ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந்தொண்டாற்றிய படைப்பாளர்கள் பலரை ஈன்றெடுத்த பெருமை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமுனை மண்ணுக்கு உண்டு.
‘ஞானரை வென்றான்’ என்ற நூலைத் தந்து புகழ் பூத்திருந்த சின்னாலிமப்பா பிறந்த மண், ‘வெண்பாவில் நீ யென்னை வென்றாய்’ என்று புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையால் பாராட்டப்பட்ட புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் பிறந்த மண், அறுபதுகளில் இலக்கிய உலகில் பிரவேசித்து, ஈழத்தின் நவீன தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளர்களில் முன்வரிசையில் இடம் பிடித்திருந்த மருதூர்க் கொத்தன், மருதூர்க் கனி போன்றோர் பிறந்த மண், 14 தமிழ்க் காவியங்களைப் படைத்து ‘காப்பியக்கோ’ வாகப் பிரபலம் பெற்றிருக்கும் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பிறந்த மண், இப்போதும் நவீன தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குச் செலுத்துகின்ற பல படைப்பாளர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற மண்- மருதமுனை அம்மண்ணிலிருந்து அண்மையில் மலர்ந்திருக்கின்றது ‘மனதின் மாயம்’ என்ற புதுக் கவிதை நூல்.
அழகிய அட்டைப் படத்தோடு 232 பக்கங்களில் 100 கவிதைகளை உள்ளடக்கி நூல் விரிந்திருக்கின்றது. நூலின் ஆசிரியர் 1985இல் எழுத்துலகப் பிரவேசம் பெற்று, தொடர்ந்து எழுதி வருகின்ற எம்.ஏ. மாஹிறா.
மேடை நாடகக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பெயர் பதித்த மறைந்த ஐ.எல்.எம்.அமீரின் புதல்வியான அவர், ஹில்மா, கலீறா மருதமுனை மாஹிறா ஆகிய புனை பெயர்களிலும் எழுதி வருகின்றார். மாஹிறாவின் முதலாவது நூல் இது.
நூலுக்குத் தென்கிழக்குப் பல்கலைக் கழக வருகைதரு விரிவுரையாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் அணிந்துரையையும், கவிஞர் விஜிலி பின்அட்டைக் குறிப்பையும் எழுதியுள்ளனர்.
புதுக்கவிதை என்ற வடிவம் அளித்திருக்கின்ற கட்டுப்பாடுகளற்ற சுதந்திரப் போக்கைப் பற்றிப் பிடித்தவராக பல்வேறு பொருட்பரப்பிலும் வரிகளை வடிவமைக்கிறார் மாஹிறா. மனிதாபிமானம், சமூகம், அரசியல், சமத்துவம், மார்க்கம் என்பவை உட்பொதிந்த அவரின் படைப்புக்கள் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக, பெண் அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவிப்பவையாக, வாழ்வியல் விமர்சனங்களாக, ஏற்றத் தாழ்வகற்றும் போராட்டக் குரலாக, அன்னை- தந்தை பாசத்தை எடுத்தியம்பும் அன்புப் பிழிவாக பல்வேறு கோணங்களில் நூலில் விரிகிறது.
முதலாவது கவிதை “சுடுகாடு”.
பசுஞ் சோலையாக நினைத்திருந்த திருமண வாழ்க்கை பாலைவனமாக அமைந்து விட, வாழ்வில் நொந்துபோன ஒரு அபலையின் குமுறலாக கவிதை அமைகிறது.
பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் சில கணவர்களால், திருமணவாழ்வு சிதைக்கப்படுவதையும், வாழ்க்கை சுடுகாடாக மாற்றப்படுவதையும், பெண்களின் அவஸ்தைகளையும் கண்ணீர் வரிகளாய் வடிக்கிறார் மாஹிறா.
“ஒரு மண வாழ்க்கைக்காய்
எத்தனை கொடுமைகளைத் தான்
எல்லோரும் சுமப்பது?
கட்டிய கணவன் அறிவிலி என்றால்
இப்படித்தான் பலரது வாழ்வும்
முன்னால் போய் அழும் .
வாழ்க்கை ஒரு நரக நெருப்பு
என்று
அப்போது தான்
கண்டும் கொண்டேன்!
அடிமைச் சங்கிலி இங்கே
பலமாய்ப் பலருள்
இறுக்கிப் பூட்டப்படுகிறது
என் தன்னம்பிக்கையின்
முதுகெலும்பை
யாரோ உடைத்தும் விட்டார்கள்
அதனால் தான் நான் இன்னும்
கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறேன்
வாழ்வியலில் நிமிர முடியாமல்!
ஆயிரம் மகளிர் தினங்கள்
அகிலத்தில் அப்பப்போ வந்தாலும்
யாருக்கு என்ன பலன்?
அடிமைச் சங்கிலி பூட்டிய
அபலைகளின் வாழ்வென்றும்
வெறும் சுடுகாடுதான்..”
துயர்கவிந்த கவிவரிகளோடு ஆரம்பிக்கும் அவரின் நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவலச் சுவை தருபவை.
“நிஜம் வலிக்கிறது
எதிலும்.. கைக்கெட்டியும்
வாய்க் கெட்டா நிலை வரும்போது!
பொறுமை எல்லை மீறுகிறது
எதிர்பார்ப்புக்கள் பூச்சியங்களை
எட்டிவிட்ட கோபத்தில்
சுடும் நிஜங்களுக்குள்
சுருங்கிவிடும் நினைவுகள்
கலங்கி அழும் கற்பனைகள்
இவற்றுக்கெல்லாம்
காலம் தரும் தீர்ப்பு
கண்ணீர் என்று
கலங்கி அழுகிறது மனது!’
என்று
‘தன்னம்பிக்கை’ என்ற கவிதையில்
வரிகளை அடுக்கும் அவர்,
காலம் கரைகிறது ….
விதியெனும் பெயர் சொல்லி
முடிந்து தான் போய்விட்டது
வாழ்வியலில் அனைத்தும்!
ஏக்கமும் தாக்கமும்
தோல்விகளும் வலிகளும்
என்னை தாக்கி அழிக்க
முடிந்தவரை நானும்
முயற்சிகளைச் செய்கிறேன்
எல்லாவற்றிலும் தோற்று நிற்க
இதயம் கனக்கிறது
அழுகை வருகிறது
மரத்துத்தான் போகிறது மனது!
கண்ணீர்த் துளிக்கும் எனக்கும்
நெருக்கம் அதிகம்
என்னுள் விம்மி வெடிக்கும்
துயர்கள்! ”
என்று “நிம்மதி” கவிதையிலும் தோல்விகளை, இழப்புகளை, ஏக்கத்தைப் பதிவு செய்கிறார் அவர்.
“உன் விழிகளை மேய்ந்தவர்
உன் முதுகினில் குத்துவர்
உன் மொழிகளை மேய்ந்தவர்
உன்னை வார்த்தைகளால் கொல்வர்
உன் முன்னே சிரிப்பவர்
உன் பின்னே தூற்றுவர்
ஆக மொத்தத்தில்
மனிதா நீ அடுத்தவரோடு
எச்சரிக்கையாக இருத்தலே
எதற்கும் சிறப்பு”.
என்று ‘எச்சரிக்கை’ கவிதையில்
குறிப்பிட்டு அறிவுரை பகர்கிறார்.
“மாய உலகில் இளம் சமுதாயம்
இறந்து கொண்டிருக்கிறது
இழந்து போகும்
இளமையோடு
எல்லாமே தொலைந்து போக..!
மாற்றம் நிகழும் உலகில்
மாறியே போகட்டும்
மானிடர் வாழ்வு
போதை தொலைந்த சமூகமாய்
மாயை தெளிந்த மனங்களாய்!’
என்று ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்க விரும்புகிறார் மாஹிறா. அவரின் “போதை” என்ற கவிதையில்.
இவ்வாறு, அவரின் ஒவ்வொரு படைப்பும் உயர்ந்த எண்ணங்களிலான பொருளினைத் தருவதாக அமைந்திருக்கின்றன. ஆயினும், கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் அணிந்துரையில் குறிப்பிடுகின்றவாறு கவிதைகளனைத்தும் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட – குரல்வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதனால் அவை நீண்டனவாகவும், விபரிப்புக்களாகவும் சொல்லடுக்குகளாகவும் காணப்படுகின்றன.
‘பெருகிய உணர்வின் இறுகிய, இசையோட்டமான சித்திரச் சிறைப்பிடிப்பு- கவிதை’ என்பார் பாவலர் பஸீல் காரியப்பர்.
பெருகி வரும் உணர்வுகளைப் புதுக்கவிதை என்ற வடிவத்தினூடாக வெளிப்படுத்திவரும் மாஹிறா, வெளிப்பாட்டு முறையிலும் கரிசனை செலுத்தி இலக்கிய உலகில் பிரகாசிக்க வேண்டுமெனபதே நமது பிரார்த்தனையாகும்.
வாசிப்பு, தேடல், என்பவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற அவர், கவித்துவ நுட்பங்களைப் புரிந்து கொண்டு இறுக்கம், கவித்துவ அடர்த்தி, நேர்த்திமிக்க நல்ல பல கவிதை நூல்களை இன்னும் தர வேண்டும்.
அவருக்கு நமது வாழ்த்துகள்.
நூல்:- மனதின் மாயம்
நூலாசிரியர்:- எம்.ஏ. மாஹிறா
வெளியீடு:-ஹில்மா பதிப்பகம், 91, அல் ஹம்றா வீதி,மருதமுனை- 04.
விலை:- ரூபா 1000/.