இந்தத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியின் ஒருசாரார் ஜனாதிபதி வேட்பாளருடன் உடன்பாடு செய்து கொண்டு தற்போது படுகுழியில் குப்புற விழுந்திருக்கின்றார்கள். தோல்வியடையும் வேட்பாளருடன் ஒப்பந்தம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார் ‘பொது வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வெற்றியடையும் ஜனாதிபதியுடன்தான் நாங்கள் பேரம் பேசலாம். இப்போது அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் அவ்வாறன முயற்சிகள் சாத்தியமாகும் என்கிறார். அவரது நேர்காணல் வருமாறு…
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நீங்கள் களமிறங்கினீர்கள். இந்தத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் தமிழர் தரப்பில் இதுவொரு வெற்றியாகப் பார்க்கப்படுகின்றதே?
எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் ஒரு சேதி சொல்லப்பட்டிருக்கிறது. வடமாகாணத்தில் மட்டும் எனக்கு ஒரு லட்சத்து பதினாறாயிரம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்திலும் வாக்களித்திருக்கிறார்கள். வட, கிழக்கு சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டாலும் மக்கள் இன்னமும் இணைந்தே இருக்கின்றார்கள் என்பதைத்தான் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்த வாக்குகள் காண்பிக்கின்றன.
இராண்டாவது விடயம் என்னவென்றால் கடந்த காலங்களில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களால் ஏமாற்றப்பட்ட வாக்காளர்கள் தான் இவ்வாறு வாக்களித்திருக்கின்றார்கள். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கும் அந்தச் செய்தி உணர்த்தப்பட்டுள்ளது என்றே நம்புகின்றேன். இப்போது தேசிய அளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அனேகர் எதிர்பாராதது. எனவே ‘பொது வேட்பாளர்’ மூலம் அவருக்கும் சேதிசொல்லியிருக்கின்றோம்.
அதேவேளை சர்வதேசத்துக்கும் தமிழர்களின் அபிலாஷைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக ஒருமித்து வாக்களித்திருக்கின்றார்கள் என்ற செய்தியை சொல்லியிருக்கின்றோம். இலங்கையில் ஐந்தாமிடத்தில் மக்கள் என்னை நிலையிநிறுத்தியிருக்கின்றார்கள் என்பது பெரிய விடயமல்லவா?
இதற்கு முன்னரும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் வேட்பாளராகப் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றிருக்கின்றாரே?
குமார் பொன்னம்பலம் நான் நினைக்கின்றேன். 1982ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 173,934 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் பொது வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் பல்வேறுபட்ட தரப்பினர் எங்களுக்கு பிரசாரம் செய்தார்கள். போராட்டம் இடம்பெற்றதன் பின்னர் சுமார் 12 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இதுவரை காலமும் வேறுபட்ட கொள்கைகளால் சிதறுண்டு போயிருந்தவர்கள். இந்தத் தேர்தல் புலம்பெயர்ந்த மக்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது. அவர்கள் பொது வேட்பாளருக்காக ஒற்றுமைப்பட்டு வாக்களித்திருக்கின்றார்கள். அதேபோலவே சிவாஜிலிங்கமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தல்களில் மக்களிடம் ஒரு அலையை அவர்கள் ஏற்படுத்தவில்லை. எனவே அவற்றுடன் இம்முறைத் தேர்தலை ஒப்பிடமுடியாது. இந்த முறை இடம்பெற்ற 9ஆவது ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதனை வௌிப்படுத்தவே அவர்கள் தேர்தலில் வேட்பாளரை இறக்கியிருக்கின்றார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.
தமிழ்பொது வேட்பாளராக நீங்கள் ஏன் எந்தவொரு பிரதான வேட்பாளருடனும் ஒரு உடன்பாட்டிற்கோ அல்லது ஒப்பந்தமொன்றிற்கோ செல்லவில்லை? அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றிற்கான அடித்தளத்தை இட்டிருக்கலாமல்லவா?
இந்தத் தேர்தலிலும் அவ்வாறு உடன்பாடு செய்துகொண்ட தமிழ்த் தரப்பு உண்டல்லவா? தமிழரசுக் கட்சியின் ஒருசாரார் அவ்வாறு ஒரு உடன்பாட்டைச் செய்து கொண்டு தற்போது படுகுழியில் குப்புற விழுந்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சியில் 90 வீதமானவர்கள் என்னை ஆதரித்தார்கள். 10 சதவீதமானோரே சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள். ஆதரித்ததற்கு அவர்கள் கூறிய காரணம் மூன்று வேட்பாளர்களில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் என்பதுதான். அவர்தான் வெற்றிபெறுவார் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால்தான் தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். தோல்வியடையும் வேட்பாளருடன் ஒப்பந்தம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. வெற்றியடையும் ஜனாதிபதியுடன்தான் நாங்கள் பேரம் பேசலாம். இப்போது அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் அவருக்கான நிலையான அரசாங்கமொன்று இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் அவ்வாறன முயற்சிகள் சாத்தியமாகும்.
‘பொது வேட்பாளர்’ என்பவரை ஜனாதிபதித் தேரதலில் நிறுத்துவதற்கு மேற்கொள்ளபட்ட முயற்சி ஜனாதிபதித் தேர்தலுடன் நின்றுவிடுமா?
உங்களை தேர்தலில் நிறுத்திய கட்சிகள் சிவில் அமைப்புகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
‘பொது வேட்பாளர்’ என்பது ஜனாதிபதித் தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முயற்சிதான். அடுத்த கட்டம் பாராளுமன்றத் தேர்தல். 7 கட்சிகள் இணைந்துதான் பொது வேட்பாளரைக் கொண்டு வந்தன. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் அந்த 7 கட்சிகளும் தாங்கள் தங்களுக்கான பிரதிநிதித்ததுவத்தைப் பெறவேண்டும் என்றுதானே செயற்படும்?
தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தைச் சிதற விடாமல் ஒரே சின்னத்தில் கேட்ட வேண்டும் என்றுதான் நானும் வலியுறுத்தினேன். ஆனால் அது எத்தனை பேருக்கு உவப்பாக இருக்கும்? ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் பிரிந்து போட்டியிட்டாலும் கொள்கை ரீதியான விடயங்களில் அவர்கள் எல்லோரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைந்து ஒரு கொள்கைக்காகச் செயற்படலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தமிழ் தேசிய கட்சிகளில் வெற்றிபெறுபவர்களை ஒன்றிணைத்து செயற்படலாம். இப்போது ஒன்றிணையும்போது வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் கூட பிரச்சினைகள் ஏற்படலாம் . ஆனால் தற்போது பொதுக் கட்டமைப்பில் இணைந்திருக்கும் கட்சிகள் பொதுத் தேர்தலிலும் இணைந்தே போட்டியிடுவதாகவே நான் அறிகின்றேன்.
ஆனால் தமிழரசுக் கட்சியினர் தம்முடன் ஏனையவர்கள் இணையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். எனவே அதில் ஒரு இழுபறியிருக்கின்றது. எப்படியானாலும் வெல்லும் தமிழ் வேட்பாளர்களை ஒன்றிணைத்துச் செயற்படலாம் என்ற நம்பிக்ைக இருக்கின்றது.
அவ்வாறு தேர்தல்களின் போட்டியிடும் போது அரசுக்கு அல்லது தெற்கின் ஏதாவது ஒரு கட்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா?
இதில் ஒன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். நான் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை. பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று 2020 ஆம் ஆண்டே நான் தீர்மானம் எடுத்து விட்டேன். கடந்த ஏப்ரல் மாதம் அதனை பகிரங்கமாக அறிவித்தும் விட்டேன். பொது வேட்பாளராக வரவேண்டும் என்ற அன்புக்கோரிக்கையை ஏற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன்.
அதில் இரண்டு லட்சத்து பதினையாயிரம் வாக்குகளைப் பெற்றதால், பாராளுமன்றத் தேர்தலிலும் நான் போட்டியிடலாம் என்ற பயம் பலருக்கு இருக்கின்றது. நான் இளையவர்களுக்கு வழிவிட்டு அதிலிருந்து எப்போதோ ஒதுங்கி விட்டேன்.
பொதுத் தேர்தலில் நீங்கள் யாருக்கு உங்கள் ஆதரவை வழங்குவீர்கள்? தமிழரசுக்கட்சிக்கா?
நான் இப்போதும் தமிழரசுக் கட்சிக்காரன் தான். அதில் மாற்றமில்லை. தமிழ் தேசிய கொள்கை ரீதியில் போட்டியிடுபவர்களுக்கு நான் எனது ஆதரவை வழங்குவேன். தமிழரசுக் கட்சியிலிருந்து எனக்காக வேலை செய்தவர்களுக்கு நான் கட்டாயம் ஆதரவு வழங்குவேன்.
பொது வேட்பாளருக்காக புலம் பெயர் தமிழர் பலரும் ஆதரவாக பிரசாரம் செய்ததாகக் கூறினீர்கள். எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து தமிழர் பிரதேசங்களிலான அபிவிருத்திகளுக்கு அரசுடன் ஒத்துழைப்பீர்களா?
புலம் பெயர் நிதியைப் பெறுவதில் ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவில்லையே? ஆனால் தற்போதைய ஜனாதிபதியும் புலம் பெயர் நாடுகளுக்குச் சென்று தனக்கு ஆதரவு திரட்டியவர். எதிர்காலத்தில் அவ்வாறு நிதியுதவி பெற அவர் அனுமதிப்பாராக இருந்தால் இணைந்து. செயற்படலாம். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை அவர் பெற்றால் நிச்சயம் அதற்கான வாய்ப்புக் கிடைக்கும். அவரும் பொதுக்கட்டமைப்புடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் அப்போது கிடைக்கும் என்றே நம்புகின்றேன். நிறைவேற்றதிகாரம் இருப்பினும் பாராளுமன்ற பெரும்பான்மையும் அவரது கட்சிக்கு கிடைத்தால் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான ஒரு அங்கீகாரத்தையே மக்கள் உங்களுக்கு வாக்களித்ததன் மூலம் உணர்த்தியிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால் பொதுவாகவே கிழக்கு மக்கள் வடக்கு மக்களுடன் இணைவதை விரும்பவில்லை. என்ற கருத்தொன்று நிலவுகின்றதே?
என்னை பொது வேட்பாளராக நியமித்தபோது பல விமர்சனங்கள் இது குறித்து எழுந்தன. பொது வேட்பாளர் என்பது ஒரு முட்டாள்தனமான முடிவு , எனவே அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். என்று எனது கட்சியிலுள்ள சிலரே கங்கணம் கட்டிக்கொண்டு நின்றார்கள். சுமந்திரனின் பருத்தித்துறைத் தொகுதியிலேயே நான் அவரைத் தோற்கடித்திருக்கிறேன். அதாவது அவர் ஆதரித்த வேட்பாளரான சஜித்தைத் தோற்கடித்தேன்.
வடக்கு மக்களுடன் கிழக்கு மக்களும் இணைந்துவாழவிரும்பவில்லை என்பது மிகவும் பிழையான கூற்று. 2004ஆம் ஆண்டு முதல்தான் இவ்வாறான பொய்கள் கூர்மையடைகின்றன. சில தமிழ் அரசியல் கட்சிகள் தாம் பிழைப்பு நடத்துவதற்காக பிரதேசவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. வடக்கான், கிழக்கான் என்ற குரோத மனோநிலை அவர்களால்தான் உருவானது. என்னை வேட்பாளராக நிறுத்தியதன் பின்னர் கிழக்கில் இருந்து வந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள். வடக்கு மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் கிழக்கு மக்களைப் புறக்கணிப்பார்கள். என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் வடக்கு மக்கள் அந்தக் கருத்துக்கள் பொய் என்பதை நிரூபித்துள்ளனர்.
கிழக்கிலும் பார்க்க எனக்கு வடக்கு மக்கள் தான் அதிகளவில் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே அதுவொரு பெரியவெற்றியல்லவா?
பொது வேட்பாளரை நியமித்ததன் மூலம் இனவாதம் தூண்டப்படுவதாகக் கூடச் சொல்லப்பட்டதே?
பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் இனவாதம் தூண்டப்படுகின்றது என்பதுதான்.
ஏற்கனவே இருந்த சில ஜனாதிபதிகளும், ஆட்சியாள ர்களும் தான் இனவாதத்தைத் தூண்டினார்கள். தற்போது இனவாதத்துக்கு சிங்கள மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். அரகலய போராட்டம் மூலம் இனவாதத்தை சிங்கள மக்கள் தூக்கியெறிந்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் இனவாதமோ வன்முறையோ இல்லை.
வாசுகி சிவகுமார்