பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான தீவிரமான செயற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தற்போது ஈடுபட்டுள்ளன. பெரும்பான்மை அரசியல் ஒருபுறமும், சிறுபான்மை அரசியல் மறுபுறமுமாக பொதுத்தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான பெருமுயற்சிகளில் ஆளும் தரப்பும் எதிரணியும் ஈடுபட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள போதிலும், அக்கட்சி பாராளுமன்றத்தில் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதே அவசியமானதாகும். பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடியாது போகுமானால், நாட்டின் அரசியல் சிக்கல் நிறைந்ததாகவே மாறிவிடும்.
ஆகவே பாராளுமன்றத்தில் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதில் தேசிய மக்கள் சக்தி முனைப்புக் கொண்டுள்ளது.
மறுபுறத்தில், சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் வியூகம் வகுத்துச் செயற்பட்டு வருகின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாவட்ட மற்றும் தொகுதி ரீதியில் சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்ட வாக்குகளை அடிப்படையாக வைத்து, பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற இயலுமென நினைக்கிறது சஜித் தரப்பு.
இத்தகைய சூழலில், தென்னிலங்கையில் இருதரப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவப் போகின்றதென்பதே உண்மை.
தென்னிலங்கை தேர்தல் நிலைமை இவ்வாறிருக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் அரசியல் நிலைமையானது எதிரும் புதிருமான போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டுமென்ற இலட்சியம் அங்குள்ள தமிழ்க் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக, அங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கிடையில் கடுமையான போட்டாபோட்டியே நிலவி வருகின்றது. கட்சிகள் சிதறுண்டு போய் புதிய அணிகளாக உருவாகி தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இதேவிதமான காட்சிகளையே காண முடிகின்றது.
தமிழ்க் கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு போனது ஒருபுறமிருக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மூத்த கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிளவுகள் நிலவுகின்றன. அவர்கள் சிதறுண்டு போயுள்ளனரென்பதை அவர்களது அறிக்கைகளே புலப்படுத்துகின்றன.
இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழர் தரப்பின் ஆசனங்கள் இழக்கப்படுவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. தமிழர் அரசியல் தரப்பு இத்தனை கூறுகளாகப் பிளவடைந்திருக்கையில், வாக்குகளும் சிதறத்தான் போகின்றன.
இத்தகைய அரசியல் குழப்பமானது பல வினாக்களை எழுப்புகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழர் தரப்பு கூடுதல் ஆசனங்களைப் பெற்றெடுத்தால்தான் தமிழினத்துக்கான உரிமைகளை பெரும்பான்மையிடம் கோருவதற்கு இயலுமானதாக இருக்கும். குறைந்த ஆசனங்களை வைத்துக் கொண்டு எவ்வாறு இனத்தின் உரிமைகளைக் கோர முடியும்?
அது ஒருபுறமிருக்க, தங்களுக்குள்ளேயே ஐக்கியப்படத் திராணியற்ற தமிழ்க்கட்சிகள் தமது இனத்துக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் எவ்வாறு அக்கறை செலுத்தப் போகின்றன?