தற்பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து வித துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அனுமதி பத்திரம் பெறப்பட்டு தன்வசம் வைத்துள்ள அனைத்து உரிமையாளர்களும் துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமிலுள்ள வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவில் (CEFAP) ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு கையளிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத்தின் கையொப்பத்துடன் வெளிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6(1) மற்றும் 6(2) இன் கீழ் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி துப்பாக்கிகளை தற்காலிக அடிப்படையில் அரசாங்கம் கையகப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இவற்றை உரிய முறையில் மீள்பரிசீலனை செய்த பிறகு அவை மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி, அனுமதி பத்திரம் பெறப்பட்டு தன்வசம் வைத்துள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை அதன் உரிமையாளர்கள் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்பபடைத்ததன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு அலுவலகத்துக்கு (CEFAP) வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவினால் வழங்கிய ஏற்புச் சீட்டின் பிரதி ஒப்படைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள திகதிக்கு முன்னர், தமது துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும். இதேவேளை,சொத்து/பயிர்ச்செய்கை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸாதிக் ஷிஹான்