எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலத்தில் இருக்கிறோம். மேல்மாகாணத்தில் அதிகூடிய ஆசனங்களும் (38), வட மாகாணத்தில் மிகக் குறைந்த ஆசனங்களும் (12) தெரிவு செய்யப்படவுள்ளன.
இலங்கையின் சனச்செறிவு மிக்க மாகாணம் மேற்கு என்பதும், ஐதான சன அடர்த்தி நிலவும் மாகாணம் வடக்கு என்பதும் வெளிப்படை உண்மை.
பாராளுமன்ற ஆசனங்களில், கிட்டத்தட்ட அரைவாசி ஆசனங்களை மேற்கு, வடமேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் கொண்டுள்ளன. மத்திய மாகாணத்தையும் இவற்றோடு சேர்த்தால், கிட்டத்தட்ட 2/3 ஆசனங்கள் இந்த 5 மாகாணங்களுக்குள் அடங்கும்.
இவை தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகும் 29 ஐத் தவிர, நேரடியாகத் தெரிவாகும் 196 ஆசனங்களை அடிப்படையாகக் கொண்ட கணிப்பாகும்.
ஊவா, கிழக்கு, வடமத்தி, வடக்கு ஆகிய 4 மாகாணங்களிலும் ஒப்பீட்டளவில் சனச்செறிவு குறைவு. அதிலும், வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மொத்தமாக (12+16)=28 ஆசனங்களே தெரிவாகப் போகின்றன.
இந்த எண்ணிக்கை, மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் மொத்த ஆசனங்களில் (196), அண்ணளவாக 14 வீதமாகும். இந்தப் பின்புலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண ஆசனங்கள், இந்தப் பொதுத் தேர்தலின் பின்னரான ஆட்சியமைப்பில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தாது என்று உய்த்துணரலாம். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் வீச்சு மிகவும் அதிகமாகும்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயம் செல்வாக்குச் செலுத்தும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட 5 மாகாணங்களே தீர்மானிக்கும் மாகாணங்களாக இருக்கப் போகின்றன.
ஆனால், வடக்கும் கிழக்கும் வேறு வகையில் அரசாங்கத்துக்கு முக்கியமானவை. இது வெறும் ஆசன எண்ணிக்கைப் பலத்தின் அடிப்படையிலான தேவை அல்ல. மாறாக, இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுதல் என்பதே, இதன் அரசியல் முக்கியத்துவத்திற்கு முழுமுதல் காரணமாகும்.
வடக்கு கிழக்கு தவிர, மேல் மாகாணமும் மத்திய மாகாணமும் வடமேல் மாகாணமும் சிறுபான்மை மக்களைக் கணிசமாகக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
எது எவ்வாறாயினும், கிழக்கிலும் வடக்கிலும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். அதற்கு பூகோள அரசியல் முக்கியத்துவமும் உள்ளது.
ஒப்பீட்டளவில் தமிழர்களும் முஸ்லிம்களும் மிக அதிகளவில் இங்கு வாழ்வதுதான் அதற்கு மிகப் பிரதானமான காரணம். அத்தோடு, முப்பதாண்டு கால சிவில் யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்குள்ளான பிரதேசம் என்பது கவன ஈர்ப்பை அதிகரிக்க இன்னொரு காரணமாக உள்ளது.
போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் இவ்விரு மாகாணங்களும் அதிக கவனத்தைக் கோரி நிற்கின்றன. அத்தோடு தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் இங்கு அதிகம்.
ஆனால், இம்முறை இந்த சிறுபான்மை சமூக அரசியல் கட்சிகளின் பிடி தளர்ந்து வருவதையே களநிலவரம் சுட்டிக்காட்டுகிறது. ‘பேரம் பேசும் அரசியல்’ என்ற கோஷம் மூலம், இவர்கள் ‘பிழைப்புவாத- சந்தர்ப்பவாத அரசியலைத்தான் முன்னெடுத்து வந்தார்கள். ஆகவே, இந்தத் தடவை இவர்களைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குரல்கள் பொதுமக்கள் தளத்தில் பரவலாக எழுப்பப்படுகிறது. அதை சமூக ஊடகங்கள், மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
அதேவேளை, தேசியவாத நலன்களையும் இனத் தனித்துவங்களையும் பாதுகாக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் கேட்கவே செய்கின்றன. பிரதான அரசியல் கட்சிகளோடு கரைந்து போகக் கூடாது எனவும் வாதிக்கின்றனர்.
இதற்கு மறுதலையாக, இந்த சந்தர்ப்பவாத, சுயநலக் கட்சிகள் போதிய நன்மை எதையும் செய்யவில்லை. தேசியளவில் இயங்கும் கட்சிகளோடு கைகோர்ப்பதே சிறந்த தெரிவு என்ற எதிர்வாதங்களும் பலமாக உள்ளன.
இதன் சாதக, பாதகங்களை, வரவிருக்கும் பொதுத் தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்தப் போகின்றன.
இது இவ்வாறிருக்க, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும், இப்போது கிழக்கிலும் வடக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கான (NPP) ஆதரவுத் தளம் வலுவடைந்து கொண்டே செல்கிறது.
வடக்கின் யாழ் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகக் குறைந்தது ஒவ்வொரு ஆசனங்களையாவது பெறும் நிலை உருவாகியுள்ளது.
கிழக்கில் தேசிய மக்கள் சக்தி, சுமாராக 30-¤40% ஆசனங்களை (5 அல்லது 6 அல்லது 7) வெல்லும் சாத்தியம் உள்ளது.
அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனங்களை வெல்லும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இந்த வெற்றி வீதம் வேட்பாளர் தெரிவில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆளுமையுள்ள, மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களையே இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறானவர்களைக் களமிறக்கினால் தேசிய மக்கள் சக்தி கிழக்கிலும் வடக்கிலும் கூடுதல் வெற்றி பெறும்.
மறுபுறம் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட, செயற்திறனற்ற ஊழல் பேர்வழிகளை ஒதுக்கி விட்டு, ஆற்றலும் ஆளுமையும் கொண்ட புதுமுகங்களைக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக வெளிவருகின்றன.
இந்தப் பின்புலத்தில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் களம் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சாத்தியப்படுத்தும் என்று துணிந்து கூறலாம்.
இந்தப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 120 ஆசனங்களைப் பெறும் என்று பலரும் எதிர்வு கூறுகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமின்றி, இந்தத் தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.
சிராஜ் மஷ்ஹூர்