாரியதொரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் தாக்கம்:
அமைப்பு மாற்றம் அதாவது ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்ற அடிப்படையில் பலரும் இந்தத் தேர்தலை நோக்குவதால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்புகள் இத்தேர்தலில் அதிகம் இருப்பதாகத் தென்படுகின்றது.
இருந்தபோதும், இது அவர்களுக்கு இலகுவானதொரு இலக்காக அமைந்துவிடப் போவதில்லை. நடைமுறையில் எடுத்துக் கொண்டால் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால், பொதுத்தேர்தலிலும் அவருடைய கட்சி வெற்றிபெற்றாலேயே நாட்டில் சுமுகமான ஆட்சியைக் கொண்டுசெல்ல முடியும்.
பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை நாடு சந்தித்திருக்கும் இந்நிலையில், அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையற்ற அரசாங்கமொன்று மத்தியில் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்குச் சாதகமாக இருக்காது. எனவே, தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சிறந்த தீர்வாக அமையும்.
மாறாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானது பிறிதொரு கட்சியிடமும், ஜனாதிபதி வேறொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அது அதிகாரக் கயிறிழுப்பாகவே இருக்கும். இதற்கான அனுபவங்கள் எமது நாட்டில் முன்னர் இருந்துள்ளன.
2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருந்தபோது, ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்தார். இக்காலப் பகுதியில் ஏற்பட்ட இழுபறிகள் எமக்கு சிறந்த படிப்பினையை வழங்கியுள்ளன.
அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால், ஏற்கனவே பொருளாதாரத்தினால் பாதிக்கப்பட்ட நாடு இதனைத் தாங்கும் நிலையில் இல்லை. எனவே, தேசிய மக்கள் சக்தியினரே பாராளுமன்றத்தின் பெரும்பான்மையையும் பெற்றுக் கொள்வதே சுமுகமான நகர்வுக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.
இதற்கான வாய்ப்புகளும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பதாகவே தெரிகின்றது. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் பாரியதொரு மாற்றத்தை வேண்டி மக்கள் வாக்களித்திருப்பதுடன், புதிய ஜனாதிபதிக்கு நிர்வாகத்தை சீர்செய்ய காலஅவகாசமும், அதற்கான பாராளுமன்ற பெரும்பான்மையும் வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியை தேசிய மக்கள் சக்தியினர் மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல்வாதிகள் மத்தியில் அதிகளவில் நிலவுகின்றது. எனவே, மக்கள் மீதான நம்பிக்கையை வென்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை தேசிய மக்கள் சக்தியினர் முன்னெடுப்பதே உகந்ததாகும்.
இது அவர்களுக்கு இலகுவான விடயமாக இருந்துவிடப் போவதில்லை. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான போட்டியாளராக இருந்த சஜித் பிரேமதாச கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். அது மாத்திரமன்றி, அநுர குமார வெற்றிபெற்ற சில தொகுதிகளில் சஜித்திற்கும் அவருக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலேயே மீண்டும் போட்டியொன்று இருக்கப் போகின்றது. இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் களமும் பொதுத்தேர்தல் களமும் முற்றிலும் வேறுபட்டவை.
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான நபர்கள் பொதுவாகப் பார்க்கப்படுவர். எனினும், பொதுத்தேர்தல் என வரும்போது தமது மாவட்டத்தைச் சேர்ந்த, நன்கு அறியப்பட்டவர்கள் போட்டியிடுவதால், ஜனாதிபதித் தேர்தல் முடிவை மாத்திரம் வைத்துக் கொண்டு மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை கணித்துவிட முடியாது.
இதனால், பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையை அமைப்பது தேசிய மக்கள் சக்திக்கு அவ்வளவு இலகுவானதொன்றாக இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஒதுங்கிய அரசியல் பிரபலங்கள்:
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலானது கட்சிகளுக்கு சவாலானதாக அமைந்திருக்கும் அதேநேரம், தனிப்பட்ட ரீதியில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் சவாலானதாக அமைந்துவிட்டது எனலாம்.
இதுவரை அரசியலில் முக்கியமானவர்களாக இருந்த, குறிப்பாக பல தசாப்தங்களாக அரசியலில் இருந்த பலர் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டுள்ளனர். இதற்குப் பிரதான காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளேயாகும்.
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலுக்குப் பொருத்தமற்றவர்கள் என்றதொரு விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதனால் அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் வெறுக்கும் நிலைமை உருவாகியது.
இதன் பிரதிபலிப்பை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பார்க்க முடிந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் பலர் மீதும் மக்கள் வெறுப்பைக் காட்டியிருந்தனர். இந்த வெறுப்பின் காரணமாக ரணிலுக்கு அவர்களால் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அநுர அலையைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகளுக்குத் தம்மீதான மக்கள் செல்வாக்குக் குறித்த சந்தேகம் வலுத்துவிட்டது. இதற்கு சிறந்ததொரு உதாரணமாக ராஜபக்ஷ தரப்பின் செல்வாக்கு வீழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டவர் எனப் போற்றப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டம் தோல்வியைக் கொடுத்திருந்தது.
நாமல் போன்ற பல்வேறு சிரேஷ்ட தலைவர்களின் தொகுதிகள் படுதோல்வியைக் கொடுத்திருந்தன.
இதனை அடிப்படையாகக் கொண்டு பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிவிட்டனர்.
அத்துடன், கூட்டணிகள் அமைப்பதில் ஏற்பட்ட அதிருப்தி, உட்கட்சி முரண்பாடு எனப் பல்வேறு காரணங்களால் பலரும் விலகத் தீர்மானித்திருப்பதுடன், முக்கிய அரசியல் புள்ளிகள் பலரும் நேரடியாகப் போட்டியிடாது தேசியப் பட்டியலில் களமிறங்கியுள்ளனர். இது தோல்விப் பயமா அல்லது அரசியல் நகர்வா என்பது தெரியவில்லை.
குறிப்பாக கடந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த 50 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன், சிரேஷ்ட அரசியல்வாதிகளான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, விமல் வீரசன்ச எனப் பலரும் இம்முறை போட்டியிடவில்லை.
அதேநேரம், கூட்டணியுடனான முரண்பாடு காரணமாக இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லையென பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அக்கட்சி மீறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியே சம்பிக்க ரணவக்கவின் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. இதுபோன்று இம்முறை வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சிகளுக்குள் கடுமையான வெட்டுக்குத்துக்கள் இடம்பெற்றுள்ளன. புதிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக்குள் வேட்புமனுக்களைத் தயாரிப்பதில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் பல அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்திருப்பதுடன் பொதுவெளியில் கட்சித் தலைமைகளை விமர்சித்தும் உள்ளனர்.
புதியவர்களுக்கான வாய்ப்புகள்:
பழைய அரசியல்வாதிகள் பலரும் ஒதுங்கியிருப்பதால் புதியவர்களுக்கான வாய்ப்புகளைக் கொண்ட பொதுத்தேர்தலாக இது அமையப் போகின்றது.
தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தமானவர்களும் புதியவர்களாகவே இருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிலும் கணிசமான புதிய முகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகக் கூடியவர்களில் பல புதிய முகங்கள் இருக்கப் போவது உறுதியாகியுள்ளது.
புதிய அரசியல் கலாசாரத்துக்கு இப்புதியவர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.
புதிய முகங்களும் பழைய அரசியல் பாணியில் இறங்கிச் செயற்படுவார்களாக இருந்தால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு எவ்விதத்திலும் உதவியாக இருக்காது. இந்தக் களநிலைவரத்தைப் புரிந்துகொண்டு சரியான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து அனுப்பும் பொறுப்பு வாக்காளர்களிடமே உள்ளது.
பி.ஹர்ஷன்.