போதியளவிலான பயணிகள் இன்மையால் சில விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம்10 இடங்களுக்குச் செல்லும் விமானச் சேவைகளே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் வழங்கப்பட்டதாகவும் பயணிகளின் விமானப் பயணச்சீட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவில்லையெனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை போதிய பயணிகள் இன்மையாலும் நிர்வாகக் காரணங்களாலும் ஐந்து வருகை விமானங்களும், புறப்படவிருந்த ஐந்து விமானங்களுமாக 10 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமானச் சேவைகள் நேற்று முன்தினம் (04) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த விமானச் சேவைகள் நேற்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதியளவு பயணிகள் இல்லை
சென்னை-கொழும்புக்கான விமான சேவைகள் இரத்து
பயணிகள் சிரமம்; மாற்று ஏற்பாடுகள் துரிதம்
76