புதிய அமைச்சுகளுக்கு அமை வான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புகளை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (27) வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44ஆவது உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் தற்காலிக அமைச்சரவையும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய அரசாங்கத்தினதும் நிறுவனங்களினதும் விடயப்பரப்புகள் அடங்கிய முழுமையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலத்துறை, வலுசக்தி விவசாயம், காணி, மற்றும் கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர் வழங்கல் ஆகிய அமைச்சு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் 26 நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய வரவு-செலவுத்திட்ட திணைக்களம், தேசிய பாதுகாப்பு நிதியம் உட்பட நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 62 ஆகும்.
இலங்கை மின்சார சபை உட்பட 11 நிறுவனங்கள் வலுசக்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 35 ஆகும்.
அதன்படி 134 நிறுவனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கீழ் உள்ள 5 அமைச்சுகளுக்கு 165 நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டன.
அதன்படி சட்ட மாஅதிபர் திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம் உள்ளிட்ட 38 திணைக்களங்கள் நீதி அமைச்சில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களம் உட்பட 45 நிறுவனங்கள் கல்வி அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 நிறுவனங்களில் சுகததாச தேசிய விளையாட்டு அரங்கும் அடங்கும். வர்த்தக அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் உட்பட 41 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் உட்பட 26 நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு கீழ் உள்ள 6 அமைச்சுகள் 142 நிறுவனங்களை கொண்டுள்ளன.
பௌத்த மத விவகார திணைக்களம் உட்பட 53 நிறுவனங்கள் பௌத்த சாசன மற்றும் மத கலாசார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.