புயல் வீசி ஓய்ந்தது போல 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வன்முறை சம்பவங்கள் இல்லாத போதிலும், தேர்தல் காலத்தில் நிலவிய பரபரப்பு மிகவும் அதிகம்.
தற்போது அரசியல் பரபரப்பு ஓரளவு அடங்கியுள்ள நிலையில், மற்றுமொரு விறுவிறுப்பான தேர்தல் களத்துக்கு நாடு தயாராகி வருகின்றது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 75 ஆவது தேர்தல் முடிவடைந்து 76 ஆவது தேர்தலுக்கு நாடு தயாராகி வருகின்றது.
இதுவரை அதாவது 1931ஆம் ஆண்டு முதல் இதுவரை எல்லாமாக 75 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1931ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது அரசு சபைக்கான தேர்தலும், 1936ஆம் ஆண்டு இரண்டாவது அரசு சபைக்கான தேர்தலும், 1947ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை 16 பாராளுமன்றத் தேர்தல்களுக்கும், ஒரு சர்வஜன வாக்கெடுப்பு, அவ்வப்போது நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என 75 தேர்தல்களுக்கு இதுவரை நாடு முகங்கொடுத்துள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஒப்பீட்டளவில் அமைதியான மற்றும் வன்முறைகள் குறைந்த தேர்தலாக 2024 ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமக்கு மாற்றமொன்று வேண்டும் என்பதைத் தெரிவிப்பதற்கு ஜனநாயக முறையொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்த தேர்தலொன்றை எதிர்பார்த்திருந்தனர்.
இதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்பார்த்திருந்த போதும், நிதியைக் காரணம் காட்டி அத்தேர்தலை முன்னைய ஆட்சியாளர்கள் நடத்தியிருக்கவில்லை. இது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பது உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பாக வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதித் தேர்தலையும் ஒத்திப்போடுவதற்கு அல்லது இழுத்தடிப்பதற்கு எடுக்கப்பட்ட பிரயத்தனங்கள் கைகூடியிருக்கவில்லை. இது விடயத்தில் உறுதியாக இருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை நிறைவேற்றியிருக்கின்றது.
வன்முறைகளற்ற தேர்தல்:
இவ்வாறு மக்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு செய்திகளைக் கூறிச் சென்றுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் பிரசார காலத்திலும் சரி, தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் சரி பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை. தேர்தல் விதிமீறல்கள் குறித்த முறைப்பாடுகள் பல பதிவாகியிருந்தபோதும், வன்முறைச் சம்பவங்கள் எது பற்றியும் முறையீடு செய்யப்படவில்லை எனத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரங்களின் போது இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்கள், கைகலப்புகள், அடிதடிகள் என வன்முறைச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இம்முறை தேர்தல் இந்த நிலையிலிருந்து விடுபட்ட தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. தேர்தலில் போட்டியிட்ட 39 வேட்பாளர்களுக்கும் இதற்கான கௌரவம் சென்றடைய வேண்டும்.
தேர்தல் பிரசாரங்களின் போது மற்றைய கட்சிக்காரர்கள் மீது வன்முறைகளைத் தூண்டும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. சமூக ஊடகங்களிலும், பொதுமேடைகளிலும் மற்றைய வேட்பாளர்களைக் கடுமையாக விமர்சித்து, சேறுபூசியிருந்தாலும் அவை வன்முறைகளாக மாறியிருக்கவில்லை என்பது நாட்டுக்கு சாதகமான செய்தியாகும்.
அதற்கும் அப்பால், தேர்தலுக்கான அரசியல் மேடைகளில் பகிரங்கமாக இனவாதம் பேசப்படாமையும் சிறந்தொரு அறிகுறியாக அமைந்தது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு அனைத்து இன மக்களையும் சமமான முறையில் பாதித்திருப்பதால் இனவாதத்தை இம்முறை தேர்தலில் விற்கமுடியாமல் போய்விட்டது என்பதே உண்மை.
இவ்வாறானதொரு அமைதியான தேர்தலை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாராட்டுகள் சென்றடைய வேண்டும். தேர்தல் மாத்திரமன்றி, தேர்தலுக்குப் பின்னரான அதிகாரப் பரிமாற்றமும் எவ்வித முரண்பாடுகளும் இன்றி சுமுகமான முறையில் இடம்பெற்றிருப்பது நாட்டுக்குப் புதியதொரு கலாசாரத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது. வெற்றிக் கொண்டாட்டங்களும் இன்னொரு மக்களை அல்லது வெற்றியாளருக்கு எதிராகச் செயற்பட்டவர்களின் மனங்களை நோகடிக்கச் செய்யும் வகையில் அமையவில்லையென்பது மற்றுமொரு விடயமாகும். பட்டாசுகொளுத்தி தேர்தல் வெற்றி கொண்டாடப்படாமைக்கு மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
அநுர குமாரவின் வெற்றி:
அமைதியான தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பலமுனைப் போட்டிக்களமாகத் தொடங்கிப் பின்னர் மும்முனைப் போட்டிக்களமாக மாறியது. இறுதிக் கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான போட்டியாக அமைந்தது.
ஜே.வி.பியினர் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் ஆகியோர் இணைந்து சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய தேசிய மக்கள் சக்திக்கு இந்தத் தேர்தல் பாரியதொரு வெற்றியாக அமைந்தது.
தேசிய மக்கள் சக்தியானது 2021ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தலைத் தொடங்கியிருந்தது. நாட்டின் சகல பகுதிகளுக்கும் சென்று கூட்டங்களை நடத்துவது, மக்களைச் சந்திப்பது எனத் தொடர்ச்சியான பிரசாரங்களை அநுர குமார தலைமையிலான குழுவினர் ஆரம்பித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்ற விடயத்தில் ஏனைய அரசியல் கட்சிகள் சிந்தித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தேசிய மக்கள் சக்தி முழுவீச்சில் தனது பிரசாரங்களை கிராம மட்டங்களில் முன்னெடுத்திருந்தது.
ஏற்கனவே ஆயத்தமாக இருந்தமையால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியானதும் தேசிய மக்கள் சக்தி தனது பிரசாரத்தை முடுக்கி விட்டிருந்தது. சம்பிரதாயபூர்வமான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடங்கள் பலவும் ரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கு உறுதுணையாகப் பிரசாரங்களுக்கு உதவியபோதும், சமூக ஊடகங்களை அதிகளவாக நம்பி தேசிய மக்கள் சக்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கட்சியின் கூட்டங்களின் ஒருங்கிணைப்புக்கள் பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆரம்பம் முதலே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கணிசமான மக்கள் கலந்துகொள்ளத் தொடங்கியிருந்தபோதும், அக்கூட்டங்கள் யாவும் போலியாக ஒன்று திரட்டப்பட்ட மக்கள் எனக் காண்பிப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய மக்கள் சக்தியினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தால் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாமல் போய்விடும், 88-89ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்தது போல வன்முறைகள் அதிகரிக்கும் என்பவை போன்ற மக்களை அச்சமூட்டும் விடயங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இருந்தபோதும் எது எதனையும் கருத்தில் கொள்ளாது 56 இலட்சத்து 34ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அதேநேரம், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக 43 இலட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 22 இலட்சத்து 99 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் வாக்களித்திருந்தனர்.
மொத்தமாக வாக்களித்தவர்களில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறிய போதும், இரண்டாவது விருப்பு வாக்குகளும் கணக்கெடுக்கப்பட்ட பின்னர் அநுரகுமார திசாநாயக்க 42.31 வீத வாக்குகளைப் வெற்றி பெற்றதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளும் சவால்:
நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன், எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ள நாடு மிகவும் சவால் மிக்கது. பொருளாதார ரீதியிலும், பல்வேறு வழிகளிலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியைவிட்டுச் செல்லும்போது வெளியிட்டிருந்த கருத்தில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலங்கை என்ற குழந்தையை கயிற்றுப் பாலத்தில் பாதுகாப்பாகத் தூக்கிக்கொண்டு வந்தேன். இதிலிருந்து இந்தக் குழந்தையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு ஜனாதிபதி அநுரவுக்கு உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் இது சவாலான பொறுப்பாகவே அமைகின்றது. இருந்தபோதும், 25 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அனுபவம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொண்ட பல்வேறு சவால்களில் கிடைத்த அனுபவத்தின் ஊடாக நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான திறமை ஜனாதிபதி அநுரவுக்கு உள்ளது என்பது பலரதும் கருத்தாகும்.
ஆரம்பத்திலேயே ஜனாதிபதி மேற்கொண்ட ஒரு சில நடவடிக்கைகள் பலரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. குறிப்பாகப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர், தாம் உட்பட மூவரைக் கொண்ட அமைச்சரவையை நியமித்திருந்தார். இதில் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரியவை நியமித்தமை பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் வாய்ப்பில் கலாநிதி பட்டத்தைப் பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த ஹரிணி அமரசூரியவை பிரேரித்திருந்தனர். ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருந்தபோதும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஹரிணி அமரசூரியவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பாராளுமன்றத்திற்கு நுழைந்த கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயமே காணப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்ற பொதுவான மக்கள் கருத்து இருந்தபோதும், ஹரிணி அதில் விதிவிலக்கானவராகப் பார்க்கப்பட்டார். இவ்வாறு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பெண் அரசியல்வாதியைப் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு சிறப்பானது.
இதன் மூலம் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும், தெற்காசியாவிலேயே எந்தவித குடும்ப அரசியல் பின்னணியும் இன்றித் தெரிவான முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அது மாத்திரமன்றி, புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் வகையில் அமைச்சின் செயலாளர்கள் பெருமளவில் மாற்றப்படவில்லை. ஏற்கனவே வகித்த பதவிகளுக்கே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், பலர் ஏற்கனவே இருந்த பதவிகளில் இருக்கின்றனர். அரச இயந்திரம் என்ற கப்பல் கவிழ்ந்துவிடாது தொடர்ந்தும் பயணிப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்திருப்பதையும் அரசியல் அவதானிகள் சாதகமான நிலைப்பாடாகப் பார்க்கின்றனர். இதன் மூலம் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
புதிய ஜனாதிபதியுடன் விரைவில் பேச்சுக்களைத் தொடங்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியமும் அறிவித்துள்ளது. எனவே, ஆரம்பத்திலேயே நல்ல சமிக்ஞைகள் வெளியாகியிருப்பதால் நாடு சரியான பாதையில் பயணிப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.