லெபனானில் பேஜர், வோக்கிடோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்புசாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (17.09.2024) லெபனானின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணி முதல் பெய்ரூட் உட்பட தெற்கு லெபனானின் பல பிரதேசங்களில் பேஜர்கள் திடீர் திடீரென வெடித்துச் சிதறின. சுப்பர் மார்க்கட்டுகள், அங்காடி நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், சந்தைகள் என எல்லா இடங்களிலும் இவ்வெடிப்பு சம்பங்கள் பதிவானதோடு, மரணங்களும் காயங்களும் ஏற்பட்டன.
செய்வதறியாது திகைத்துப் போன லெபனானிய அதிகாரிகள் பேஜர்களை உடனடியாக தூர எறிந்துவிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.
இச்சம்பவம் லெபனான் முழுவதும் உச்சகட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் உடனுக்குடன் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தெற்கு லெபனான் பிரதேசங்களில் அம்புலஸ் பற்றாக்குறை ஏற்பட்டதால் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் அன்புலன்ஸ் வண்டிகளை அவசர உதவிக்கு அழைக்கும் அளவுக்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அவசர அவரசமாக இரத்தம் வழங்க முன்வருமாறு லெபனான் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதற்கேற்ப இரத்ததான முகாம்களும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. வைத்தியசாலை ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் உடனடியாக இரத்து செய்யப்பட்டதோடு, சகல ஊழியர்களும் அவசர அவசரமாகக் கடமைக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட், ‘பேஜர்கள் வெடிப்பு சம்பவங்களில் 2800 பேரளவில் காயமடைந்துள்ளனர். அவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதுவர் முஜிதபா அமானியும் அடங்கியுள்ளார். 300 இற்கும் மேற்பட்டவர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் லெபனான் பாராளுமன்ற உறுப்பினர் அலி அம்மாரின் மகனும் ஒருவராவார்’ என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பெரும்பாலானவர்களுக்கு மார்பு, கண், முகம், வயிறு, தொடைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 500 பேர் கண்பார்வையை இழந்துள்ளனர். சிலருக்கு கைவிரல்களும் இன்னும் சிலருக்கு கைகளின் மணிக்கட்டுக்கு கீழ்ப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த ஈரானிய தூதுவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேஜர் என்பது மூன்று நான்கு அங்குலங்கள் நீளமானதும், இரண்டு மூன்று அங்குலங்கள் அகலமானதும் சுமார் ஒரு அங்குலம் தடிப்பானதுமான ஒரு வயர்லெஸ் தகவல் தொடர்புசாதனமாகும். குறுந்தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த உபகரணத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் மேற்சட்டை பொக்கட் அல்லது நீளக்காற்சட்டை பொக்கட் அல்லது இடுப்புப்பட்டியுடன் பொருத்தி வைத்திருப்பது வழமையாகும்.
அதனால்தான் பேஜர் வெடிப்பு சம்பவத்திற்கு உள்ளானவர்களுக்கு மார்பு, வயிறு மற்றும் தொடை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளவர்களின் வயிற்றின் உட்பகுதி தசைகளில் பேஜரின் நுண்துகள்கள் பதிந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் இச்சம்பவத்தினால் முகம் மற்றும் கண்களில் அநேகருக்கு காயங்கள் ஏற்படக் காரணம் யாதெனில், பேஜர் வித்தியாசமான ஒலி எழும்பியதும் குறுந்தகவல் வந்திருப்பதாகக் கருதி அதனைப் பார்க்க முற்பட்ட சமயம் வெடிப்பு ஏற்பட்டமையாகும். இதன் விளைவாக பலர் பார்வையையும் இழந்துள்ளனர் என லெபனானிய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் குறுகிய நேர காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பேஜர் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டதால் ஈராக் இரண்டு விமானங்களில் சுமார் 100 தொன் மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்ததோடு, ஜோர்தான், எகிப்து, சிரியா, துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அவசர அவசரமாக மருத்துவ உதவிகளை அனுப்பின. குறிப்பாக ஈரான் ஒரு தொகுதி கண் சத்திரசிகிச்சை நிபுணர்களுடன் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தினால் காயமடைந்தவர்கள் லெபனானில் உள்ள 100 வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அதேநேரம், ஒரு தொகுதியினர் ஈரானுக்கும் சிரியாவுக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று லெபனானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேஜர்கள் வெடிப்பு சம்பவம் செவ்வாய்க்கிழமை சுமார் ஒரு மணித்தியாலயம் பதிவான அதேநேரம், மறுநாள் வோக்கிடோக்கி வெடிப்பு சம்பவம் பதிவானதோடு, அதில் 25 பேர் மரணமடைந்ததோடு 608 பேர் காயமடைந்தனர். சிரியாவிலும் பேஜர், வோக்கிடோக்கி வெடித்த சம்பவங்கள் ஏககாலத்தில் பதிவாகின. இந்த வயர்லெஸ் வெடிப்பு சம்பவங்கள் லெபனானில் மாத்திரமல்லாமல், பிராந்திய நாடுகளிலும் உலகிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.
ஐயாயிரம் பேரை கொல்லும் முயற்சி:
இச்சம்பவங்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி குற்றம்சாட்டியதுடன், லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் குற்றம் சாட்டியுள்ளன. இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது ஹிஸ்புல்லாஹ்.
அதேநேரம் பேஜர், ேவாக்கிடோக்கி வெடிப்பு தாக்குதல்களுக்கு பின்னர் வியாழனன்று மாலையில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா, ‘சில நிமிடங்களுக்குள் ஐயாயிரம் பேரை கொல்ல இஸ்ரேல் முயற்சி செய்துள்ளது. நாம் நாலாயிரம் பேஜர்களையும் ஆயிரம் வோக்கிடோக்கிகளையும் வழங்கியிருந்தோம். இறைவனின் உதவியினால் பெரும்பாலானவர்கள் மரணத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் எங்கள் சிவப்பு கோட்டை மீறிவிட்டது. பழிவாங்கியே தீருவோம்’ என்றுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் இவ்வெடிப்பு சம்பவங்கள் குறித்தோ, தம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இஸ்ரேலிய செய்தி இணையதளமான ‘வால்லா’, இவ்வார தொடக்கத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உளவுத்துறை தலைவர்களுடனான பாதுகாப்பு ஆலோசனையின் போது லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்புசாதனங்கள் அல்லது பேஜர்கள் வெடிப்பதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்துள்ளது.
பெயரிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, லெபனானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாகவும் அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், போர் புதிய கட்டத்திற்குள் வடக்கு இஸ்ரேலில் அதாவது இஸ்ரேல்- லெபனான் எல்லையில் பிரவேசிக்கிறது என்றுள்ளார். இதேவேளை இஸ்ரேலிய இராணுவம், காஸா மீதான போரில் ஈடுப டுத்தப்பட்டிருந்த இஸ்ரேலின் 98வது எலைட் படையினரை லெபனான் எல்லைக்கு நகர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வெடிப்பு சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களாவர். காஸா மீது முன்னெடுக்கும் யுத்தத்தை நிறுத்தக்கோரி கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாஹ்வும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதோடு, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லாஹ் மோதலை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி அமொஷ் கொச்செஸ்ரின் முன்னெடுத்து வருகிறார். ‘காஸா மீதான யுத்தத்தை நிறுத்தினால் நாங்களும் தாக்குதல்களை நிறுத்தி விடுவோம்’ என்கிறது ஹிஸ்புல்லாஹ்.
பேஜருக்கு மாறக் காரணம்:
ஆனால் கடந்த சில மாதங்களாக ஹிஸ்புல்லாஹ்வின் முக்கியஸ்தர்கள் இஸ்ரேலின் துல்லிய தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டு வருகின்றனர். இது ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா, அன்ரொய்ட் கையடக்கத் தொலைபேசிகளின் வட்ஸ்அப் ஜியோ லொக்கேசனைப் பயன்படுத்தியே இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதாகத் தெரிகிறது. அதனால் அதன் பாவனையைத் தவிர்க்குமாறு சில மாதங்களுக்கு முன்னர் தம் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதோடு, புதிய தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு செல்லவும் நடவடிக்கை எடுத்தார்.
இதே சூழலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெசஸஸ்கியானின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு வடக்கு தெஹ்ரானிலுள்ள இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த சமயம், அவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் கடந்த ஜுலை 31 இல் கொல்லப்பட்டனர்.
கடும் பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்ட ஈரானில் இப்படுகொலை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்று உலகம் அதிர்ச்சியடைந்திருந்த சூழலில், கையடக்கத் தொலைபேசியின் ஜியோ லொக்கேஷனைப் பயன்படுத்தி அத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. ஈரான் பல கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுத்தது.
இந்நிலையில் ஹனியேவின் மகன் அப்துல் சலாம் தனது தந்தை படுகொலை இடம்பெற்று சில வாரங்கள் கடந்த பின்னர் ‘அல் அரபியா’வுக்கு அளித்திருந்த பேட்டியில், தந்தையின் உடம்பின் மார்புக்கு மேற்பகுதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அவரது கையடக்க தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வழிகாட்டப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் அன்ரொய்ட் கையடக்கத் தொலைபேசிப் பாவனையில் இருந்து வெளியேறத் தீர்மானித்த ஹிஸ்புல்லாஹ் பேஜர் பாவனைக்கு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கேற்ப ஐயாயிரம் ஏ.ஆர்-924 மொடல் பேஜர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பேஜரானது ஒரு தடவை சார்ஜ் பண்ணினால் சுமார் 85 நாட்கள் செயற்பாட்டில் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேஜர்கள் 5 மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும் கடந்த ஒரு மாதத்திற்குள்தான் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த தினத்தன்று இப்பேஜரில் திடீரென ஒரு வித்தியாசமான ஒலி வெளிப்பட்டதும் அதனை கையிலெடுத்தபோதும், அதில் குறுஞ்செய்தி வந்ததாகப் பார்த்த சமயமுமே இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இவை ஏன் வெடித்துத் சிதறின என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளன. இந்நிலையில் பிரித்தானியாவின் இராணுவ ஆயுதங்கள் தொடர்பான முன்னாள் நிபுணர் ஒருவர் பி.பி.சியிடம் குறிப்பிடும் போது, ‘இச்சாதனங்கள் ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 கிராம் வரை அதிசக்திமிக்க வெடிமருந்துகள் நிரப்பி, போலி மின் சாதனக்கூறுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அது ஒரு alphanumeric குறுஞ்செய்தியை சமிக்ஞையாக பயன்படுத்தி வெடிக்கச் செய்திருக்கலாம் என்றுள்ளார்.
இதேவேளை மேற்குலக புலனாய்வுத் தரப்பினர் ‘த நஷனலு’க்கு வழங்கியுள்ள தகவல்களில், இந்த பேஜர்களில் இரண்டு முதல் 20 கிராம் வரை வெடிக்கும் பொருள் எந்தவொரு கண்டுபிடிக்கும் உபகரணத்திலும் பதிவாகாதபடி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இது மிகவும் எரியக்கூடிய PETN (Pentaerythritol tetranitrate) ஆக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இச்செயலை இஸ்ரேலின் மொசாட்தான் பெரும்பாலும் செய்திருக்கும் என்ற கருத்து பரவலாக நிலவும் சூழலில், நியூயோர்க் ரைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் ஹிஸ்புல்லாஹ் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை மாற்றப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட மொசாட் உளவுப் பிரிவினர் இதில் ஊடுருவி இருக்கலாமென என்றுள்ளன.
பேஜர் உற்பத்தி நிறுவனத்தின் மறுப்பு:
இந்நிலையில் குறித்த வகை பேஜரை உற்பத்தி செய்ததாகக் கருதப்படும் தாய்வானின் கோல்ட் அப்பலோ நிறுவனம், லெபனானில் வெடித்த ஏ.ஆர்-924 மொடல் பேஜர்களை தாம் தயாரிக்கவில்லை என மறுத்துள்ளது. குறிப்பிட்ட பிராந்தியங்களில் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எங்கள் வர்த்தக நாமத்தைப் பயன்படுத்த ஹங்கெரியின் பி.ஏ.சி நிறுவனத்திற்கு நாம் அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இத்தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முழுவதுமாக பி.ஏ.சி நிறுவனத்தினால் கையாளப்படுகிறது என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் Hsu Cheng Quang தெரிவித்துள்ளார்.
தாய்வானின் பொருளாதார விவகார அமைச்சின் தரவுகளின்படி, கோல்ட் அப்பல்லோ நிறுவனம் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேஜர்களை அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் 2022 முதல் 2024 ஓகஸ்ட் வரை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் லெபனானுக்கு பேஜர்களை அனுப்பியதற்கான எந்தப் பதிவும் தைபேயிடம் இல்லை என்றுள்ளது. தாய்வான் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை ஹங்கேரி நிறுவனமும் லெபனானில் வெடித்த பேஜர்கள் தாம் உற்பத்தி செய்தவை அல்ல என்றுள்ளது.
இதேவேளை லெபனான், சிரியாவில் வெடித்த வாக்கிடோக்கிகளின் உற்பத்தி நிறுவனமாகக் கருதப்படும் ஜப்பான் நாட்டின் ஐகொம் விடுத்துள்ள அறிக்கையில், லெபனானில் வெடித்து சிதறிய ஐ.சி-எ 82 வோக்கிடோக்கி மாதிரிகளைத் தயாரிப்பதை பத்து வருடங்களுக்கு முன்பே நாம் நிறுத்திவிட்டோம். தற்போது லெபனானில் வெடித்திருப்பவை எங்கள் நிறுவனத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றுள்ளது. ஆன போதிலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.
இவை இவ்வாறிருக்க, லெபனானின் வெடிப்பு சம்பவங்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றுள்ளது அமெரிக்கா. இத்தாக்குதலை ரஷ்யா, பிரான்ஸ், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரெஸ், சிவிலியன் பொருட்களை ஆயுதமாக்கக் கூடாது. லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் பயன்படுத்தும் சாதனங்கள் குறிவைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை ஆயுதம் பயன்படுத்தலாகாது’ என்றுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் பேஜர், வோக்கிடோக்கி உள்ளிட்ட வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு லெபனான் உள்ளிட்ட நாடுகளது மக்கள் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் தகவல் தொடர்பாடல் சாதனம் ஒரு போரியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
மர்லின் மரிக்கார்