நாடு முழுக்க சாராயக்கடை மயமாகி விட்டது. கிளிநொச்சி போன்ற சிறிய – போரினால் உச்சமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட 35 க்கு மேற்பட்ட Bar கள் உள்ளன. பல்பொருட்கடைகள், உணவுக் கடைகளைப்போல இந்த மதுக்கடைகள் ஒரே இடத்திலேயே அருகருகாக அல்லது எதிரெதிராக திறக்கப்பட்டுள்ளன. A9 வீதியில் பரந்தனிலிருந்து இரணைமடுச் சந்திக்கிடையிலான எட்டுக் கிலோ மீற்றருக்குள் 10 வரையான மதுநிலையங்கள் இப்போதுண்டு. கரடிப்போக்குச் சந்தியில் மட்டும் 200 மீற்றருக்குள் ஐந்து மதுநிலையங்கள். அருகில் ஒரு பௌத்தவிகாரையும் கந்தசாமி கோயிலும் கிறிஸ்தவ நிலையமும் இருக்கின்றன. சற்றுத் தள்ளி புனித தெரேசா பெண்கள் கல்லூரி உள்ளது.
இப்பொழுதுதான் சுமந்திரன் போன்ற ஒரு சிலர் இதைப்பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார்கள். அதுவும் தங்களுடைய அரசியற் தேவைக்காகவும் போட்டிக்காகவுமே. தமது அரசியற் போட்டியாளர்களை முடக்குவதற்காக, எதிராளிகள் மதுக்கடைகளுக்கான லைசென்ஸைப் பெறும்வரை பொறுத்திருந்து விட்டு, பின்னர் அதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி, அதை வைத்தே அரசியலில் அவர்களை ஓரங்கட்டுவதற்கு இதைப்பற்றிப் பேசுகிறார்கள்.
சமகால அரசியற் பரப்பு, சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், பொதுமக்களின் வாய்களில் என எங்கும் விவகாரமாகப் பேசப்படுவது சாராயக்கடைச் சங்கதியாகும். “சாராயக்கடைச் சங்கதியா?” என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம். ஆம், சாராயக்கடை விவகாரமேதான். எப்படியென்றால், கடந்த (ரணில்) அரசாங்கம் மூன்று மாதத்திற்குள் 300 க்கு மேற்பட்ட மதுக்கடைகளுக்கான அனுமதியை (Bar Licence/ Bar Permit) அள்ளி வழங்கியிருக்கிறது. இது முன்னெப்போதும் நிகழ்ந்திராத அதிசயச் செயல். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் இது முற்றிலும் விலகிய ஒன்றாகும்.
மதுபானச்சாலைகளுக்கான அனுமதிகளில் பெரும்பாலானவையும் அல்லது முழுமையும் அரசியல்வாதிகளுக்காக வழங்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துமாறும் அவற்றின் விவரங்களை வெளியிட வேண்டும் – பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேரில் சந்தித்துக் கேட்டுள்ளார். சுமந்திரன் மட்டுமல்ல, பெரும்பாலான மக்களுடைய எதிர்பார்ப்பும் கூட இதுதான்.
இந்த அனுமதியை ரணில் அரசு வழங்கும்போதே சமூக மட்டத்திலும் மக்களிடத்திலும் எதிர்ப்புணர்வு இருந்தது. பல இடங்களில் மக்களால் வெளிப்படையாகவே எதிர்ப்புக் காட்டப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் புறந்தள்ளிக் கொண்டே அனுமதிகளை அள்ளி வழங்கியது ரணில் அரசாங்கம். தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க இதைச் செய்கிறார் என அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. இதைக்குறித்து அப்பொழுதே நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் தடுப்பதற்கான சிறியதொரு முயற்சியும் நடந்தது. ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை.
இதனால் எந்தக் கட்டுப்பாடும் பொறுப்புமின்றி மதுக்கடைகளுக்கான லைசென்ஸைப் பெற்றுக் கொண்டிருந்தனர் பெரும்பாலான அரசியல்வாதிகள். அதன் மூலம் பல கோடிகளை அவர்கள் உழைத்துக் கொண்டனர். அதைத் தமது உறுப்பினர்கள் வாங்குவதற்கு ரகசியமாக ஆதரவளித்துக் கொண்டிருந்தன கட்சிகள். ஆக, பரிசுத்தமானவர்கள் என்று எவரும் இருக்கவில்லை.
இதனால் “எங்கெங்கு காணினும் Bar டா இதைத் தடுத்து நிறுத்துவது யாரடா?” என்று சனங்கள் கொந்தளித்தனர். அவர்களுடைய கொந்தளிப்புக்கும் மதுக்கடைகளைத் திறக்கும் முயற்சிக்கான எதிர்ப்புக்கும் எந்த மதிப்பும் வழங்கப்படவில்லை. எத்தனை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் பரவாயில்லை. மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அரசாங்கம் பிடிவாதமாக நின்று செயற்பட்டது.
விளைவு, நாடு முழுக்க சாராயக்கடை மயமாகி விட்டது. கிளிநொச்சி போன்ற சிறிய – போரினால் உச்சமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட 35 க்கு மேற்பட்ட Bar கள் உள்ளன. பல்பொருட்கடைகள், உணவுக் கடைகளைப்போல இந்த மதுக்கடைகள் ஒரே இடத்திலேயே அருகருகாக அல்லது எதிரெதிராக திறக்கப்பட்டுள்ளன. A9 வீதியில் பரந்தனிலிருந்து இரணைமடுச் சந்திக்கிடையிலான எட்டுக் கிலோ மீற்றருக்குள் 10 வரையான மதுநிலையங்கள் இப்போதுண்டு. கரடிப்போக்குச் சந்தியில் மட்டும் 200 மீற்றருக்குள் ஐந்து மதுநிலையங்கள். அருகில் ஒரு பௌத்தவிகாரையும் கந்தசாமி கோயிலும் கிறிஸ்தவ நிலையமும் இருக்கின்றன. சற்றுத் தள்ளி புனித தெரேசா பெண்கள் கல்லூரி உள்ளது.
முன்னர் இவ்வாறான வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் போன்றவை அண்மையில் இருந்தால் அங்கே மதுக்கடைகளைத் திறக்க முடியாது. இப்போது அதைப்பற்றிய கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் கிடையாது. எதுதான் பக்கத்திலிருந்தாலும் நமக்கு என்ன? என்ற கணக்கில் ஏட்டிக்குப் போட்டியாகத் திறந்து வைத்திருக்கிறார்கள் சாராயக்கடைகளை. வேண்டுமானால் குடித்து விட்டுக் கோயிலைக் கும்பிடுங்கள். அல்லது கும்பிட்டு விட்டுக் குடியுங்கள் என்ற மாதிரி எண்ணுகிறார்கள் போலும்.
“அபிவிருத்தி என்பது மதுக்கடைகளைப் பெருக்குவதா?” “சமூகப் பங்களிப்பென்பது சாராயக்கடைகளைத் திறப்பதா?” என்று மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு யார்தான் பொறுப்புடன் பதில் சொல்லப்போகிறார்கள்? பல பொறுப்புடைய கேள்விகள் பதில் சொல்லப்படாமல் விடப்படுவதைப்போல இந்தக் கேள்விகளும் கண்டு கொள்ளப்படாமல் விடப்படலாம்.
வங்குரோத்தான நாட்டில் தொழிற்துறையும் பெருக வேண்டும். ஒழுக்கமும் சீர்மையும் வலுப்பெற வேண்டும். மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இளையோருக்கு நல்வழி காட்டப்பட வேண்டும். நல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாட்டை விரைவிற் கட்டியெழுப்ப முடியும். இங்கே நடந்திருப்பதோ இதற்கு எதிரானது.
தொழிற்சாலைகளைத் திறப்பதற்குப் பதிலாக மதுச்சாலைகளைத் திறந்து வைத்திருக்கிறது முன்னைய அரசு. அரசு வழங்கிய அனுமதிப்பத்திரங்களை வாங்கிக் கொண்டாடியிருக்கின்றனர் அரசியல்வாதிகள். அதை கள்ள விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் முதலாளிகள். இதில் தாராளமாக விளையாடியிருக்கிறது ஊழல். இப்படியே சமூகத்தைச் சீரழிக்கும் ஒரு தொடரோட்டம் நடந்திருக்கிறது. இதுதானா சிறந்த பொருளாதாரக் கொள்கை?
அநுர ஆட்சி வரவில்லை என்றால் இது மேலும் நீடித்திருக்கும்.
இந்தத் தீங்கான விடயத்தில், முறைகேட்டில் – ஊழலில் அரசு, அரசியல்வாதிகள், முதலாளிகள் அல்லது முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பும் சம்பந்தப்பட்டுள்ளமை இப்போது பகிரங்கமாகி வருகிறது. வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்கினேஸ்வரன் மதுச்சாலைக்கான உரிமத்தைப் பெறுவதற்குத் தான் கடிதம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஏனையவர்கள் தங்களுடைய பெயர் வெளியில் வந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கின்றனர். விரைவில் அந்தப் பெயர்ப்பட்டியலை அநுர அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதை இவ்வளவு நாட்களும் எந்த அரசியற் கட்சியும் ஏன் தட்டிக் கேட்கவில்லை? ஏன் எந்த அரசியல்வாதியும் மக்களைத் திரட்டி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆம், இதைக்குறித்து எதிர்வினையாற்றியிருக்கும் றயாகரனின் கேள்வி இது “
ஆக கூட்டுக் களவு நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
இப்பொழுதுதான் சுமந்திரன் போன்ற ஒரு சிலர் இதைப்பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார்கள். அதுவும் தங்களுடைய அரசியற் தேவைக்காகவும் போட்டிக்காகவுமே. தமது அரசியற் போட்டியாளர்களை முடக்குவதற்காக, எதிராளிகள் மதுக்கடைகளுக்கான லைசென்ஸைப் பெறும்வரை பொறுத்திருந்து விட்டு, பின்னர் அதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி, அதை வைத்தே அரசியலில் அவர்களை ஓரங்கட்டுவதற்கு இதைப்பற்றிப் பேசுகிறார்கள். இல்லையென்றால் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே மக்களைத் திரட்டி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருப்பார்கள் அல்லவா. பாராளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ இதைப்பற்றிப் பேசியிருப்பார்களே!
சரி இப்போதாவது இதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை வரவேற்போம்.
சாராயக்கடைச் சங்கதிகளைப் பற்றிச் சமூக மட்டத்தில் பரவலாகப் பேச்சு எழுந்திருப்பதால் ஒவ்வொரு அரசியல்வாதியும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விவகாரம் பூதம்போலக் கிளம்பியிருப்பது அவர்களைக் கிலிகொள்ள வைத்துள்ளது.
எந்தச் சாராயக்கடையும் தன்னுடைய பெயரில் இல்லை என்று அவசர அவசரமாக மறுக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். நாங்கள் சாராயக் கடைக்கான அனுமதியைப் பெறவில்லை என்று பதற்றப்படுகிறார்கள் பிள்ளையான் என்கிற சந்திரகாந்தனும் வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும். சாராயக்கடைகளைத் திறப்பதற்கு எதிராகப் பேசியதோடு, வழக்குப் போடுவதற்கும் தீர்மானித்திருக்கிறேன் என்கிறார் சுமந்திரன். இதெல்லாமே அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தம்மைப் பாதித்து விடும் என்பதைக் குறித்த பதறல்களே தவிர, உருப்படியான செயற்பாடுகளல்ல.
மதுக்கடைகளுக்கான லைசென்ஸைப் பெற்றது மட்டும் குற்றமில்லை, அவை, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன பேர்மிற்றைப்போல உச்ச விலைக்கு விற்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்கியிருக்கின்றனர் முதலாளிகள். அல்லது முதலீட்டாளர்கள். இவர்களுடைய சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் எப்படியானதாக உள்ளது? இதில் புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த சிலரும் உள்ளடக்கம். ஆக இந்தத் தவறான செயற்பாட்டில் பல தரப்புக் கைகளுக்கும் தொடர்பும் பொறுப்பும் உண்டு.
இதைக்குறித்து ஏன் நமது ஊடகங்கள் கவனம் கொள்ளவில்லை? நமது புத்திஜீவிகள், தமிழ் மக்கள் பொதுச்சபையினர், பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட சிவில் சமுகத்தினர், மதத் தலைவர்களினது அக்கறைகள் என்ன? பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ஒன்றியங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் குழாத்தினர் போன்றோரின் மௌனம் ஏன் தொடர்கிறது?
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பல மதுச்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பேசப்பட்டது. அது பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மற்றும் சமூக, அரசியற் சிந்தனையையும் ஈடுபாட்டையும் சீரழிப்பதற்கான திட்டம். அதனை அன்றைய அரசு பின்னணியில் நின்று இயக்குகிறது எனச் சொல்லப்பட்டது. மட்டுமல்ல, இளைய தலைமுறையின் கல்வி, சமூகச் சிந்தனை, ஆற்றல் போன்றவற்றையெல்லாம் சீரழிப்பதற்காகப் போதைப் பொருள் விநியோகமும் பாவனையும் தூண்டிவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது. அதனுடைய தொடர்ச்சிதானே இது? அப்படியென்றால் இதைச் சீரியஸாக எடுக்காமல் விடுவதேன்?
போதைப் பொருள் பாவனைக்கு இடமளித்துக் கொண்டு, சாராயக் கடைகளை ஊர் ஊராகவும் தெருத் தெருவாகவும் திறந்து கொண்டு “போதைக்கு இளைய சமூகம் அடிமையாகியுள்ளது.
ஆண்டு தோறும் பெரும் எண்ணிக்கையானோர் போதைப் பாவனையினால் உயிரிழக்கின்றனர் – பாதிக்கப்படுகின்றனர்” என்று சொல்வதிலும் கவலைப்படுவதிலும் அறிக்கை விடுவதிலும் பயனில்லை.