ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களன் ஆதரவை பொதுத்தேர்தலில் பெற்றுக் கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல்சபை உறுப்பினரும், கண்டி மாவட்ட தேர்தல் வேட்பாளருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார். பொதுத்தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் மற்றும் தங்களது வெற்றிவாய்ப்புகள் குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் வாக்களித்திருந்தாலும், தேசிய மக்கள் சக்தியினால் பொதுத்தேர்தலில் மாவட்டங்களை வெற்றிகொள்ள முடியாது என சிலர் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மூன்று சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியால் வெற்றிகொள்ள முடியாது என்று கூறியபோதும், அதனை நாம் வெற்றிகொண்டு காண்பித்துள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியம் எம்மைவிட்டு ஓடும் என்று பயம் காட்டினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தோற்றவர்கள் புதியவற்றை உருவாக்குகிறார்கள். ஜனாதிபதியின் வெற்றியின் பின்னர் மக்கள் ஒன்றுதிரண்டு வருகின்றனர். மக்கள் பெருமளவில் எங்களுடன் இணைந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எமது வேலைத்திட்டங்கள் காரணமாக எம்முடன் தொடர்பில்லாத மக்களும் எம்முடன் இணைந்து வருகின்றனர்.
கே: உங்கள் கட்சியால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக முடியும். தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு பெரிய வெற்றியை மிக எளிதாக அடைய முடியும் என்பது மிகத் தெளிவாக உள்ளது.
கே: பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் கூறி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம் இல்லையென்பதாலா அவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர்?
பதில்: அவர்கள் தமது தோல்வியையிட்டு வெட்கப்படுகிறார்கள். சில அரசியல்வாதிகளின் பெண்களும் இப்போது வெட்கப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இப்போது அவர்களின் நாடகங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதனை அவர்களால் செய்ய முடியவில்லையென்பதே சோகக் கதையாகும். இவற்றைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது?
கே: ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், சில மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்குகள் அதிகமாக இருப்பதாக நாங்களும் உணர்கிறோம். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: அது உண்மை. அத்தகைய மாகாணங்களுடன் மீண்டும் நாம் தொடர்புகொள்ள வேண்டும். சில பகுதிகளில் எங்களது வாக்கு வீதத்தில் சிறிய குறைவு இருப்பதை நாங்கள் கவனித்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, குறைவான இடங்களில் நாங்கள் சிறப்பு கவனத்துடன் வேலை செய்வோம்.
கே: கடந்த காலத்தில் உங்கள் அரசியல் கூட்டங்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருக்கவில்லை. ஆனால் இம்முறை 57 இலட்சம் வாக்குகளைப் பெற்றது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: எங்களுடைய அரசியல் திட்டங்களைப் பற்றியும், எங்களைப் பற்றியும் மக்களிடத்தில் ஏற்பட்ட நம்பிக்கையினால் இந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம். மற்றைய அனைத்து அரசியல் சக்திகளின் தோல்வி, மக்களின் மற்றைய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு, எங்களது பொருளாதார சரிவு மற்றும் அரசியல் பண்பாட்டின் மோசமடைந்த நிலை போன்ற காரணிகளால் இந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம். மக்களுக்கு எமது தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது எதிர்வரும் பொதுத்தேர்தலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.
கே: தேர்தல் நெருங்கும்போது கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் பற்றித் தொடர்ந்து பேசப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியும் அவ்வாறான ஒப்பந்தங்கள் ஏதாவது செய்துள்ளதா?
பதில்: தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் எமக்கு இருக்கும் ஒரேயொரு ஒப்பந்தம் நாட்டு மக்களுடனானது. நான் பல்வேறு மக்களுடன் பேசுகிறேன். பிற அரசியல் கட்சிகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்கிறேன். அவர்களது தரவுகளை அறிந்து கொள்கிறேன்; அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்று ஆராய்கிறேன். இதன் மூலம் எங்களுடைய வேலைத் திட்டங்களை, எட்ட வேண்டிய இலக்குகளைப் பற்றிச் சிந்தித்து முடிவு செய்கிறேன். இவ்வாறு பல்வேறு தரப்புகளுடன் தொடர்புகளை உருவாக்குகிறேன், இந்த தொடர்புகளை மக்கள் நலனுக்காக உபயோகப்படுத்துவதே என் நோக்கம்.
கே: திருடர்களை பிடிப்பது பற்றி எப்போதும் பேசுகிறார்கள்; ஆனால் அந்தப் பேச்சைத் தவிர வேறொன்றும் நடப்பதில்லை. ஜனாதிபதி பதவியேற்ற பிறகும் இதுவரை ஒருவரும் பிடிக்கப்படவில்லையே?
பதில்: அதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திருடர்களைப் பிடிப்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரினதும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினதும் செயற்பாடாகும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கே: புதிய பாராளுமன்றத் தேர்தல் முறை எப்போது அறிமுகப்படுத்தப்படும்.
பதில்: இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதுகுறித்த விவாதம் ஆரம்பிக்கப்படும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், அந்த மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
கே: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. பலர் பதவியேற்கும் முன் இவ்வாறு கூறினார்கள். ஆனால் பதவியேற்ற பிறகு அது நடைமுறைக்கு வருவதில்லை. இதுவும் அதே போன்று இருக்குமா?
பதில்: ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒப்புதல் பெறவேண்டும். பின்னர், அதன் மீதான மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் சட்டப்பூர்வமாக, அந்த மாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல் இருக்கும். நாங்கள் எதிர்காலத்தில் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
கே: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்பு சமர்ப்பிக்கப்படாத இரண்டு முக்கிய கோப்புகளை இன்னும் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த விசாரணையில் எங்களின் செயல்முறை நியாயமானதாக இருக்கிறது என்பதில் மக்களிடம் தெளிவான நம்பிக்கை உள்ளது. எவரின் குற்றச்சாட்டுகளாலும் எங்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதில்லை. நாங்கள் முறையான செயல்முறைகளை பின்பற்றி இந்த விவகாரத்தை தீர்மானிப்போம் என்பதை அனைவரும் நம்புகின்றனர். மற்றவர்களும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் நல்லது.
கே: வெளிநாடுகளின் வங்கிகளில் இந்த நாட்டின் பணம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை எப்போது நாட்டுக்குத் திருப்பிக் கொண்டுவரப் போகிறீர்கள்?
பதில்: இந்த விவகாரங்களைப் பற்றி பேசுவது திருடர்களுக்குத் தேவையான தகவலை அளிப்பது போல் இருக்கும்; அது எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும்.
கே: அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 18 வீத வரியை குறைப்பதாகக் கூறினாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை அல்லவா?
பதில்: ஆம், நாங்கள் அதைச் செய்ய இருக்கிறோம். நவம்பர் 14 ஆம் திததிக்குப் பிறகு, மக்கள் நமக்கு ஆட்சி பொறுப்பை வழங்கியதும், இந்த நடவடிக்கையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவோம். தற்போது, மக்களின் நலனுக்காக செய்ய முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம். மீதமுள்ளவை, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் செயற்படுத்தப்படும்.