உலக கால்பந்து சம்மேளன (பிஃபா) தரைவரிசையில் இலங்கை அடிமட்டத்தில் இருக்கும் ஓர் அணி. அதனால் கடந்த ஒரு தசாப்தத்தில் 200 இடங்களுக்குள் முன்னேறுவது குதிரைக் கொம்பு. என்றாலும் உலக மட்டத்தில் கால்பந்துக்கு இருக்கும் செல்வாக்குக்கு மத்தியில் அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு சாதாரணப்பட்டதல்ல.
என்றாலும், இலங்கை கால்பந்து அணி அண்மையில் வெளியிட்ட பிஃபா உலகத் தரவரிசையில் 200 ஆவது இடத்திற்கு முன்னேறியது பெருத்த சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.
அதாவது நீண்ட காலமாக தரவரிசையில் 205 ஆவது இடத்தில் ஆடாது அசையாது இருந்த இலங்கை கால்பந்து அணி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே 200 ஆவது இடத்திற்கு ஏற்றம் கண்டிருக்கிறது என்றால் சாதாரணப்பட்டதல்ல.
பிஃபா தரவரிசையில் இலங்கை அணி 2023 ஏப்ரலில் 207 ஆவது இடத்திற்கு சரிந்திருந்தது. அதாவது பிஃபா தரவரிசையில் இருக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 210 என்ற நிலையில் பின்பக்கத்தில் இருந்து பார்த்தால் நான்காவது இடம். பின்னர் 2023 நவம்பரில் 204 ஆவது இடத்தை அடைந்த இலங்கை கடந்த ஜூனில் 205 ஆவது இடத்திற்கு சரிந்து தற்போது 200ஆவது இடத்தைத் தொட்டிருக்கிறது.
இலங்கையை பொறுத்துவரை இதுவும் மிகப்பெரிய முன்னேற்றம் தான். அதாவது அரசியல் தலையீடுகள் காரணமாக அண்மையில் பிஃபா தடைக்கு உள்ளாகி அதனால் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் போதிய சர்வதேச போட்டிகள் இன்மை என்று ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த பின்னர் இந்த ஏற்றம் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்த கம்போடியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை பெற்ற வெற்றிகள் உலகக் கால்பந்தில் இலங்கை அணி ஏணிப்படி ஏற காரணமானது.
கம்போடியாவுக்கு எதிராக அண்மையில் நடந்த இரண்டு சுற்று தகுதிகாண் போட்டியின் முதல் சுற்றுப் போட்டி கொழும்பில் நடந்த போது ஆட்டத்தை கோலின்றி சமன் செய்த இலங்கை அணி இரண்டாம் சுற்றுப் போட்டி கம்போடியாவில் நடந்தபோது அதனை பெனால்டி சூட் அவுட் முறையில் வென்றது.
இதன்மூலம் இலங்கை கால்பந்து அணியால் 2025 ஆசிய கிண்ண தகுதிகாண் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிந்தது. இதன்போது இலங்கை அணி உள்நாடு மற்றும் வெளிநாடு என்று ஆறு போட்டிகளில் ஆடும்.
முன்னதாக கடந்த மார்ச்சில் இடம்பெற்ற பூட்டானுக்கு எதிரான போட்டியை 2–0 என வென்ற இலங்கை அணி பப்புவா நியூகினியுடனான ஆட்டத்தை கோலின்றி சமன் செய்தது. முன்னதாக கடந்த ஒக்டோபரில் கொழும்பில் நடந்த யெமன் அணிக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியையும் 1–1 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. இதன்படி பார்த்தால் இலங்கை கால்பந்து அணி கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டில் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தோற்றதே இல்லை. இதற்கு ஏற்ப இலங்கை கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் குவைட் நாட்டின் அப்துல்லா அல் முத்தைரியின் வருகையும் சாதகமாகவே இருக்கிறது.
கம்போடியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெல்வதற்கு இவரின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில் அவரின் பதவிக் காலமும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெற்றிகளுக்கு மத்தியில் இலங்கை கால்பந்து அணிக்கு மேலும் சர்வதேச போட்டிகளை வழங்குவதில் இலங்கை கால்பந்து சம்மேளனம் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
இதன்படி ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அணி மியன்மாருக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தலா ஒரு போட்டியில் ஆடப்போகிறது. இதன் முதல் போட்டி ஒக்டோபர் 10 இலும் அடுத்த போட்டி ஒக்டோபர் 13 இலும் நடத்த ஏற்பாடாகி இருக்கிறது.
இலங்கையுடன் போட்டிகளில் ஆடுவதற்கு சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் மாலை தீவை இலங்கை கால்பந்து நாடியபோதும் அது வெற்றி அளிக்காத நிலையிலேயே தற்போது மியன்மாருடன் பலப்பரீட்சை நடத்தப்போகிறது. எனினும் பிஃபா தரவரிசையில் 167 ஆவது இடத்தில் இருக்கும் மியன்மார் என்பது இலங்கைக்கு பெரும் சவாலான அணி தான்.
அதேபோன்று எதிர்வரும் நவம்பரில் திஜிகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுடன் முக்கோண கால்பந்து தொடர் ஒன்றிலும் ஆட இலங்கை திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த முயற்சி இன்னும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே இருப்பதோடு முடிவாகவில்லை.
இதுவெல்லாம் இலங்கை கால்பந்து அணியின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது பலத்த எதிர்பார்ப்பு. ஆனால் அண்மைக் காலத்தில் இலங்கை கால்பந்தில் ஏற்பட்டிருக்கும் அதிரடி முன்னேற்றங்கள் என்பது உண்மையில் இயற்கையான வளர்ச்சியா அல்லது செயற்கையாக நிகழ்ந்ததா என்ற சந்தேகங்கள் இல்லாமல் இல்லை.
இலங்கை தேசிய கால்பந்து அணி என்பது இப்போது முழுக்க முழுக்க உள்நாட்டில் கால்பந்து ஆடி அதில் இருந்து தேசிய அணி வரை முன்னேறி இலங்கைக்கு வெற்றி தேடித்தந்த வீரர்களைக் கொண்டதல்ல. அதாவது உள்நாட்டு வீரர்களுக்கு அப்பால் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டு வீரர்கள் மீதே இலங்கை கால்பந்து சம்மேளனம் அதிக நாட்டம் காட்டி வருகிறது.
இப்போது இருக்கும் இலங்கை தேசிய அணியை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட பாதிப் பேர் இரட்டை பிரஜா உரிமை பெற்ற வெளிநாட்டில் கழகமட்டப் போட்டிகளில் ஆடுபவர்கள். இவர்கள் இலங்கை கால்பந்து கட்டமைப்பில் இருந்து தோன்றியவர்கள் அல்ல.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஜன் ஹிங்கர்ட், ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஜேனச் தயாபரன், சுவீடனில் பிறந்து வளர்ந்த ஆதவன் ராஜமோஹன் என்று இந்தப் பட்டியல் நீண்டது. குறிப்பாக இந்த ஆண்டில் இலங்கை அணி சர்வதேச கால்பந்தில் போட்ட அனைத்து கோல்களையும் பெற்றவர்கள் இரட்டைப் பிரஜா உரிமையை வைத்திருப்பவர்கள் தான். இதன் உச்ச கட்டம் கம்போடியாவுக்கு எதிரான இரண்டாம் சுற்றுப் போட்டியில் களமிறங்கிய முதல் பதினொருவரில் கோல் காப்பாளரான அணித் தலைவர் சுஜான் பெரேரா மாத்திரம் தான் உள்ளூர் மட்ட கால்பந்து போட்டிகளில் ஆடுபவராக இருந்தார்.
உண்மையில் இது ஆரோக்கியமானதல்ல. இலங்கை கால்பந்து முன்னேற்றப் பாதையில் செல்வதான மாயையை தந்தாலும் நீண்ட காலத்திற்கு இது நிலைக்காது. ஒரு கட்டத்தில் இருந்ததை விடவும் தேசிய அணி அதல பாதாளத்தில் விழும் ஆபத்து அதிகம்.
இது இலங்கை கால்பந்து சந்திக்கும் அரசியல், நிர்வாகப் பிரச்சினைக்கு அப்பால் மைதானத்திலும் மோசமான பாதிப்பைச் செலுத்தக் கூடியதாக இருக்கும். உள்ளூர் திறமைகளைக் கொண்ட முழுமையான அணி ஒன்றை உருவாக்கினாலேயே நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியும். அதற்கு அடிமட்டத்தில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சியில் இன்னும் அக்கறை காட்டுவது அவசியம்.
குறிப்பாக உள்ளூர் மட்டக் கால்பந்து போட்டிகள் காணாமல்போயிருப்பது கலவைக்குரியது. வழக்கமான கால்பந்து தொடர்களை நடத்தாமல் இருப்பது புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் அவ்வாறான திறமைகளை இனங்காண்பதற்கு முடியாமல்போவதோடு அது எதிர்கால கால்பந்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இலங்கை கால்பந்து சம்மேளனம் அடிமட்ட கால்பந்துக்கு முன்னுரிமை அளிக்காதது நாடெங்கும் உள்ள பல கால்பந்து லீக்குகளுக்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
போதுமான நிதி இல்லாததால் இளம் திறமைகளை தேடும் மாவட்ட கால்பந்து லீக்குகளை நடத்துவதில் சிக்கல் உள்ளது. பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கணிசமான நிதி கிடைத்தபோதும் உள்ளூர் கால்பந்து லீக்குகளுக்கு போதுமான நிதி கிடைத்ததாக தெரியவில்லை.
உறுதி அளிக்கப்பட்ட நிதியிலும் பகுதி அளவு மாத்திரமே வழங்கப்பட்ட சூழலில், மாவட்ட லீக்குகள் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. இது முறையான கால்பந்து போட்டிகளை நடத்துவதை தடுப்பதோடு இறுதியில் புதிய தலைமுறை திறமைகளை அடையாளம் காண்பதையும் தடுத்துவிடும். அதாவது அடிமட்டத்தில் கால்பந்து சாரியாக இல்லை என்றால் புதிய கால்பந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான சங்கிலி ஒரு கட்டத்தில் அறுந்துபோய்விடும்.
நாட்டில் பாடசாலை கால்பந்து ஓரளவு வலுவாக இருந்தாலும் அங்கிருந்து உருவாகும் வீரர்கள் தேசிய அணி வரை முன்னேறுவதற்கு உள்ளூர் கால்பந்து கட்டமைப்பு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்த வெற்றிகள் நீண்ட காலத்திற்கு நிலைக்காது.
எஸ்.பிர்தெளஸ்