அரசு வாகனங்களைத் முறைகேடாகப் பயன்படுத்துவது கடுமையான குற்றச் செயலாகும். முன்னாள் அமைச்சரான ஏ.எச்.எம்.பௌசிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை (ஒத்திவைக்கப்பட்ட தண்டனை) விதிக்கப்பட்டது. அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காகும். மக்கள் பணத்தில் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களை மக்களுக்குச் சேவை செய்யவே பயன்படுத்த வேண்டும். எனினும் அவ்வாறு மக்களுக்கு சேவை செய்யும் போர்வையில் காலாகாலமாக அரச வாகனங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது நாட்டு மக்களுக்கு பிரதான சேவைகளை வழங்கும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே என்பது மிகவும் வருத்தமளிக்கும் செயலாகும். இதில் நீண்டகாலமாக மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்று வருவது நாட்டின் துரதிர்ஷ்டமாகும். அமைச்சர் ஒருவருக்கு, அமைச்சின் செயலாளருக்கு அல்லது மேலதிகச் செயலாளர் ஒருவருக்கு, வேறு அனுமதிக்கப்பட்ட அதிகாரிக்கும் வாகனங்களை வழங்குவது சட்டபூர்வமானதாகும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அமைச்சரோ அல்லது செயலாளரோ பஸ்ஸிலோ அல்லது முச்சக்கர வண்டியிலோ வந்து பொது மக்களுக்கான சேவைகளை செய்ய முடியாது.
என்றாலும் அனுமதிக்கப்பட்ட பணிக்குழுவைத் தவிர வெளியாட்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுமானால் அது கண்டிப்பாக துஷ்பிரயோகமேயாகும்.
எனினும் அனுமதிக்கப்பட்ட பணியாளர் குழுவிற்கு அப்பால் சென்று வேறு பணிக்குழு ஆலோசகர் பதவிகளை உருவாக்கி அவர்களுக்காக வாகனங்கள், எரிபொருள் மற்றும் அரச சம்பளம் வழங்கப்படுமாயின் அவ்விடத்தில் இருப்பதும் துஷ்பிரயோகத்தைப் போன்று ஊழல் மோசடிகளுமேயாகும்.
அதேபோன்று, அரசு வாகனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களிடம் அதிக பணம் செலுத்தி, வாடகை அடிப்படையில் பெற்று, அவ்வாகனங்களைத் தமது நண்பர்கள் நெருக்கமானவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுமாயின் அவ்விடத்தில் இடம்பெறுவது தெளிவான மோசடியும், திருட்டுமே அன்றி துஷ்பிரயோகம் அல்ல.
உயர் மட்டத்தில் இடம்பெறும் திருட்டை நிறுத்தாமல் கீழ் மட்டங்களில் இடம்பெறும் திருட்டுக்களை நிறுத்த முடியாது.
2012ம் ஆண்டு முதல் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை தற்போது தெளிவாகியுள்ளது.
அரசு அமைச்சர் ஒருவரோ, செயலாளரோ அல்லது வேறு அதிகாரியோ பயன்படுத்தும் வாகனமாக இருந்தால், அவ்வாகனங்கள் அவர்களது பதவிக் காலம் முடிந்ததும், போக்குவரத்துத் துறை அதிகாரி அல்லது செயலாளர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையாகத் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்.
அப்படிச் செய்யாமல், அவ்வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் சென்றாலோ அல்லது சாரதிகள் மூலம் அவ்வாகனங்களை திருப்பி அனுப்பினாலோ கண்டிப்பாக அங்கு நாம் மேலே குறிப்பிட்ட முறைகேடுகள் அல்லது ஊழல் மோசடிகள் இருக்கும்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்திலும் மற்றும் இலங்கை மன்றக் கல்லூரிக்கு அருகிலும், லக்சலவிற்கு அருகிலும், ஸ்ரவஸ்தி ஆகிய இடங்களிலும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, வாகனங்களை விட்டு சென்றவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்கள் பற்றிய தகவல்கள் ஆவணங்களில் உள்ளதாக அவர் தினகரனிடம் தெரிவித்தார்
“அந்த 833 வாகனங்களில் 29 வாகனங்கள் 2022ல் காணாமல் போயுள்ளன. அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார், அவற்றிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம். இவையனைத்தும் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். அதனடிப்படையில், விசாரணை அதிகாரிகள் காலி முகத்திடல் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று இது தொடர்பான விசாரணைகளை வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
அனைத்து அதிகாரிகளினதும் பதவிக்காலம் அல்லது உத்தியோகபூர்வ காலம் முடிவடையும் போது வாகனங்களை முறையாக ஒப்படைக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அந்த வாகனங்கள் யாரிடம், எப்படி ஒப்படைக்கப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறோம், அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
தாரக விக்ரமசேகர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்