தமிழ் மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கும் வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலின் சீரழிவு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. இதைப் பாராளுமன்றத் தேர்தல் மேலும் நிரூபணமாக்கியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு ஒவ்வொரு தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் தமக்குள் உச்சமான முறையில் மேலும் தந்திரங்களைச் செய்யத் தொடங்கி விட்டன. தேர்தலில் போட்டியிடுவதற்கும் வெற்றியடைவதற்குமாகத் தொடரும் குழிபறிப்புகள், அணிப் பிறழ்வுகள், அணி சேர்தல்கள், வெட்டியோடுதல்கள், அநீதியான வெளியேற்றங்கள், தேவையற்ற உட்புகுதல்கள் என ஒரு நீண்ட சீரழிவு வேலை நடந்து கொண்டிருக்கிறது.
இதில் எந்தக் கட்சியும் விலக்கல்ல.
இவை இவ்வளவு காலமும் சொல்லி வந்த ‘தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவதற்கான ஒற்றுமை, சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கான ஐக்கியம், தேசமாகத் திரள்வதற்கான கூட்டு’ என்பதெல்லாம் பச்சைப் பொய், சொன்னவை எல்லாமே காற்றிற் பறந்து விட்டன என்பதை இவற்றின் தற்போதைய நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலின்போது, ‘தமிழ் மக்களை ஒருங்கிணைத்து ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும். தேசமாகத் திரள்வதன் மூலமே தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த முடியும். தமிழர்களின் அரசியற் கோரிக்கையை வலிமையாக்க முடியும். சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் குன்றாத – தளராத அரசியலுணர்வை வெளிப்படுத்திக் காட்ட முடியும். அடுத்து வருகின்ற தேர்தல்களில் சிதைவுகள் ஏற்படாமல் இனத்துக்காகவும் கொள்கைக்காகவும் மக்கள் நிற்கக் கூடிய அரசியற் சூழலை உருவாக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லப்பட்டது.
இந்த நோக்கின் அடிப்படையில் தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு போன்ற திடீர் அமைப்புகள் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டன, அவை அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருப்பிக்கவும் பட்டன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல தமிழ்ப்பொது வேட்பாளராக அரியநேத்திரனும் நிறுத்தப்பட்டிருந்தார்.
இதையெல்லாம் நம்ப வைப்பதற்காகப் பெருமுயற்சி எடுக்கப்பட்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளும் பெறப்பட்டன. அதாவது இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்தக் கருத்தியலின் மீது நம்ப வைக்கப்பட்டனர்.
இப்பொழுது?
எல்லாமே தலைகீழாகி விட்டன. இந்தக் கட்சிகளைப் பற்றியும் அவற்றின் தலைமைகளைப் பற்றியும் இவை கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கருத்தியலின் மீதான பற்றுறுதி பற்றியும் தெளிவுள்ளவர்களுக்கு இதெல்லாம் எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது. அவர்கள் தொடர்ச்சியாக இந்தத் தமிழ்த்தேசியவாத நாடகத்தை விமர்சித்தே வந்திருக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலின்போதும் தங்கள் கருத்தையும் இது தவறான நிலைப்பாடு என்ற மறுப்பையும் பதிவு செய்திருந்தனர்.
ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கட்சிகளும் இந்தத் தலைமைகளும் பதவிப்போட்டிக்காகக் கீழ்மையாக நடக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால், தமிழ்த்தேசியவாதத்தைத் தமிழ்த்தேசியமென மனசார நம்புகின்ற மக்களுக்கு இது கவலைகளையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் சங்கதியே ஆகும். மட்டுமல்ல, தாம் நம்பியவர்களாலேயே ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வேதனையடைகிறார்கள்.
அந்த மக்கள் விரும்புகின்ற தமிழ் அரசியற் கூட்டு, தமிழ்த்தேசிய அணியின் பலம், தமிழ்த்தேசியத்துக்கான ஐக்கியம் போன்றனவற்றுக்கு எதிராக நடக்கின்ற காரியங்கள். அவர்களை வேறு என்னதான் செய்ய வைக்கும்? தமக்கு இழைக்கப்படுகின்ற அவமதிப்பும் நம்பிக்கை மோசடியும் இது என்று அவர்களிற் பலரும் வாய்விட்டுச் சொல்கின்றனர். பலர் இதைப்பற்றிச் சமூக வலைத்தளங்களில் எழுதியும் வருகிறார்கள். ஒரு தொகுதி மக்கள் இனிமேல் இவர்களை நம்பிப் பயனில்லை என்று வேறு முடிவுகளுக்குச் செல்கின்றனர்.
பெருந்தேசியத்தின் பின்னே தமிழ் மக்கள் திரண்டு விடக் கூடாது. அப்படித் திரண்டால் தமிழ் அரசியற் கோட்பாடு பலவீனப்படுத்தப்பட்டு, வீழ்ந்து செத்து விடும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக அந்தப் பெருந்தேசியத்தின் பக்கமாக மக்களைச் செல்லத் தூண்டிக் கொண்டிருப்பது இந்தத் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் தலைமைகளுமேயாகும்.
இதற்குக் காரணம், இவற்றின் எல்லையற்ற சுயநலமே. இது இரண்டு வகைப்படும். ஒன்று, கட்சிகளுடைய சுயநலாகும்;. தம்முடைய கட்சி மட்டும்தான் முன்னிலை பெற வேண்டும். அவையே வரலாற்றுச் சக்தியாகத் திகழ வேண்டும் என்ற சுயநலன். அதாவது அப்படியான அதிகார விருப்பு. அதற்காக ஏனைய கட்சிகளை உடைப்பது தொடக்கம் என்னென்ன விதமாகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு முயற்சிக்கின்றன. இதில் எந்தக் கண்ணியத்தையும் அவை பார்ப்பதில்லை. குறைந்த பட்ச நேர்மையைக் கூடப் பின்பற்ற முயற்சிப்பதில்லை.
அரசியல் என்பது போட்டிக் களம், அரசியலில் இந்த மாதிரியெல்லாம் நடக்கும். தந்திரமும் சாணக்கியமும் அதனுடைய அடிப்படை என்று சிலர் இதை வியாக்கியானப்படுத்தி, நியாயம் சொல்ல முயற்கிக்கிறார்கள். கீழ்மையான செயற்பாடுகளை எந்த அலங்காரங்களினாலும் மறைத்து விட முடியாது. அவை ஒருபோதும் கண்ணியமானவையாகியும் விடாது. பதிலாக எப்போதும் அவை கீழ்மையாகவே இருக்கும். விளைவுகளும் எதிர்நிலையானதாகவே அமையும். மட்டுமல்ல, என்னதான் தந்திரங்களைச் செய்தாலும் அவற்றினால் வெற்றிகளைப் பெற முடியாது. ஏனென்றால் சூதான காரியங்களுக்கு ஒரு போதுமே அரசியலில் நிரந்தர இடமோ மதிப்போ கிடைக்காது.
இரண்டாவது, தாம் மட்டும் எப்படியாவது வெற்றியடைந்து விட வேண்டும் என்ற அடிப்படையிலான தனிநலன். இது சொந்தக் கட்சிக்குள்ளும் நடக்கிறது. கட்சிக்கு வெளியில் தமிழ்த்தேசிய அடையாள அரசியற் பரப்பிலும் நடக்கிறது. இவற்றின் வெளிப்பாடே தற்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துகள்.
ஜனாதிபதித் தேர்தலின்போது சங்குச் சின்னத்தை முன்னிறுத்திய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பின் உடன்பாடின்றி, அதில் ஒரு பகுதியாகிய ஈ.பி.ஆர்.எல். எப். ரெலோ, புளொட் உள்ளிட்ட அணி சங்குச் சின்னத்தைக் கையகப்படுத்தித் தேர்தலில் நிற்கிறது. இந்தச் செயல் தவறு என்பதை அந்தத் தரப்பு ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஒற்றுமையை, தமிழ்த்தேசியத்தின் ஐக்கியத்தை, தேசத் திரட்சியையெல்லாம் வலியுறுத்திப் புனித – புதிய அரசியலுக்கு முன்மொழிவுகளைச் செய்த பொதுச் சபையினரும் அதில் அங்கத்துவம் கொண்டதாகச் சொல்லப்பட்ட 87 பேர் அல்லது 87 அமைப்புகளும் இதைக்குறித்துப் பகிரங்கமாக எதையும் சொல்ல முடியாதவர்களாகவே உள்ளனர். ஆனால், அவர்கள் கனத்த மௌனத்தைத் தொடர்ந்தும் பேணித் தப்ப முயற்சிக்காமல் இந்தத் தேர்தற்காலத்தில் தவறானவர்களையும் மோசடிக்காரர்களையும் இனங்காட்ட வேண்டும். அது இவர்களுடைய தார்மீகப் பொறுப்பாகும். இல்லையெனில் கீழ்மையாளரோடுதான் இவர்களையும் வரலாறு சேர்த்துப் பார்க்கும்.
இதேவேளை இந்தப் பொதுச் சபையிலும் பொதுக்கட்டமைப்பிலும் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவரான யதீந்திரா திருகோணமலை மாவட்டத்தில் புளொட்டின் பட்டியலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதைப்பற்றியும் பொதுச்சபையும் பொதுக்கட்டமைப்பும் இவற்றை ஆதரித்து நின்றோரும் பேச வேண்டும்.
இதொரு பக்கமென்றால், மறுபக்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நடக்கின்ற குத்துகளும் கூத்துகளுமாகும்.
தமிழரசுக் கட்சியின் உட்கொந்தளிப்புகள் பிரசித்தமானவை. வழமையாக அது எப்போதும் இரட்டை நிலைப்பாட்டின் ஒரு உத்தியாகக் கொண்டு செயற்பட்டு வந்தது.
இந்தத் தடவை அது சற்று வேறு வடிவத்தையும் வேறு பிரச்சினைகளையும் கொண்டு வந்துள்ளது. 2009 க்குப் பின்னான தமிழரசுக் கட்சியில் அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அரச ஆதரவினரும் இருந்தனர். அரச அல்லது சிங்கள எதிர்ப்பாளர்களும் இருந்தனர்.
அவ்வாறே விடுதலைப்புலிகளை ஆதரிப்போரும் அதற்குள்ளிருந்தனர். அதனை எதிர்ப்போரும் இருந்தனர்.
அண்மையில் கூட தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்போரும் இருந்தனர். அதை எதிர்ப்போரும் இருக்கின்றனர். இப்போதும் அதுதான் நிலைமை. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோரும் அதற்குள்ளிருக்கின்றனர்.
வீட்டுச் சின்னத்துக்கு எதிராக மாம்பழச்சின்னத்தில் போட்டியிடுவோரும் இருக்கின்றனர். இருதரப்புக்கும் ஆசீர்வாதம் வழங்கும் தலைவராக மாவை சேனாதிராஜாவும் இருக்கிறார்.
இதையிட்டெல்லாம் சனங்களுக்குக் குழப்பம் வந்தால் அதற்குத் தமிழரசுக் கட்சியோ, தமிழ்த்தேசியவாதமோ பொறுப்பாகாது.
அடுத்தது, தமிழ்த்தேசியவாத அடையாளத்தைக் கொண்ட – தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். தேசமாகத் திரள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகள் பிரிந்து – பிளவுண்டு நிற்பதாகும். ஒன்றுபட்டு நிற்பதன் மூலமே தமிழரின் கூட்டுணர்வை உலகின் முன்னே பிரகடனப்படுத்தலாம் என்று சொன்ன கட்சிகள் அதற்கு மாறாக நிற்பது அவற்றின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் எதிரானதல்லவா! அப்படியென்றால் இவை வலியுறுத்திய – மக்களைக் கோரிய – ஒற்றுமையும் ஐக்கியமும் தேசத்திரட்சியும் என்ன பொருளாயிற்று? சுத்த ஏமாற்றைத்தானே இவ்வளவு காலமும் செய்திருக்கின்றன. இப்போதும் அதைத்தானே செய்யப்போகின்றன? இப்படி ஏமாற்றுச் செய்து கொண்டு எப்படி மக்களுக்கு முன்னால் இவற்றினால் நிற்க முடிகிறது? அதற்கான துணிச்சலும் அற நிமிர்வும் இவற்றுக்குண்டா?
இதையிட்டு தமிழ்த்தேசியவாதத்தை வலியுறுத்துவோரும் இந்தக் கட்சிகளை ஆதரித்து நின்றோரும் பதிலளிக்கவும் பொறுப்புரைக்கவும் கடப்பாடுடையவர்களாகின்றனர். அவர்களாவது இதைச் செய்வார்களா? அல்லது அவர்களும் இந்தக் கீழ்மைத் தரப்புகளோடு சல்லாபங் கொள்வரா?
தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் பொதுவாகவே சொல்லி வரும் கூற்று – இனத்தின் நலனே முக்கியம். அதைக் கடந்து சுயநலனின் அடிப்படையில் செயற்படுவது அந்த (தமிழ்) இனத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று. அப்படியென்றால் இப்பொழுது இனத்திரட்சிக்கு எதிராக – பெருந்தேசியவாதத்துக்கு ஆதரவாகச் செயற்படும் இந்தத் தரப்புகளின் செயற்பாட்டுக்குப் பெயரென்ன? இது பச்சைத் துரோகமின்றி வேறென்ன?
இறுதியாகவும் ஒன்றைச் சொல்லலாம். கட்சிகளில் தாம் மதிக்கப்படவில்லை. தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பு (இடம்) அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை முன்னிறுத்திக் கொண்டு பலர் வேறு கட்சிகளிலும் வேறு அணியாகச் சேர்ந்து கொண்டு சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர்.
அட, தேர்தலில் போட்டியிடுவதற்குக் காட்டும் இந்தப் பேரார்வத்தையும் பெரு முயற்சியையும் அதற்காகப் பாடுபடுவதையும் மக்களுக்கான களப்பணிகளைச் செய்வதற்குக் காட்டலாம். அதுவே உண்மையில் அரசியற் தகுதியும் அரசியற் பணியும் அரசியல் மதிப்புமாகும். ஆதைச் செய்தால் மக்கள் அப்படியானவர்களுக்காக முன்வந்து நியாயம் கேட்பர். இடத்தைக் கேட்டுப் போராடுவார்கள். தங்களுடைய ஆதரவை அளித்து குறித்த வேட்பாளர்களை வெற்றியடைய வைப்பார்கள். ஆக களப்பணியார்களே வேட்பாளர்களாக வேண்டும். அத்தகைய ஒரு அரசியற் பண்பாடு தமிழ்ச் சூழலில் உருவாகி வளர்ச்சியடைய வேண்டும். இதனையே இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்த்தேசியம் மட்டுமல்ல, எந்தத் தேசியவாதமும் மற்றமைகளை – பிற தேசியவாதத்தை நிராகரித்து – மறுதலித்துத் தன்னை நிலைப்படுத்த முடியாது. அவற்றை அங்கீகரித்து, மதித்து இணைநிலை கொள்ள வேண்டும். இங்கோ பிற தேசியங்களை எதிர்நிலையில் நிறுத்தி, அதற்குள்ளிருக்கும் முரண்பாடுகளைக் கூர்மையாக்கி, இனவாதமாக்கித் தமது அரசியலைச் செய்வதாகவே உள்ளது. இது அடிப்படையில் தவறானதாகும். இனியும் அப்படி இனவாதத்தைக் கட்டமைக்க முடியாது. இன நலன் என்ற நாடக வார்த்தைகளுக்கு இனி எந்தப் பெறுமானமும் இல்லை. அதை விடச் சுய நலனே முக்கியம் என இவை தெளிவாக நிரூபித்து விட்டன.
ஆக, இவ்வளவு காலமும் சொல்லி வந்த இன நலநலனை விடச் சுயநலனே முக்கியம் என்று இந்தத் தேர்தற்களம் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதைக்குறித்து நிதானமாக – ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுவது அவசியம். உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு, களப்பணி போன்றவற்றை நம்பிச் செயற்படுவோரை ஆதரிப்பதே சிறப்பு.
ஆம், இது விழித்தெழும் காலமாகும்.
கருணாகரன்