திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், சிவஞானம் சிறிதரனும் தானும் யாழில் போட்டியிடுவோமென தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கும் அழைப்பு விடுகின்றோமெனவும் அவர் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று (05) நடைபெற்றது. இதனையடுத்து ஊடக்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், மத்திய குழுவால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 11 பேர் அதில் கலந்து கொண்டோம். இதன்போது, வேட்பாளர் நியமனம் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடினோம். எந்தவொரு மாவட்டத்தினதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதனால் தெரிவிக்குழுக் கூட்டம் தொடர்ந்தும் இன்றும் (06) நடைபெறும். அதன் பின்னரே முடிவு வெளியிடப்படும். விசேடமாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. இம் மாவட்டங்களில் ஒரு தமிழ் பிரதிநித்துவமே வரக்கூடிய நிலைமை இருக்கிறது. கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் நாம் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. பல கட்சிகளும் போட்டியிட்டால் திருகோண மலையிலும் இம்முறை அதுவே நிகழும். இதனால் அந்த இரு மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காக ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திருகோணமலை ஆயர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருடன் நேற்று (05) மாலை 4.30 க்கு சந்திப்பு நடைபெற்றது. அவரை சந்தித்து பேச ஒரு குழு திருகோணமலை சென்றது. இவ்விரு மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் வீட்டுச் சின்னத்திலும் ஏனைய கட்சி வேட்பாளர்களையும் இணைத்து போட்டியிடமுடியும். இது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும், இம்முறை மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். இளையவர்கள், புதியவர்களை விரும்புகிறார்கள். எமக்கு கிடைத்த வேட்பாளர் பட்டியல்களில் பெண்களின் பெயர்கள் குறைவாக உள்ளன. ஆர்வமுள்ள, திறமையான, செயற்பாட்டு திறன் கொண்ட, எம்மோடு இணைந்து பயணிக்கக் கூடிய பெண்கள் எமக்கு தேவைபடுகின்றனர். நாம் அவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்க தயாரகவுள்ள போதும் பெண்கள் முன்வரவில்லை. பெண்கள் அமைப்புக்கள் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லையென மத்திய குழு எடுத்த தீர்மானத்தை எமது தெரிவுக் குழுவும் உறுதி செய்துள்ளது. எனவே அவர்களை தவிர்த்து புதிய வேட்பாளர்களையும், இளைஞர்களையும் களமிறக்கவுள்ளோம். ஜனாதிபதி தேர்தல் விடயத்தில், மத்திய குழு எடுத்த தீர்மானத்தை மீறி சிறிதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லையென தீர்மானம் எடுக்கப்பட்டதனால் சிறிநேசன் போட்டியிட முடியாது. சிறிதரன், மத்திய குழுக் கூட்ட தீர்மானத்தை மீறி செயற்பட்டதால் அவரை போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அல்லது அவராக விலகியிருக்க வேண்டுமென நான் கோரினேன். இதை மறுத்து தானும் போட்டியிடப் போவதாக சிறிதரன் தெரிவித்தார். இந்நிலையில், தெரிவுக் குழுவும் நாங்கள் இருவரும் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அமைவாவே நானும், சிறிதரனும் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோம். நிச்சயமாக வெல்வோம். ஏனைய 07 பேரையும் இளைஞர்களாக களமிறக்குவோம் என தெரிவித்தார்.
வவுனியா விசேட நிருபர்
திருகோணமலை, அம்பாறையில்
வீட்டு சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சு
சிறிதரனும் நானும் யாழில் போட்டியிடுவோம் - எம்.ஏ.சுமந்திரன்
78
previous post