Home » சார்ள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டி
சுமந்திரனின் கோரிக்கைக்கமைய

சார்ள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டி

மன்னாரில் மேலும் இரு புதியவர்கள்

by Damith Pushpika
October 6, 2024 8:15 am 0 comment

தேர்தலில் போட்டியிடுவதில்லையென அறிவித்திருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரனின் கோரிக்கைக்கமைய மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவருடன் மன்னார் தொகுதியில் மேலும் புதியவர்கள் இருவரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளன.

அதன்படி இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்ததையடுத்து, மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக்கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த தெரிவுகள் யாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (04) மன்னாருக்கு சென்று வேட்பாளர்களை இறுதி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எம்.ஏ.சுமந்திரன், மன்னார் கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடிய பின்னர் தேர்தலுக்கான செலவுகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளார்.

அதன்படி, மன்னார் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு வழிவிடும் வகையில் தேர்தலில் இருந்து தான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division