உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில், Intrepid கொழும்பு அண்மையில் முதலாவது “சுற்றுலாத்துறையில் பெண்கள்” பயிற்சி அமர்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததாக அறிவித்துள்ளது.
இந்நிகழ்வு கண்டியில் செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெற்றது. நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை பரந்தளவு துறைகளில் ஊக்குவிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் சந்தை அபிவிருத்தி வசதி (MDF) நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) ஆகியவற்றுடன் இணைந்து Intrepid முன்னெடுத்திருந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
45 விண்ணப்பதாரிகளில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு பின்புலங்களைக் கொண்ட சுற்றுலா வழிகாட்டிகளாக திகழ எதிர்பார்க்கும் 11 பெண்கள் முதல் அமர்வில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சிப்பட்டறையினூடாக சுற்றுலாத் துறையில் பிரவேசித்து இயங்குவதற்கு அவர்களுக்கு அவசியமான திறன்கள், அறிவு மற்றும் தன்னம்பிக்கை போன்றன வழங்கப்பட்டிருந்தன. பங்குபற்றுநர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்ச்சித் திட்டம் உண்மையில் வாழ்க்கையை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது. ஒரே விதமான ஈடுபாடு மற்றும் ஆர்வம் மிக்க சக பெண் தலைமையாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை Intrepid ஏற்படுத்தியிருந்தமைக்கு நன்றி. சுற்றுலா வழிகாட்டியாக திகழ்வதற்கான அம்சங்களை மட்டும் பயில்வது என்பதல்லாமல், எமது தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவது மற்றும் சமூக தடைகளிலிருந்து மீள்வதற்கு அவசியமான தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவும் அமைந்துள்ளது. எனது சமூகத்திலுள்ள ஏனைய பெண்களுக்கு நான் முன்மாதிரியானவளாக திகழலாம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.