19 ஆம் நூற்றாண்டின் பிற்கூறில், சட்ட நிரூபண சபையில் தனியான முஸ்லிம் பிரதிநித்துவம் தேவை என்ற கோரிக்கை வலுவடைந்தது.
இதன் விளைவாக, 1889 இல் எம்.சி.அப்துர் ரஹ்மான் பிரிட்டிஷாரால் சட்ட நிரூபண சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டார்.
நவீன கால முஸ்லிம் அரசியலின் தொடக்கப் புள்ளியாக ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுவர். பின்னர் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எண்ணிக்கைப் பெரும்பான்மை- எண்ணிக்கைச் சிறுபான்மை என்ற விவகாரம் கூர்மை பெற்றது.
அப்போது, ‘நாட்டின் சுதந்திரம்தான் முதன்மையானது. அதற்காக எமது விடயங்களை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளோம்’ என்று, அப்போதைய முஸ்லிம் தலைவரான ரீ.பி.ஜாயா பேசினார்.
சுதந்திர இலங்கையில் தேசிய அரசியல் கட்சிகளில் இணைந்து, முஸ்லிம் தலைவர்கள் பயணித்தனர்.
இதன்போது சமூகத்துக்குப் பயனளிக்கும் பல்வேறு விடயங்கள் சுமுகமாக நடந்தேறின. இந்தக் காலகட்ட அடைவுகளுக்கு ஒரு நீண்ட பட்டியலே போடலாம்.
அதன் பின்னர், 1980 களின் பிற்கூறில் கூர்மை பெற்ற சிவில் யுத்தம் புதிய சமூக-அரசியல் சூழமைவை (New Socio-Political Context) உருவாக்கியது.
போரினால் முஸ்லிம் சமூகமும் பாதிப்படையத் தொடங்கியது. படுகொலைகள், கப்பம் கோரல், ஆட்கடத்தல்கள், விவசாய நிலங்களைக் கைவிட வேண்டி வந்தமை… என்று பல இருப்பு சார்ந்த நெருக்கடிகள் உருவாகத் தொடங்கின.
இந்த சவால்கள், அச்சுறுத்தல்கள் குறித்து பிரதான கட்சிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. அவற்றில் அங்கம் வகித்த முஸ்லிம் உறுப்பினர்கள் கூட, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தத் தவறினர். இது முற்றிலும் வெறுமையான, கைவிடப்பட்ட சூழலொன்றை உருவாக்கியது.
இந்த வெற்றிடமே தனியான முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தேவையை வலுவாக உணரச் செய்தது.
அதன் பின்னரே முஸ்லிம் இனமையக் கட்சி உருவானது. தனியான முஸ்லிம் கட்சியின் வருகை பல்வேறு சாதக, பாதகங்களை ஏற்படுத்தியது. இப்போது அது தனி வரலாறாகியுள்ளது.
முஸ்லிம் அரசியல் கட்சி ஒருமையில் தொடங்கி, இன்று காங்கிரஸ்கள் – கிளைக் காங்கிரஸ்கள் என்று பன்மையாகியுள்ளன.
ஆனால், கட்சிகள் பெருகிய அளவுக்கு, மக்களது அரசியல் அபிலாசைகள் முறைப்படுத்தப்பட்டதாகவோ- கூர்மைப்படுத்தப்பட்டுள்ளதாகவோ தெரியவில்லை.
பேரம் பேசுதல் என்ற பெயரில், சந்தர்ப்பவாத அரசியலே தொடர்கிறது. உரிமைக் கோரிக்கைகள் தளர்ந்து போய், அபிவிருத்தி அரசியல் என்னும் பெயரில் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தனர்.
இந்த அடிப்படை மாற்றத்தால் முஸ்லிம் அரசியல் மலினப்படுத்தப்பட்டு விட்டது. அதன் தர்க்க விளைவு, சூதாட்ட அரசியலாக மாறிவிட்டிருப்பதாய் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
தலைமைகள் என்ற பெயரில் சில தனிநபர்களது சுயநல நோக்கங்களுள் புதைந்து போயிருக்கும் முஸ்லிம் அரசியலை மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என பரவலாகப் பேசப்படுகிறது.
திரும்பத் திரும்ப பசப்பு வார்த்தைகள் பேசும் மாமூல் அரசியலாக அது குறுகிப் போயுள்ளது. முஸ்லிம் அரசியல் இன்று ஒரு முட்டுச் சந்தில் (Deadlock)
வந்து இறுகியிருக்கிறது.
முன்னே நகரும் பாதை பற்றிய தெளிவின்மையைத்தான் அதன் தலைவர்கள் அடிக்கடி பிரதிபலிக்கின்றனர். சரியாகச் சொன்னால், முஸ்லிம் அரசியல் அதன் தொலைநோக்கை – தூர தரிசனத்தை (Vision) இழந்து கையறு நிலையில் நிற்கிறது.
தொடங்கிய காலத்தின் நோக்கங்களிலிருந்து அது பெரிதும் தடம்புரண்டு, திசைமாறித் தடுமாறி நிற்கிறது.இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள யுகப் புரட்சியோடு – தளமாற்றத்தோடு (Paradigm Shift), முஸ்லிம் அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் அபிலாசைகளும் பரவலான வாத-விவாதங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக, முஸ்லிம் அரசியல் இன்று ஒரு புதிய திசைவழியை நோக்கித் திரும்பியிருக்கிறது.
முஸ்லிம் அரசியலுக்குள்ளும் ஒரு அமைதி வழியான- ஜனநாயகபூர்வமானை ‘அரகலய’ (போராட்டம்) நிகழ வேண்டும் என்று பலரும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்; எழுதவும் செய்கின்றனர். இது மாற்றத்தின் தேவையை வலியுறுத்துகிறது.
தகுதியற்றவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கும் முஸ்லிம் அரசியலை மீட்டு, ஒரு முறைமை மாற்றத்தின் (System Change) பால் வழிநடத்த வேண்டும்- திசைப்படுத்த வேண்டும்- என்ற குரல்கள் சமூகத் தளத்திலிருந்து வலுவாக மேற்கிளம்பி வருகின்றன. 76 வருடங்களாக இந்நாட்டை மாறி மாறி ஆண்ட சக்திகளின் கையிலிருந்து நாடு மீட்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் புதிய திசைவழியில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டை வழிநடத்திச் செல்கிறார்.
இதில் நாமும் பங்காளிகளாக மாற வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பும் பணி நமது தோள்களிலும் உள்ளது. நாம் பார்வையாளராக ஒதுங்கியிருக்க முடியாது. பங்காளர்களாக மாற வேண்டும்.
ஆதலால், புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் பெற்றுள்ள தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்ற வலுவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
கட்சிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முஸ்லிம் அரசியல் புதிய திசைவழியில் நகரத் தொடங்கி விட்டது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் சொல்லும் பாதையை விட, சுயாதீனமான அரசியல் தெரிவை நோக்கி, முஸ்லிம் இளைஞர்களும் புத்திஜீவிகளும் தொழில்வாண்மையாளர்களும் கருத்துருவாக்கத் தலைவர்களும் நகரத் தொடங்கி விட்டனர்.
இதில் கணிசமானவர்கள் பெண்களும் யுவதியரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றத்தின் வீச்சு, வெவ்வேறு தலைமுறையினரிடையே வெவ்வேறு பரிமாணங்களில் விரவிப் பரவியுள்ளது.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் இதில் மிக முன்னணியில் நின்று இயங்குகின்றனர்.
மரபார்ந்த அரசியல் போக்கிலிருந்து மாறுபட்டு, இனமைய அரசியல் (Ethnocentric Politics) போக்கிலிருது விலகிச் செல்லும் அடையாளங்களையும் மாற்றத்தின் சமிக்ஞைகளையும் முஸ்லிம் அரசியல் வெளிக்காட்டத் தொடங்கி விட்டது.
2015 ஜனாதிபதித் தேர்தலில், குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதும் ஜனநாயக மீட்பும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதும் ஊழல் ஒழிப்புமே பிரதான பேசுபொருள்களாக இருந்தன.
அப்போது மக்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் தீர்மானித்த பின்னரே- வேறு வழியில்லாமல் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதே தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு அப்போது ஆளாகின.
ஏறத்தாழ இப்போதும் அப்படித்தான். 2024 ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் அரசியலின் புதிய பண்பு மாற்றத்தை உய்த்தறிய முடிகிறது.
2015 போலவே 2024 இலும் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் கட்சிகளின் தீர்மானத்திற்காகக் காத்திருக்கவில்லை.
கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் புதிய ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் தீவிரமாக ஆதரித்தனர்.
முஸ்லிம் அரசியல் நெறி பிறழ்ந்து வழி தவறிச் செல்கின்றன என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முஸ்லிம் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தத் தடுமாற்றத்தை, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிக வெட்ட வெளிச்சமாகப் புலப்படுத்தின.
ஆதலால், தேசிய அரசியல் மாற்றத்திற்கு சமாந்தரமான மாற்றம் ஒன்று தேவை என்ற குரல்கள், முஸ்லிம் அரசியல் அரங்கிலும் வெகுஜனத் தளத்திலும் தாக்கம் மிக்க வகையில் வெளிப்பட்டு வருகிறது.
முஸ்லிம் அரசியல் முற்றாக அழியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அது வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பது அதைவிடப் பெரிய உண்மை.
அந்தந்த சமூகங்களின் தனித்துவங்களுக்கு மதிப்பளித்து, எல்லா இலங்கையரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டு வருகிறது.
ஆழமான இனப் பிளவுகளாலும் துருவமயப்பட்டுள்ள தன்மையாலும் (Polorization), நலிவடைந்திருக்கும் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.
ஊழல் மோசடியைக் கட்டுப்படுத்தி, பொருளாதார மீட்சியை மீள நிலைநிறுத்துவது மட்டுமல்ல, பன்மைத்துவமும் இன நல்லுறவும் மிகமிக அவசியம் என நாட்டு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
அதனால்தான் இந்தத் தேர்தலில் இனவாதக் குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை. கொஞ்சம் தளர்ந்திருந்தன.
முஸ்லிம் அரசியலும் பல்லின – பல்சமூக நல்லிணக்கப் பாதையில், சுயகௌரவத்தோடும்சமத்துவத்தோடும் ஜனநாயகப் பண்புகளோடும் நகரவே விரும்புகிறது.
அதுவே இப்போதுள்ள வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
‘தனித்துவமும் ஒன்றிணைந்த தேச நலனும்’ என்ற இணைப்பு, முஸ்லிம் அரசியலை மேலும் மெருகேற்றி வருகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த மாற்றத்தை ஜனாதிபதித் தேர்தலை விட, பொதுத் தேர்தல் இன்னும் சிறப்பாகவும் துல்லியமாகவும் அடையாளம் காட்டும் என்று துணிந்து எதிர்வு கூறலாம்.
முஸ்லிம் அரசியலின் புதிய மாற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பலாம்.
சிராஜ் மஷ்ஹூர்