இஸ்ரேல் – ஹமாஸ் போரானது பிராந்திய போராக பரிமாணம் பெற ஆரம்பித்துள்ளது. போரின் தொடக்கம் ஹமாஸ் மீதான தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த சூழல் படிப்படியாக விரிவடைந்து லெபனான், சிரியா எமன் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்ற தளத்தில் தரைவழி தாக்குதலுக்குரிய நகர்வுகளை செயல்படுத்தத் தொடக்கியிருக்கின்றது. இஸ்ரேலின் நகர்வை மேற்கு நாடுகள் அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா இரும்புத்திரை போன்று இஸ்ரேலை பாதுகாக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்புகளின் பின்புலத்தில் ஆயுதங்களும் இராணுவ தொலைநோக்கு வழிகாட்டல்களும் தரைவழி தாக்குதலின் இன்னொரு பரிமாணமாக காணப்படுகிறது. இது பிராந்திய அரசியலை இஸ்ரேலிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கான ஒரு சூழலை தந்திருக்கின்றது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலில் பிந்திய போக்குகளை தேடுவதாக அமையவுள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் (30.09,2024- – 05.10.2024) முழுவதும் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல் பாரிய நெருக்கடியை ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய புலனாய்வு தகவலின் படி ஹிஸ்புல்லாவின் 60 சதவீத இராணுவ மற்றும் ஆயுத தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிருக்கும் 40 சதவீதம் விரைவில் அழிக்கப்படவுள்ளதாகவும், தெரிவித்துள்ளது. தற்போது லெபனானின் எல்லையோரங்களில் அமைந்திருக்கின்ற குடியிருப்புகளை கடந்து தலைநகரத்தை நோக்கி இஸ்ரேலிய தாக்குதல் விரிவடைந்துள்ளது. விமானத் தாக்குதல் மூலமும் ஏவுகணை தாக்குதல் மூலமும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பை முற்றாக தகர்ப்பதற்கான நகர்வுகளை முதன்மைப்படுத்தி வருகிறது. ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையோரத்தில் அமைத்திருக்கின்ற கிராமங்கள், இராணுவ கிராமங்களாகவே காணப்படுகின்றன. அக்கிராமங்களில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதேபோன்று ஹிஸ்புல்லாவின் இராணுவ தலைமைகளை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதலை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் ஹசன் நஸ்ருலா ரவுதி முஸ்தாகா மற்றும் ஹாசன் ஜபார் அல் குவாசிர் ஆகியோர் குறுகிய காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏறக்குறைய ஹிஸ்புல்லாவின் இராணுவ தளபதிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்ற நிலை இஸ்ரேலின் தாக்குதலுக்கு கிடைத்திருக்கும் எழுச்சியாக உள்ளது. இதுவரை 150 க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு இராணுவ நிலைகளை இஸ்ரேல் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை ஆழமாக விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது லெபனானின் தலைநகரை நோக்கி தரைவழி தாக்குதலுக்கான திட்டமிடலை நகர்த்தி வரும் இஸ்ரேலிய இராணுவம், லெபனானிய இராணுவத்தோடு மோத ஆரம்பித்துள்ளது. லெபனானிய இராணுவத்தின் அதிகாரி ஒருவருடைய கொலைக்கு பின்னர் லெபனான் இராணுவம் இஸ்ரேலிய இராணுவத்தின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனுடைய விளைவு, பிராந்திய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் காணப்படுகின்றன. இஸ்ரேல் தனது மக்களின் இருப்பையும் இறைமையை பேணுவதற்கு தாக்குதலை நடத்தப் போவதாகவும் பரஸ்பரம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்- லெபனான் போரை முன்னெடுக்க வழி வகுத்துள்ளது. இதன் அடிப்படைக் கொள்கையும் தாக்குதலின் போக்கும் இதனால் ஏற்படக்கூடிய பாரிய மனித அழிவுகளும் பிராந்திய அரசியல் சூழலை மாற்றுவதற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது என்று தெரிகிறது.
இரண்டாவது சமதளத்தில் இஸ்ரேலிய இராணுவமும் அதன் விமானப்படைகளின் ஏவுகணை தாக்குதல்களும் எமன் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுத்தி அமைப்பின் இராணுவ நிலைகளை தாக்க தொடங்கியிருக்கின்றன. எமன் பகுதியில் இயங்கி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நிலைகளை அழிப்பது இஸ்ரேலின் தரைப்பகுதியை பாதுகாப்பதற்கான நகர்வு என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது எமன் நாட்டை போரில் ஈடுபடுத்துவதற்கான நகர்வாகவே தென்படுகிறது. செங்கடலை மையப்படுத்தி மேற்கு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதலை நிகழ்த்திய ஹவுத்தி அமைப்பினர், மேற்கு நாடுகளின் வர்த்தகப் போக்குவரத்தை அழிப்பதாக அமைந்துள்ளது. இதற்கு பதிலடி வழங்கும் விதத்தில் மேற்கு நாடுகளும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து எமன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு வருகின்றன.
மூன்றாவது இதே சந்தர்ப்பத்தில் சிரியாவில் இயங்கி வரும் ஷியா பிரிவை நோக்கியும் இஸ்ரேல் தனது தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றது. கடந்த வாரத்தில் சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக விமான தாக்குதல்களையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. இது படிப்படியாக தன்னுடைய எல்லையோரத்தில் அமைந்திருக்கின்ற நாடுகளை இப்போரில் இஸ்ரேல் ஈடுப்பத்தும் என்பதைக் காட்டுகின்றது. அது பிராந்தியத்தின் புவிசார் அரசியலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயல்வதாகத் தெரிகின்றது. மேலும் யூதர்களை மீளவும் இஸ்ரேலின் எல்லையோரங்களில் குடியிருக்க வைக்கவும் அவர்களை பாதுகாக்கவும் அதற்கான பாதுகாப்பு அரண்களை விஸ்தரிக்கவும் இஸ்ரேலிய இராணுவமும் அரசாங்கமும் திட்டமிட்டு வருகின்றது.
நான்காவது, ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் பல்வேறு பட்ட தாக்குதலை நிகழ்த்திய போதும் அதற்கான அடிப்படைத் திறன்களை ஈரான் பாதுகாத்து வருகின்றது. ஆனால் லெபனான் மீதான தாக்குதலோடு தனது மக்களை பாதுகாக்கும் விதத்தில் ஈரான் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தெரிய வருகின்றது. கடந்த வாரம் ஈரானிய அதியுயர் மதத் தலைவருடைய உரையும் ஈரானிய ஜனாதிபதியின் உரையும் ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவ தலைமையை அழித்தொழித்ததற்கு பதிலீடாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியதென்றும் அத் தாக்குதலில் விமானத்தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் இலக்கு வைக்கப்பட்டன என்றும் அவற்றில் கணிசமானவை நடுவானில் அழித்தொழிக்கப்பட்டாலும் குறிப்பிடப்பட்ட விளைவுகளை; இஸ்ரேலின் விமானத்தளங்களுக்கும் இராணுவ தளங்களங்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே ஈரான் மீது இஸ்ரேல் நீண்ட தாக்குதலை செய்வதற்கு திட்டமிடுவதாக இராணுவ தளபதிகளும் பாதுகாப்பு மற்றும் அமைச்சரவையின் கூட்டத்தின் முடிவும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அதன் விளைவாக ஈரான் பாரிய துயரமொன்றை எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்படும் என இஸ்ரேலிய அமைச்சரவையின் உரையாடலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப் போர் பிராந்திய அரசியலை புதிய வடிவத்துக்குள் நகர்த்துகின்ற நோக்கோடு காணப்படுகிறது. பிராந்திய ரீதியில் கட்டி எழுப்பப்பட்டிருந்த அல்லது நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருந்த ஆயுத அமைப்புகளும் கிளர்ச்சி குழுக்களும் முற்றாக அழித்தொழிக்கப்படுகிற சூழல் என்பது இஸ்ரேலுக்கு அவசியமானதாக தெரிகின்றது.
அதனை அழிப்பது மட்டுமின்றி ஈரான் போன்ற நாடுகளில் இராணுவ வல்லமையும் ஏனைய நாடுகளின் இராணுவ பலத்தையும் முற்றாக முடக்குவது என்ற திட்டமிடலோடு இப்பிராந்திய போர் கட்டமைக்கப்படுகிறது.
மேற்கு நாடுகளின் நலன்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களும் மேற்காசிய இஸ்லாமிய நாடுகளும் கட்டுப்படுத்தப்படுவதும் ஆதிக்கம் செய்யப்படுவதும் தவிர்க்க முடியாதது என மேற்கு இஸ்ரேல் கூட்டு கருதுகிறது.
அதனை நோக்கிய இப்போரும் பிராந்திய அரசியலும் காணப்படுகிறது.