நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என வென்றதன் மூலம் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. என்றாலும் அது நினைக்கும் அளவுக்கு இலகுவானதும் அல்லது.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் ஆடும் அணியை தீர்மானிப்பதற்கு இன்னும் 10 தொடர்கள், அதாவது 26 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. அதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்து லோட்ஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பல நாடுகளும் போட்டியில் உள்ளன.
இதிலே தற்போது முதல் இரு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு வேறு எந்த அணிகளை விடவும் வாய்ப்பு அதிகம்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றியுடன் இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இலங்கை அணி பெற்றிருக்கும் புள்ளி விகிதம் 55.56. இதுவே முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் புள்ளி விகிதம் 74.24 என்பதோடு அவுஸ்திரேலியா 62.50 புள்ளி விகிதத்தைப் பெற்றிருக்கிறது.
இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் இன்னும் இரண்டு தொடர்கள் எஞ்சியுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் தென்னாபிரிக்கா சென்று இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதோடு பின்னர் சொந்த மண்ணில் எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும்.
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை அணி அந்தப் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் இந்தியா அல்லது அவுஸ்திரேலியாவை பின்தள்ள வேண்டி உள்ளது. இதில் இந்தியாவை விடவும் குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கும் அஸ்திரேலிய அணியை இலங்கை எதிர்கொள்ளவிருப்பதால் இலங்கை அணிக்கு அந்த அணியை பின்தள்ளுவது ஒப்பீட்டளவில் இலகுவானதாகும்.
எனினும் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என வெல்ல முடிந்தால் 69.23 புள்ளி விகிதத்;துடன் லோட்ஸ் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட முன்னேற முடியுமாக இருக்கும். எவ்வாறாயும் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பமாகும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போடர்–கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்தே இலங்கை அணியின் வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
மறுபுறம் புள்ளிப் பட்டியலில் இலங்கையை பின்தள்ளக்கூடிய அணிகளில் தென்னாபிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணியால் 1–1 என சமன் செய்தாலும் இலங்கைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். பங்களாதேஷால் அதிகபட்சமாக 59.03 புள்ளி விகிதங்களால் முன்னேற முடியும் என்பதோடு இங்கிலாந்து அணியால் 57.95 புள்ளிகளைத் தாண்ட முடியாது.
எவ்வாறாயினும், ஒவ்வொரு போட்டிகளுக்கு இடையில் மாத்திரமே அவதானம் செலுத்தி வருவதாகவும் தொலைதூரம் பற்றி அவதானம் செலுத்தினால் முக்கியம் வாய்ந்த உடன்வரும் போட்டிகளை இழந்து விடுவோம் என்றும் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா குறிப்பிடுகிறார்.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி வாய்ப்புப் பற்றி தனஞ்சயவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஒவ்வொரு போட்டிக்கும் இடையே தேவைப்பட்டவற்றை செய்தால், பின்னர் புள்ளிப் பட்டியல் தம்மைப் பார்த்துக்கொள்ளும்’ என்றார்.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி எதிர்வரும் 2025 ஜூன் 11 ஆம் திகதி லண்டன், லோட்சில் நடைபெறும்.