அடையாறு ஆலமரம் போல்
சந்தி ஆலமரம்
எங்கள் தோட்ட
அடையாளம்
ஆலமரம் அடைகாத்த
நோர்த் மாத்தளை
சந்தி இது
நல்ல பல சகவாசம் தந்த
சாதனை புரி சந்தி
பட்டாணி விற்பதும்
பஸ் தரிப்பாய் நிற்பதும்
எங்கள் திருமணத்தில்
ஊர் கோலம் தொடங்கி
மறு வீடு அனுப்பி வைக்கும்
மங்களத் திருச் சந்தி
பள்ளிக்கு பஸ் ஏற்றி
கல்விக்கு வழி காட்டும்
தார்ச் சந்தி
பிரட்டு கலைந்து
மலைக்கு போவோர்க்கு
தாம்பூலம்
தந்து – வாய் சிவக்க
வழியனுப்பும் சந்தி
அரிசி, பருப்பு, சர்க்கரை
ஆக வேண்டிய
அனைத்தையும்
பற்றெழுதி விற்கும்
அங்காடிச் சந்தி
காமன் திருக் கூத்தில்
சங்கரனார் மருகனுக்காய்
தூதன் ஓலை தொடும் சந்தி
கேசவன் தாத்தாவின்
திருத்தேர் உலா வந்து
அடியவர்க்காய்
அருள்புரியும்
அருட் சந்தி
சந்திக் கடை பாலாவின்
சண்முகத்தின் இஞ்சிட்ட
தேநீரை பருகிக் களித்த சந்தி
ஆல மரப் பறவைகளை
‘கெட்டப்’ போல் வில்லால்
சிறுகல் அம்பேத்தி
சிதைக்க அசைவச் சந்தி
யுவதிகள் கூடி
ஊர் வம்பு பேசாத
உத்தமச் சந்தி
சில்லறையாய் கல்லோயா
மது விற்கும் கறுப்புக்
கடைச் சந்தி
சண்டையில்
சந்தி சிரிக்கும் சந்தி
மரண ஊர்வலத்தில்
பாடை மாற்றும் முச்சந்தி
கால்மாக்சும் ஏங்கல்சும்
தாமரையும் மல்லிகையும்
செ.க.வையும்
எஸ்.பொ.வையும்
மேடை யிட்டு ஆய்வு செய்த
இலக்கியச் சந்தி
–
ஆலமரச் சந்தி
40
previous post