அணுவையும் துளைத்திடும்
அறிவியலும் உயர்ந்திட்டு
அண்டங்கள் கடந்தின்று
ஆகாயம் சேர்ந்திடுச்சு
ஆனாலுமின்னும் பெண்மைக்கு
தீர்வில்லாப் பாதைகளே !
புரையோடிப் போயிருக்கும்
புன்னழிவுச் சாக்கடையாம்
திரைபோட்டு முடக்கிவிடும்
திறமைதனை அடுக்களையில்
நிலைமாறவே எழுபெண்ணே !
நித்திலத்தில் ஜெயித்திடவே !
சித்தம் நிறைத்து
சிறகை விரித்திடும்
வித்தகப் பாதைக்கு
விலங்கிட்டு தடுத்திடும்
பித்தம் பிடித்தோரின்
பிதற்றலை அடக்கியெழு
அரியணை அலங்கரித்து
ஆட்சிபீடம் ஏற்றுவதில்
பிரிவினை காட்டிடும்
பதரானவர் வீழ்ந்திடவே !
பாரினை வென்றிடலாம்
தீயினை ஏற்றிட வா !
பெண்மையில் தீட்டொன்று
பார்த்திடும் வீணர்களின்
தொன்மையான
கொள்கையினை
தொடர்கின்ற அறிவிலிகளுக்கு
உண்மையோ தெரியட்டும்
உலகறிய உதித்துவா !
பாவையென சிரிக்கட்டும்
பேதையென நோக்கட்டும்
வேடிக்கை மனிதர்களின்
வாடிக்கை செயலிதுவே !
நாழிகையும் முடங்கிடாது
நங்கையே ! விடியலாய் வா !