கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்கா தெரிவாகி பதவியேற்றுள்ளமை தொடர்பில் சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பேட்டி
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருப்பதை இந்து மதகுரு என்ற வகையில் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இறைவன் அருள் புரிந்து, இந்நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்ய அவருக்கு பலமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென முதலில் பிரார்த்னை செய்து இந்து மக்கள் சார்பாக ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் பாரம்பரிய அரசியலில் வெறுப்படைந்துள்ளனர். அதற்கு அண்மைக்காலமாக அதிகரித்திருந்த ஊழல் மோடிகளும், வீண்விரயங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் அடிப்படைக் காரணங்களாகும். அதனால் பெரும்பாலான மக்கள் கடந்த சில வருடங்களாக மாற்றத்தை வலியுறுத்தி வந்தனர். இப்பின்புலத்தில் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மக்கள் ஆணை வழங்கி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக்கியுள்ளனர். நாட்டில் மறுமலர்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட அவர் நிச்சயம் வழிவகுப்பார். அதற்கான நம்பிக்கை எனக்கும் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் உள்ளது.
ஊழல், மோசடிகள் அற்றதும் சிறந்த நிர்வாகத் திறன்மிக்க கட்டமைப்பைக் கொண்டதுமான நாடாக இந்நாடு மலர வேண்டும். அதுவே நாட்டின் அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும். அதனால் ஊழலற்ற அரச நிர்வாகத்தை உருவாக்கி மக்கள் மனத் திருப்தியடையும் வண்ணம் அரச கருமங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு முன்பாக உள்ளது. அத்தகைய நிர்வாகத்தை உருவாக்குவது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயமாக அமையும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்பாக மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பில் குறிப்பிடுவதாயின்?
பதில்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏழை மக்களின் மன உணர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் நன்கறிந்தவர். அதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் அவர்கள் சிறந்த முறையில் வாழ்வை முன்னெடுப்பதற்கு அவசியமான அடிப்படைத் தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்யவும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
குறிப்பாக நாட்டின் வறுமை ஒழிப்பு, மக்களின் சுபீட்சத்திற்கான சிறப்பம்சமாக அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் ஈடேறும்.
ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை தமிழ் மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்?
பதில்: ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் வட மாகாணத்திற்கான ஆளுநராக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த நாகலிங்கம் வேதநாயகன் என்பவரையும் மேல் மாகாணத்திற்கான ஆளுநராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹனீப் யூஸுப் என்பவரையும் நியமித்துள்ளார். அதேபோன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்திலும் இரு சமூகங்களையும் சேர்ந்த இருவரை இரு முக்கிய அமைச்சுகளுக்கு செயலாளர்களாக நியமித்துள்ளார். அத்தோடு பொதுத்தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மட்ட வேட்பாளர் பட்டியல்களிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய இடமளிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களை வெல்ல பக்கபலமாக அமையும். அதேநேரம் தமிழ் மக்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்கின்றனர்.
மாகாண சபையின் கருமங்கள் கிரமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். தங்கள் சமய, கலாசார விடயங்களை கடந்த காலங்களைப் போன்றல்லாது இடையூறுகள் இன்றி முன்னெடுக்க வசதி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். அத்தோடு வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வலிமையை அளிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம்.
வீட்டுத்திட்டங்கள், தொழில்வாய்ப்புகள், கைத்தொழில் முயற்சிகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். மேலும் வடக்கில் விவசாய மக்களின் பயிர்ச்செய்கை நிலங்களை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவை பெரும்பாலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இலங்கை மக்களை ஒருதாய் மக்களாக நோக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவரின் அறிவிப்பு, பார்வை எவ்வாறு அமையுமோ அதனையே ஜனாதிபதியின் அறிவிப்பு பிரதிபலிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ‘நாட்டின் சகல மக்களையும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாக நிச்சயமாக நோக்கி செயற்படுவேன். இன, மத பேதங்கள் இன்றி அனைவரையும் சம நோக்குடன் நோக்குவதோடு, ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உணர்வைக் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். இதற்கு தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதோடு, இந்நாடு இங்கு வாழும் எல்லா மக்களுக்கும் உரியது என்ற எண்ணத்தையும் கட்டியெழுப்புவேன். இது எங்கள் நாடு என மக்கள் பார்க்கும் நிலையை எனது பதவிக்காலத்துக்குள் உருவாக்குவேன். இதன் நிமித்தம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் இன்றியமையாத விடயமே இதுதான். அதனையே ஜனாதிபதி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் ஊடாக அவர் அனைத்து மக்களது நம்பிக்கையை வெல்வார் என உறுதிப்படக்கூறுகிறேன். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை நாட்டின் மீது உண்மையான பற்றையும் அன்பையும் கொண்டுள்ள மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
கேள்வி: ஒரிரு தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துள்ளனரே?
பதில்: அது அவர்களது கோரிக்கை. எவரும் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால் ஜனாதிபதி, நாட்டு மக்களின் எண்ணங்களை அறிந்து கொண்ட ஒருவர். அதனால் நாடு பிளவுபட இடமளிக்காமல் அந்தந்த மக்கள் மத்தியில் மனக்கிலேசங்கள் ஏற்படாத வகையில் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான தீர்வை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவரவர் தம் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை நிச்சயம் முன்னெடுப்பார் என்பதில் ஐயமில்லை. என்றாலும் அற்ப அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகக் கூட சமஷ்டி போன்ற கோரிக்கை முன்வைக்கப்படலாம். ஆனால் பிரிவினைவாதம் இல்லாத ஒற்றுமை வாதத்துடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போன்று வாழ்வதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
தமிழ் மக்களின் அரசியலில் முக்கிய பேசுபொருளாக விளங்கும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் குறித்து உங்களது கருத்து?
பதில்: அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பது மாகாண சபை முறைமையைக் கொண்டதாகும். அந்த முறைமையைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதென்று ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதனைப் பிரதமரும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் 13வது திருத்தம் கொண்டுள்ள மாகாண சபை முறை முன்னெடுக்கப்படுவது குறித்து ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதே?
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது அமரர் மாவோ பண்டாரநாயக்க காலத்தில் மிளகாய், உருளைக்கிழங்கு உற்பத்தி செய்து விவசாயிகள் பெரும் பணக்காரர்களாக மாறினார்கள். அன்று வடபகுதி நிலங்கள் பணப்பயிர்ச்செய்கை நிலங்களாக விளங்கின. அதன் ஊடாக வடபகுதி நாட்டின் விவசாயப் பொருளதாரத்திற்கு பாரிய பங்களிப்பை நல்கியது. வடபகுதி மக்களைப் போன்று சிங்கள மக்களும் விவசாயத்தில் முனைப்பானவர்கள். உறுதிப்பாடு மிக்கவர்கள். அதனால் ஜனாதிபதி விவசாயிகளுக்காக அறிவித்துள்ள திட்டங்களின் ஊடாக நாடு விவசாயத்தில் தன்னிறைவு அடையும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம்.
நிறைவாக நீங்கள் குறிப்பிட விரும்புவதென்ன?
பதில்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு யதார்த்தவாதி. இதனை அவரே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் மந்திரவாதியோ அல்லது மாயாஜாலம் காட்டுபவனோ அல்ல. உண்மைகளைக் கூறி உண்மையாகவே செயற்பட விரும்புபவன். உண்மையான பிரஜையாக வாழ விரும்புபவன். ஜனாதிபதி என்பதற்காக மகுடம் அணிந்து மன்னராகச் செயற்படப் போவதில்லை’ என்றுள்ளார் அவர். அதனால் இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுர நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைவார். அவரது பதவிக்காலம் நாட்டுக்கும் மக்களுக்கும் நிச்சயம் மறுமலர்ச்சியையும் கொண்டு வருவதோடு வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும். இதில் எவ்வித ஐயமும் இல்லை.
பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்