ஓவியக் கலையானது மொழி, பல்லின மக்கள், நாடு என அனைத்துக்கும் அப்பால் அனைவராலும் இரசிக்கக் கூடியதும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடியதுமாகும்.
சில ஓவியங்கள் மனதிற்கு இதமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும், கவலைக்கு மருந்தாகவும் கண்ணுக்கு இனிதாகவும், பல அர்த்தங்களை கொண்டு அமைவதுடன் அவற்றைப் பார்த்த மட்டில் மனதில் ஒருவிதமான அமைதிக்கு அது வித்திடுவதையும் காணலாம்.
வரலாற்று ஓவியங்கள் பல பாடங்களை கற்றுத் தருவதுடன், அந்தந்த கால வரலாறுகளை இலாவகமாக எமக்கு புரிய வைக்கின்றன. அந்த வகையில் பண்டையகாலம் தொட்டு ஓவியத்திற்கும் ஓவியக் கண்காட்சிகளுக்கும் மக்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளதை காண முடிகிறது.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த ஓவியக் கண்காட்சி ஒன்றை பார்த்து, இரசித்து மகிழும் சந்தர்ப்பம் ஒன்றை வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலய மாணவிகள் வழங்கியுள்ளனர்.
இந்த கண்காட்சி வத்தளை புனித அன்னம்மாள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலவசமாக அதனை அனைவரும் கண்டு களிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அந்த கண்காட்சியின் முன்னேற்பாட்டுக்கான ஒரு அம்சமாக அந்த மாணவர்களை பயிற்றுவித்த சித்திரப் பாட ஆசிரியர் அந்த ஓவியத்தை திறம்பட வரைந்துள்ள மாணவிகளுடன் எமது தினகரன் ஆசிரிய பீடத்திற்கு வருகை தந்தார். உண்மையில் அவர்கள் கொண்டு வந்திருந்த ஓவியங்கள் எம்மை பிரமிக்க வைத்தன. அந்த வித்தியாலயத்தின் தமிழ், சிங்கள பிரிவு ஆறாம் தரத்திலிருந்து 13-ஆம் தரம் வரையிலான மாணவர்களால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சிறந்த அனுபவமுள்ள கை தேர்ந்த ஓவியர்களால் தீட்டப்படும் ஓவியங்களைப் போன்று அதற்கு இணையானதாக அவை அமைந்திருந்தன.
உண்மையில் காலத்திற்குப் பொருத்தமான ஒரு முயற்சி.
அந்த ஆசிரியையையும் மாணவிகளையும் எந்தளவு பாராட்டினாலும் தகும். இந்த முயற்சி ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வத்தளை, புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இந்த ஓவியக் கண்காட்சி இம்மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் பாடசாலை மண்டபத்தில் விமரிசையாக நடைபெறவுள்ளது.
கண்காட்சிக்கான பொறுப்பாசிரியையும் ஓவியப் பாட ஆசிரியையுமான ஸ்ரீமதி பெர்னாண்டோ அது தொடர்பில் எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது;
“நான் இந்த பாடசாலையில் இந்த வருடத்துடன் 35 வருடங்களை நிறைவு செய்து ஓய்வு பெற்றுச் செல்கின்றேன். இதற்கு முன்னரும் இந்த பாடசாலையில் நான் நான்கு தடவைகள் ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியிருக்கின்றேன்.
அந்த வகையில் இந்த தடவை சிறந்த ஓவியங்களுடன் அதனை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எனது அவா.
அத்துடன் இந்த மாணவிகளின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். பிரசித்தமடைய வேண்டும்.ஏனைய மாணவர்களுக்கும் அது ஒரு முன்னுதாரணமாகவும் ஊக்குவிப்பாகவும் அமைய வேண்டும் என நினைத்தேன்.
இந்த கண்காட்சியை நடத்துவதற்கு எனக்கு பல நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புக்களும் கிடைத்தன. இந்த மாணவிகள் பொருளாதார நிலைமையில் பின்தங்கி உள்ளவர்கள் என்பதால் சிறப்பாக இதனை செய்து முடிப்பதற்காக ஓவியம் வரைவதற்கான அட்டைகள்,தூரிகைகள் உட்பட அதற்கான பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அது மிகவும் வசதியாக அமைந்தது.
இந்த ஓவியக் கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெறுகின்றன. வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
மூன்று தினங்கள் நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சியில் முதலாவது நாளில் சர்வ மத தலைவர்களை அழைத்து அதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, சிறப்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்