தீவிரமான புற்றுநோயாளர்களுக்கும் நரம்பியல் தொடர்பான நோயாளர்களுக்கும் வழங்கவென வெறும் தண்ணீர் மட்டும் நிரப்பப்பட்ட 3,150 ஊசி மருந்து குப்பிகளை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொள்வனவு செய்வதற்காக 14 கோடியே 42 இலட்சத்து 93,356 ரூபாவை செலுத்தி பாரியளவில் மோசடி செய்தமை தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து ‘Rituximab’ என்ற பெயரில் லேபல் இடப்பட்ட இப்புற்றுநோய் தடுப்பு மருந்து, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டும் நோயாளிகளுக்கு எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சந்தேகம் கொண்ட தேசிய புற்றுநோய் நிறுவகம், மருந்து குப்பிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றுள் வெறும் தண்ணீர் மட்டுமே கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கான 2,250 தடுப்பூசிக் குப்பிகள், (National Medicines Regulatory Authority) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து 10,79,11,481 ரூபாவுக்கு (பத்து கோடியே எழுபத்தொன்பது இலட்சத்து பதினோராயிரத்து நானூற்று எண்பத்தொரு ரூபா) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தீவிரமான நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறி, ‘Human Immunoglobulin’ என்ற லேபல் இடப்பட்ட 900 தடுப்பூசி குப்பிகள் 03 கோடியே 63 இலட்சத்து 81ஆயிரத்து 875 ரூபாவுக்கு அவசரகால கொள்முதல் விலையில் பெறப்பட்டுள்ளன. அவை தேவைக்கு அதிகமாக இருந்தாலும் அந்த தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவலை முன்வைத்து இவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி குப்பிகளுக்குள்ளும் வெறும் தண்ணீர் மட்டுமே இருந்ததுடன் இவற்றுள் சில தடுப்பூசி குப்பிகளில் சேலைன் திரவம் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை இறக்குமதி செய்யப்பட்ட மருந்தாக கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், இவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.