Home » மேல்வர்க்கத்திடமிருந்த அரசியல் தற்போது சாதாரண மக்கள் வசம்

மேல்வர்க்கத்திடமிருந்த அரசியல் தற்போது சாதாரண மக்கள் வசம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா.

by Damith Pushpika
October 6, 2024 6:14 am 0 comment

தே  கடந்த காலங்களைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களுடைய தேசிய மக்கள் சக்திக்குரிய வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. இது தமிழ் தேசிய கட்சிகளை வட, கிழக்கு மக்கள் புறந்தள்ளுகின்றார்கள் அல்லது உங்களுடைய கட்சியின் கொள்கைகளால் மக்கள் ஈர்க்கப்படத் தொடங்கி இருக்கிறார்கள் எனக் கொள்ளலாமா ?

இதனை நீங்கள் குறிப்பிட்டது போன்று இரண்டு விதமாகவும் பார்க்கலாம் இதுவரை காலமும் வடகிழக்கு மக்கள் சில கட்சிகளின் கொள்கைகளை நிராகரித்திருந்தாலும் எதுவிதமான மாற்றீடுகளும் இருக்கவில்லை. மக்கள் சம்பிரதாய கட்சிகளிலிருந்து விலக வேண்டும். மக்கள் வேறொரு அரசியல் பயணத்திற்குச் செல்ல வேண்டும் என தெரிவித்தபோதும் இதுவரை காலமும் அதற்குரிய மாற்றீடுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் மக்களுக்கு அந்த மாற்றீடு கிடைத்திருக்கிறது. அந்த அடிப்படையில் எமது கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.கள் சம்பிரதாய கட்சிகளிலிருந்து மக்கள் வெளியே வந்திருக்கிறார்கள். இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ரீதியில்தான் இயங்குகின்றோம். இது இனப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது.

எனது கட்சியின் தலைவர் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளுகின்ற தலைவராக இருக்கிறார். இந்த அடிப்படையில் அவரின் தலைமைத்துவமும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியும் நாட்டிற்கு முக்கியமாக உள்ளது.

தே  கிழக்கு மாகாணத்தை கட்டி எடுப்பதற்காக விசேட திட்டங்கள் ஏதும் தங்களிடம் உள்ளதா?

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அதிகளவு பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக தீர்க்கப்பட வேண்டும் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கிறோம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகியும் யுத்த வடுக்கள் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து போகவில்லை. தற்போது அரசியல் என்பது இலகுவான வணிகமாக மாறியுள்ளன.

நாம் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற ரீதியில் அதில் ஒட்டுமொத்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை சரியான முறையில் கையாளுவோம். அதற்காகத்தான் நாங்கள் ஆட்சி பொறுப்பையும் ஏற்று இருக்கிறோம். அது போன்று எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எங்களுக்கு ஒரு சரியான பிரதிநிதித்துவத்தை கொண்டு வரும் பட்சத்தில் வேலைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும்.

தே  தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு சவாலாக அமையுமா அதிகளவு ஆசனங்களை பெறுவதற்குரிய ஏதும் வியூகங்களை நீங்கள் வகுத்துள்ளீர்களா?

எமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் தேவை. அதனைப் பெறுவதற்காக நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். மூன்று வீதமான வாக்கு வங்கியைக் கொண்டிருந்த எமது கட்சி தற்போதைய நிலையில் பாரிய அளவில் அதாவது மூன்று பிரதான வேட்பாளர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் தோற்கடித்துதான் தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அந்த அடிப்படையில்தான் தேர்தல் ரீதியில் மாற்றம் ஒன்று வந்திருக்கிறது.

எனவே அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது என்பது பெரிய விடயமாக தெரியவில்லை.

எனினும் சீரழிந்தந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்ட எந்தப் பிரதிநிதியும் நாம் இணைத்துக்கொள்ளப் போவதில்லை. மக்களோடு நாங்கள் அரசியல் செய்வோம். ஆனால் பதவிகளில் இருந்தவர்கைள வேட்பாளர் பட்டியலில் நாம் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. பெரும்பான்மையை பெறுவது பெரிய பிரச்சினையாக இருக்கும் என நான் கருதவில்லை. நிச்சயமாக நாம் பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்வோம் எமக்கு வாக்களித்த மக்களை விட வாக்களிக்காத மக்களிடத்திலும் பாரிய துன்பம் நிலவுவதை காணக் கூடியதாக உள்ளது. நாங்களும் வாக்களித்து இருக்கலாம் என அந்த மனங்கள் ஏங்குகின்றன. எனவே நாட்டின் மாற்றத்தின் பங்காளிகளாக மாறுவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள். இந்த அடிப்படையில் எமக்கு தேவையான பெரும்பான்மையை நிச்சயமாக நாம் பெற்றுக் கொள்வோம்.

தே  ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்ற இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்குரிய வேட்பு மக்கள் கோரப்பட்டிருக்கின்றன, பாராளுமன்ற தேர்தலும் நிறைவு பெற்ற பின்னர் இதுவரை நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற, தேர்தல்களையும் நடத்துவதற்கு தங்களுடைய அரசு நடவடிக்கை எடுக்குமா?

நிச்சயமாக நடைபெறும். மாகாண சபையை எடுத்துக் கொண்டால் மாகாண சபை திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதனை கொண்டு வந்த அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வி அடையச் செய்தார். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய தீர்மானத்தை நாங்கள் எடுத்தாலும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.

தே  தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற காணி பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் தொடர்பில் எவ்வாறு கரிசனை செலுத்தப்படும் என நினைக்கின்றீர்கள்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, போன்ற விடயங்கள் தொடர்பில் நாம் தீவிரமாக வேலை செய்து வருகின்றோம். அமைச்சரவையில் உள்ளவர்கள் மூன்று பேர் தான். அவர்களுக்கு அதிக வேலைப்பளு உள்ளது. எமதுகுழு இன்னும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அது போதுமானதாக தற்போது இல்லை. அவ்வாறு இருந்தும் நாங்கள் எதையும் கைவிட்டதாக இல்லை. நாங்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தே  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கு தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளனவா?

நாட்டில் ஒட்டுமொத்தமாக ஊழல் மோசடி, வீண்விரயம் என பிழையான அரசியல் கலாசாரம் இருந்ததனால்தான் நாடு சீரழிக்கப்பட்டது. அடுத்ததாக கிழக்கு மாகாணத்தில் இன்னும் இவ்வாறான பிரச்சினைகள் மோசமாக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை காலம் இருந்த இந்த மாகாணத்தின் அரசியல் தலைமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை சரியாக முன்னெடுக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைதான் செய்து கொண்டிருந்தார்கள் எந்த வகையிலும் அவர்கள் மாவட்டத்தையோ, மாகாணத்தையோ, அபிவிருத்தி செய்ய வேண்டும் என சிந்திக்கவில்லை.

வட கிழக்கில் இருந்த நல்ல திட்டங்கள்கூட இல்லாமல் போய் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்தவில்லை. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே தான் இருக்கிறார்கள். அனைத்திற்கும் முக்கிய காரணம் எமது அரசியல் தலைமைகள்தான். நல்ல திட்டங்களை அவர்கள் அனுமதிப்பதும் கிடையாது. அனைத்து விதமான செயற்பாடுகளிலும் அரசியல் தலையீடுகள் இருந்திருக்கின்றன. இதனை மாற்ற வேண்டும் இதனை மாற்றியமைக்கும் பட்சத்தில் சிறந்த முதலீடுகள் நிச்சயமாக வரும்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் தலையீடுகள் அங்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களிலும் இருந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு செய்ய முடியாது. அதனை மாற்ற வேண்டும். அதனை நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதனை தனியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மாத்திரம் முடியாது. அவருக்கு பக்கபலமாக அரசியல் தலைமைகளும் மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.

“இலங்கையில் முதலாவதாக அரசியல் அதிகாரம் மேல் தட்டு வர்க்கத்திலிருந்து சாதாரண மக்களின் கைக்கு மாறி உள்ளது” ஆனாலும் செயற்பாடுகள் ஒரே நாளில் மாறாது அதனை மெல்ல மெல்ல மாற்றி கீழ் மட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் “மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கக்கூடிய ஒருமுறைமை நாட்டில் உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றது” அதனை நாங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும்

தே  இறுதியாக தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

கடந்த 76 வருடங்களாக இந்த மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த யுத்தம், இனக் கலவரங்கள், பொருளாதார வீழ்ச்சி, இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களுக்கு நாம் முகம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

இப்போது புதிய மறுமலர்ச்சிக்கான யுகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களால் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்ற நபர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் நிச்சயமாக அவர்களின் கரங்களைப் பலப்படுத்தக் கூடிய பாராளுமன்றம் எமக்கு தேவை. எதிர்பார்க்கின்ற அனைத்து விடயங்களையும் இந்த ஒன்றரை மாதத்திற்குள் செய்து விட முடியாது. ஆனாலும் பெருந்தொகையான பணத்தை நாங்கள் மீதப்படுத்தி உள்ளோம். இந்த அரசியல் கலாசாரம் மேல்மட்டத்தில் மாற்றமடைந்துள்ளது.

ஜனாதிபதி முதற்கொண்டு பிரதமர், அமைச்சரவை செயலாளர், வரைக்கும் மாற்றமடைந்துள்ளனர், இதனை நாம் கீழ் மட்டத்துக்கு கொண்டுவர வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் அதை செய்ய முடியாது. அந்த பெரும்பான்மையை மக்கள் நிச்சயமாக எமக்கு தரப் போகின்றார்கள். அதனை வைத்துக்கொண்டு நாம் செயற்படுவோம்.

நேர் கண்டவர் : வ.சக்திவேல்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division