இலக்கிய மாதத்தையொட்டி 25ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். இந்நிலையில் கண்காட்சிக்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்ததுடன், அவற்றை பார்வையிட வந்திருந்த மக்களோடும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ‘கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி’ செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி இரவு 9.00 மணிவரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உதார திக்கும்புர, பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப்பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.