வடக்குக்கான ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் சமிக்ஞை கட்ட மைப்புகள் இன்னும் பொருத்தப்படாததால் வடபகுதி ரயில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வடக்கு ரயில் பாதைக்கான முழுமையான புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி மாதம் முதல் 10 மாத காலத்துக்கு ரயில் பாதை மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ரயில்களை இயக்க தேவையான சமிக்ஞை கட்டமைப்பு இல்லாததால் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.
91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைக்கப்பட்ட மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான 66.4 கிலோமீற்றர் பகுதியில் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு நிறுவப்படவில்லை.
ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதையில் பயன்படுத்தப்பட்டு வந்த சாம்ஃபோ மற்றும் டேப்லெட் சிக்னல் கட்டமைப்பு, ரயில் பாதை மறுசீரமைப்பு பணியுடன் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இதனால் டேப்லெட் சமிக்ஞை முறையில் ரயில்களை இயக்க முடியவில்லை.
முதலில், ரயில் பாதைக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமையினால், சமிக்ஞை கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிலை காரணமாக, மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையில் ரயில் கடவைகள் அனைத்தும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளாக உள்ளன.
எந்நேரமும் பயணிகள் பஸ்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் 07 முக்கிய ரயில் கடவைகள் இந்த ரயில் பாதையில் அமைந்துள்ளன. அத்துடன் மேலும் சுமார் 50 ரயில் கடவைகளும் உள்ளன.
இந்நிலைமையால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் 10 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மக்களுடன் அநுராதபுரம் செல்லும் யாத்திரீகர்கள் உட்பட அனைத்து பயணிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முற்றாக அழிந்து போன கரையோரப் ரயில் பாதை 02 மாதங்களுக்குள் மறு சீரமைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. கொவிட் தொற்று காலப்பகுதியில் கூட இவ்வளவு காலம் ரயில்கள் இயங்காத சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கவில்லையென ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், சமிக்ஞைகள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இவ்வீதியில் இயக்குமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய அதிகாரிகள் ரயிலை இயக்க முற்பட்டபோது, ரயில்வே ஊழியர்கள், தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டதையடுத்து அது நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த வழித்தடத்தில் சமிக்ஞைகள் பொருத்தாமல் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் கடவைகளுக்கு அருகே சமிக்ஞைக்கு பதிலாக டோக்கன் கார்ட் ஒன்றைகொடுத்து ரயில்களை இயக்குமாறும் ரயில்வே ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரயில்வே லொகோமோடிவ் இன்ஜினியரிங் சாரதிகள் சங்கத் தலைவர் சந்தன லால் கூறுகையில், பயணிகள் பஸ்கள் செல்லும் பிரதான வழித்தடங்கள் ரயில் கடவைகளூடாக உள்ளதாகவும், டோக்கன் முறையில் ரயில்கள் இயக்கப்பட்டாலும், குறைந்தது பிரதான கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் வரை ரயில்களை இயக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீதியை மறுசீரமைக்கும்போது டேப்லட் சமிக்ஞை முறையை பயன்படுத்தியிருந்தால். இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்குவதில் தமது தொழிற்சங்கமும் உடன்படவில்லையெனவும் இறுதியில் ஊழியர்கள் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) வி.எஸ்.பொல்வத்தவிடம் வினவியபோது, சமிக்ஞைகளில் பிரச்சினை இருப்பதாகவும், திட்டத்தின் ஆரம்பத்தில் சமிக்ஞை பிரிவுக்கும் அமைச்சிலும் ஏற்பட்ட பிரச்சினைகளினால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் யாழ்தேவி ரயிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் பின்னர் படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் சமிக்ஞை முறைமையை ஏற்படுத்துவதை துரிதமாக செய்ய முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.