தமிழரசுக் கட்சியில் தற்போது தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களின் ஆதிக்கமே உள்ளதாகக் கூறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு…..
கேள்வி :- பொதுத் தேர்தலில் உங்கள் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதே? அதற்குக் காரணம் என்ன?
பதில் :- நான் ஏற்கனவே ஊடகங்களுக்குக் குறிப்பிட்டபடி, இளையோருக்கு அரசியலில் இடமளிப்பதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கும் வகையிலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை இளைஞர், யுவதிகள் முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் அவர்களை வழி நடத்தும் வகையிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் ஆசன ஒதுக்கீடுகளை செய்திருப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் அதே பழைய வேட்பாளர்களையே அவர்கள் களம் இறக்குகின்றார்கள். நாம் கூடுமான வரையில் படித்த, பண்புள்ள இளைஞர், யுவதிகளை முன்னிறுத்த விழைந்துள்ளோம். சிலர் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைப் புது முகங்களாக முன்னிறுத்தியுள்ளோம். சில கட்சிகளுடன் எம்மால் ஒத்துப் போக முடியாமையும் இன்னொரு காரணம். தமிழரசுக் கட்சியில் தற்போது அதிகாரம் கையோங்கி இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள். அதன் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளது.
கேள்வி :- ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதிலும் பொது வேட்பாளரை களமிறக்குவதிலும் ஒற்றுமைப்பட்ட கட்சிகள் பொதுத் தேர்தலில் அவ்வாறானதொரு ஒற்றுமையைக் காண்பிக்க மாட்டா என்பதற்கான சமிக்ஞையாக இதனைக் கொள்ளலாமா?
பதில் :- ஜனாதிபதித் தேர்தல் வேறு பாராளுமன்ற தேர்தல் வேறு! பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியாக பல்வேறு சிந்தனைகள், அணுகுமுறைகள், அரசியல் சிந்தாந்தங்களை கொண்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன்போது கட்சிகளுக்குள்ளே வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.
ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றைக் குறிக்கோளுக்காக எல்லோரும் இணைந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட கட்சிகளின் கொள்கைகளும் செல்வழியும் முக்கியமாகின்றன.
தமிழ்த் தேசியத்துடன் சேர்ந்து பயணிப்பவர்கள் அரிதாகி வருவதால் நாம் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தோம். தமிழ் மக்களிடையே ஒற்றுமையைப் பேணுவது சிரமமே என்பது புலப்படுகின்றது. ஆனால் ஒரு கட்சி உண்மையாகவும் விசுவாசமாகவும் தமிழ்த் தேசியத்துடன் நின்றால் மக்கள் ஆதரவு அந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பது எமது நம்பிக்கை.
கேள்வி :- ‘பொதுத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் உதிரியாகவுள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கவும் புதிய அரசியல் கட்சியோ அல்லது கூட்டமைப்போ உருவாக்கப்படவுள்ளதாகவும் பல செய்திகள் வெளி வருகின்றனவே?
பதில் :- அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னுடன் இது பற்றி யாருமே பேசவில்லை.
கேள்வி :- இது குறித்து லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் உங்களைச் சந்தித்ததாகவும் அறியக் கிடைத்தது? அந்தச் சந்திப்பில் கலந்துரையடப்பட்டதென்ன? அவ்வாறு தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமாகுமா?
பதில் :- என்னை லைக்கா சுபாஸ்கரன் அழைக்கவும் இல்லை. நான் எவரையும் சந்திக்கவுமில்லை. சுபாஸ்கரன் நிழற்படங்களை ரஜினி படங்களில் பார்த்திருக்கின்றேன். அவரை நிஜத்தில் சந்தித்ததில்லை.
கேள்வி :- உங்கள் கட்சி தெற்கின் ஏதாவது கட்சிக்கு ஆதரவு வழங்குமா? அப்படியானால் என்ன நிபந்தனைகளின் கீழ்?
பதில் :- தெற்கின் எந்தக் கட்சிக்கும் எமது ஆதரவு இல்லை. ஆனால் வட, கிழக்கு தமிழ் மக்களின் தனித்துவத்தையும் “தேசம்” என்ற அவர்களின் அந்தஸ்தையும் சட்டப்படி ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் முன்வந்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்குவோம்.
கேள்வி :- மதுபான சாலை அனுமதிப்பத்திரம் ஒன்று உங்கள் சிபாரிசில் வழங்கப்பட்டது குறித்த சர்ச்சையொன்று தற்போது கிளம்பியுள்ளதே?
பதில் :- இது தொடர்பில் நான் ஊடகங்களுக்கு ஏற்கனவே எனது விளக்கத்தை அளித்துவிட்டேன். சிபார்சு கடிதம் என்னிடம் கேட்கப்பட்டு அதை நான் வழங்கியது உண்மையே. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளில் ஒன்றே. சர்ச்சை எழுந்ததற்குக் காரணம் அவ்வாறான சிபார்சினால் நான் தனிப்பட்ட விதத்தில் ஏதாவது பணம் உழைத்தேனோ என்ற வினாவே.
அப்படி ஏதும் நான் எந்த விதத்திலும் நன்மை பெறவில்லை. நன்மை பெற வேண்டிய அவசியம் ஏதும் எனக்கில்லை.
கேள்வி :- யாழ். மாவட்டத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 06 ஆகக் குறைந்துள்ளதும் தமிழர் தரப்பில் பிரிந்து நின்று வாக்குக் கேட்பதும் எந்தவகையில் தாக்கத்தைச் செலுத்தும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில் :- இது தாக்கத்தை ஏற்படுத்தும். சந்ேதக மில்லை. ஆனால் எமது மக்கள் தமிழ்த் தேசியத்தை நெஞ்சில் நிறுத்தி புத்திசாதுரியமாக வாக்களிப்பார்களானால் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்க முடியும். ஆகவே, சிங்கள கட்சிகளைச் சார்ந்து தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களையும் முன்னைய அரசாங்கங்களுடன் இணைந்து ஒட்டுக் குழுக்களாக செயற்பட்ட கட்சிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். பிழையான நபர்களை பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் சுயநல சிந்தனையுடனேயே செயல்படுவார்கள். அது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காது. தாக்கத்திற்கான பரிகாரம் மக்கள் கைகளிலேயே இருக்கின்றது. தக்கவர்களுக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும். வாக்கிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி :- தமிழ் பொது வேட்பாளர் என்பது இனவாதத்தைத் தூண்டுவதாக விமர்சிக்கப்பட்டதே? தெற்கில் தற்போது இனவாதம் குறைவடைய வடக்கில் இனவாதத்துக்கு தீனி போடப்படுகின்றதா?
பதில் :- எமது பொது வேட்பாளர் இனவாதம் எதுவும் பேசவில்லை. தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் பற்றியே பேசினார். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அவை பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தன. இவை பற்றியே நாம் மேடைகளிலும் பேசினோம். இனவாதத்தை தூண்ட வேண்டிய அவசியம் எமக்கில்லை.
வாசுகி சிவகுமார்